இந்திய அணியில் மீண்டும் சவுரவ் கங்குலி?

236
Getty Image

மூன்று மாதங்கள் ரஞ்சிக் கிண்ணத்தில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் ஆக்ரோஷமான தலைவராகவும் தலை சிறந்த தலைவர்களில் ஒருவராகவும் விளங்கியவர் அந்த அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவருமான சவுரவ் கங்குலி.  

இந்திய வீரர்களுக்கு டுபாயில் பயிற்சி

2000களில் இந்திய அணி மிகப்பெரிய சரிவை சந்தித்து கொண்டிருந்தபோது அணியின் தலைவராகப் பொறுப்பேற்று, 2003ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் இறுதிப்போட்டி வரை இந்திய அணியை எடுத்துச் சென்றவர் கங்குலி

இவரது தலைமையில் பல இளம் வீரர்களை உருவாக்கி, 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்தை டோனி தலைமையில் இந்திய அணி வெல்வதற்கு வித்திட்டார். அந்த அளவிற்கு இந்திய அணி சிறந்த அணியாக உருவாவதற்கு மிகப் பெரிய பங்களிப்பினை கங்குலி வழங்கியுள்ளார்.

இந்திய அணியின் பயிற்சியாளராக கிரேக் சப்பல் பொறுப்பேற்ற பிறகு இவரது கிரிக்கெட் வாழ்க்கை இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. பிறகு இந்திய அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார்

ராகுல் டிராவிட் மற்றும் அனில் கும்பளே ஆகியோர் தலைமையில் இந்திய அணி சற்று சரிவை சந்தித்து கொண்டிருந்த நிலையில் தலைவர் பொறுப்பை ஏற்ற டோனி மீண்டும் வெற்றிப் பாதைக்கு அணியை கொண்டு சென்றார்

டோனி தலைமையில் சவுரவ் கங்குலியும் ஒருசில போட்டிகளில் விளையாடி உள்ளார். 2008ஆம் ஆண்டு நாக்பூர் மைதானத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக  நடைபெற்ற டெஸ்ட் போட்டிக்கு பிறகு தனது ஓய்வு முடிவினை கங்குலி அறிவித்தார். இந்தப் போட்டியில் கடைசி சில ஓவர்களில் தலைவர் பொறுப்பை கங்குலியிடம் ஒப்படைத்து விட்டு டோனி வெளியில் சென்று அமர்ந்துகொண்டார். 

எனினும், 2011ஆம் ஆண்டு அனைத்து வகைக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் அவர் ஓய்வு பெற்றார்

இந்நிலையில் தற்போதும் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தால் மூன்று மாத பயிற்சிக்கு பிறகு மிகவும் சிறப்பாக களமிறங்க காத்திருக்கிறேன் என கங்குலி மனம் திறந்துள்ளார்

இதுகுறித்து பங்களாதேஷ்  பத்திரிகை ஒன்றுக்கு கங்குலி அளித்த பேட்டியில் கூறுகையில்

”நான் ஒருநாள் போட்டிகளில் மேலும் இரண்டு தொடர்களில் விளையாட நினைத்தேன். அதேபோல் டெஸ்ட் போட்டிகளிலும் இன்னும் இரண்டு தொடர்களில் விளையாடி இருந்தால், இன்னும் அதிக ஓட்டங்களைக் குவித்து இருப்பேன்

நாக்பூர் போட்டியில் ஓய்வு பெறாமல் இன்னும் இரண்டு தொடர்களில் விளையாட நினைத்தேன். ஆனால் சூழல் அதற்கேற்றவாறு அமையவில்லை

கங்குலியை தேற்றிய இலங்கை வீரர்கள்: சங்கக்கார வெளியிட்ட இரகசியம்

உண்மையிலேயே, தற்போது எனக்கு ஆறு மாதம் பயிற்சி கொடுக்கப்பட்டால், அதன்பின் மூன்று ரஞ்சி போட்டிகளில் விளையாடி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக என்னால் ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆறு மாதம் கூட வேண்டாம். மூன்று மாதங்கள் கொடுத்தால் போதும். அப்போது கூட ஓட்டங்களை எடுப்பேன்.

நீங்கள் வாய்ப்புகள் கொடுக்காமல் போகலாம், ஆனால் எனக்குள் இருக்கும் நம்பிக்கையை எப்படி உடைக்க முடியும்?” என்றார்.

மேலும், 2007-08 காலப்பகுதியில் சிறப்பாக ஓட்டங்களைக் குவித்த போதிலும், அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு கங்குலி பதிலளிக்கையில்,  

”அதை என்னால் நம்பமுடியவில்லை. அந்த வருடத்தில் நான் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்த போதிலும் அணியிலிருந்து நீக்கப்பட்டேன். நன்றாக விளையாடிய போதிலும் நீக்கப்பட்டால், மீண்டும் எனது திறமையை எப்படி நிரூபிப்பது, யாரிடம் நிரூபிப்பது, என்ற விடயம் எனக்கும் நிகழ்ந்து கொண்டே இருந்தது” என்றார்.

இந்திய அணிக்காக 113 டெஸ்ட் போட்டிகளில் 7212 ஓட்டங்களையும், 311 ஒருநாள் போட்டிகளில் 11,363 ஓட்டங்களையும் கங்குலி குவித்துள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<