கங்குலியை தேற்றிய இலங்கை வீரர்கள்: சங்கக்கார வெளியிட்ட இரகசியம்

7658

இலங்கையில் கடந்த 2002இல் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியின் போது இலங்கை அணியின் உடைமாற்றும் அறைக்குச் சென்று பேசிய இந்திய அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி குறித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தன்னுடைய நினைவுகளை 18 வருடங்களுக்குப் பிறகு பகிர்ந்து கொண்டுள்ளார்.  

கடந்த 2002இல் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி மழை காரணமாக தடைப்பட்டதால் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் சம்பியன் பட்டம் இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.  

இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் அப்போதைய தலைவர் சௌரவ் கங்குலிக்கும் இலங்கை வீரர் ரசல் ஆர்னல்ட்டிற்கு மோதல் ஏற்பட்டது. 

அந்தப் போட்டியில் ரஸல் ஆடுகளத்தின் நடுவில் அடிக்கடி ஓடியதை சுட்டிக்காட்டிய கங்குலி, ஒரு கட்டத்தில் கோபமடைய இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து கள நடுவர்கள் தலையிட்டு அவர்களை விலக்கினர். இதனால் அந்தப் போட்டி மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது

அதைத்தொடர்ந்து இலங்கை அணியினரின் உடைமாற்றும் அறைக்குச் சென்ற சௌரவ் கங்குலி, அங்கிருந்த சங்கக்கார உள்ளிட்ட வீரர்களுடன் வருத்தத்துடன் பேசியதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குமார் சங்கக்கார  தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் குமார் சங்கக்கார கருத்து தெரிவிக்கையில்,  

”போட்டியின் பிறகு இலங்கை அணியினரின் உடைமாற்றும் அறைக்கு வந்த சௌரவ் கங்குலி, ரஸல் ஆர்னல்ட்டுடன் களத்தில் ஏற்பட்ட சம்பவத்திற்காக தான் இடைநீக்கம் செய்யப்படலாம் என்று வருத்தம் தெரிவித்தார்”

“சிறந்த வீரர்களை அணிக்கு விட்டுச்செல்லாதவர் டோனி” – கம்பீர்

எனினும், நீங்கள் அதுபற்றி கவலைப்பட வேண்டாம் என்று இலங்கை அணி வீரர்கள் தேற்றியதாகவும், இதை பெரிய நிகழ்வாக்க மாட்டோம் என்றும், எல்லாம் சரியாகிவிடும் என்று உறுதியளித்ததாகவும் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்

இதேவேளை, உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு சௌரவ் கங்குலி இந்திய அணியை வளர்த்தெடுத்தார் என தெரிவித்த சங்கக்கார, கங்குலியின் நோக்கத்தை டோனி நிறைவேற்றினார் என்று குறித்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார். இதுதொடர்பில் பேசிய அவர்,

“இந்திய அணி இன்று இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் அதற்கு முதன்மையான காரணம் சௌரவ் கங்குலி தான். டோனி தலைசிறந்த தலைவர் தான். இந்திய அணி உலகக் கிண்ணங்களைக் குவிக்க காரணம் அவர்தான். ஆனால், இதற்கெல்லாம் அத்திவாரமாக இருந்தவர் கங்குலி தான் என்பது என்னுடைய கருத்து” என்று அவர் தெரிவித்தார்.

குறித்த நிகழ்ச்சியில் தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் தலைவர் கிரேம் ஸ்மித், இந்திய அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கவுதம் காம்பீர் உள்ளிட்ட வீரர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க