துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்த செல்சி முன்னாள் வீரர்

108
Tata Group bags title rights of WPL

நிலநடுக்கத்தின்போது கானா நாட்டைச் சார்ந்த பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் உலகெங்கிலும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப் பகுதிகளில் கடந்த பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகி இருந்தது. ஒரே நாளில் மூன்று முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இரண்டு நாடுகளும் உருக்குலைந்து போயின. இதுவரை 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதுடன், பல்லாயிரக்கணக்கானோர் பலத்த காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு மூன்று வாரங்களுக்குப் பிறகு கானா நாட்டு கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு, அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு இடிபாடுகளுக்கு அடியில் உயிரிழந்ததை அவரது முகாமையாளர் முராத் உஸுன்மெஹ்மெத் உறுதிப்படுத்தியுள்ளார்.

கானா தேசிய வீரரான 31 வயதுடைய கிறிஸ்டியன் அட்சு, 2013 முதல் இங்கிலாந்து பிரீமியர் லீக் அணிகளான எவர்டன், செல்சி மற்றும் நியூகாஸல் யுனைடெட் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். 2021இல் நியூகாஸல் யுனைடெட் கழகத்துக்காக ஆடிய அவர், சவூதி அரேபிய அணியான அல்-ரயிட் கழகத்துடனான ஒரு பருவத்தின் பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துருக்கி லீக் தொடரில் ஹடாய்ஸ்போர் கழகத்தில் இணைந்தார்.

இதனிடையே கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற துருக்கி சுபர் லீக்கில் கசிப்பசா கழகத்துக்கு எதிரான போட்டியில் கிறிஸ்டியன் அட்சு வெற்றி கோலை அடித்தார். எவ்வாறாயினும், போட்டிக்கு அடுத்த நாள் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தெற்கு துருக்கியில் இருந்து அவர் புறப்பட்டுச் செல்ல திட்டமிடப்பட்டிருந்த போதிலும், துரதிஷ்டவசமாக துருக்கி நிலக்கடுத்தில் சிக்கி காணாமல் போனார்.

கடந்த 7ஆம் திகதி அவர் மீட்கப்பட்டார் என முன்னர் செய்தி வெளியாகியிருந்தது. எனினும் அச்செய்தி பொய்யானது என பின்னர் தெரிய வந்தது. எனினும், துருக்கியின் ஹாட்டே மாகாணத்தில் பூகம்ப இடிபாடுகளிலிருந்து கிறிஸ்டியன் அட்சுவின் சடலம் மீட்கப்பட்டது என அவரின் முகாமையாளர் முராத் உஸுன்மெஹ் உறுத்திப்படுத்தினார்.

கிறிஸ்டியன் அட்சுவின் உயிரிழப்பு கால்பந்து ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்ததுடன், அவரது மரணத்துக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, கிறிஸ்டியன் அட்சுவின் உடல் விமானம் மூலம் கானாவுக்கு கொண்டு வரப்பட்டதுடன், அவரது இறுதிக் கிரியைகள் அரச மரியாதையுடன் நடைபெற்றன.

கானா அணிக்காக 65 போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ்டியன் அட்சு, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஆபிரிக்க கிண்ண கால்பந்து தொடரில், அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற மிக முக்கிய வீரராக இருந்தார். ஆனாலும், கானா அணி, ஐவரி கோஸ்டிடம் பெனால்டி சூட் அவுட்டில் தோற்றாலும், போட்டியின் சிறந்த வீரராக கிறிஸ்டியன் அட்சு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதேவேளை, துருக்கி நாட்டு கால்பந்து வீரர் அஹ்மெத் ஐயூப் துர்கஸ்லானும் இந்த பூகம்பத்தினால் உயிரிழந்த நிலையில் ஏற்கெனவே சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<