44ஆவது தேசிய நகர்வல ஓட்டப் போட்டிகள் பெப்ரவரியில்

118

விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறைத் திணைக்களம் இவ்வருடம் ஏற்பாடு செய்துள்ள 44 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் முதலாவது நிகழ்ச்சியான நகர்வல ஓட்டப் போட்டி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி நுவரெலியாவின் கொல்ப் (Golf) மைதானத்தில் நடைபெறவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த வருடமும் நுவரெலியாவில் நடைபெற்ற இப்போட்டித் தொடரின் ஆண்கள் பிரிவில் நான்காவது தொடர்ச்சியான மற்றும் ஐந்தாவது ஒட்டுமொத்த சம்பியனாக லயனல் சமரஜீவ தெரிவானதுடன், அவர் குறித்த போட்டியை 33 நிமிடங்களில் ஓடி முடித்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதேநேரம், பெண்கள் பிரிவில் 800 மற்றும் 1500 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் நடப்புச் சம்பியனான தென் மாகாணத்தைச் சேர்ந்த கயந்திகா அபேரத்ன, கடந்த வருடம் நடைபெற்ற நகர்வல ஓட்டப் போட்டியில் முதற்தடவையாக பங்குபற்றி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதில், 2016 றியோ ஒலிம்பிக் மரதன் ஓட்டப்போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கிய நிலூகா கீதானி ராஜசேகரவை பின்தள்ளி 38 செக்கன்களில் போட்டித்தூரத்தைக் கடந்து அவர் தங்கப்பதக்கம் வென்றார்.

இதேவேளை, பெண்கள் பிரிவில் இம்முறை போட்டித் தொடரில் சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த நிலானி ஆரியதாஸ, ஊவா மாகாணத்தைச் சேர்ந்த அனூஷா லமாஹேவா மற்றும் ஒலிம்பிக்கில் பங்குபற்றிய நிலூகா ராஜசேகர உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய மட்ட வீரர்களுக்கு விளையாட்டு அமைச்சினால் கொடுப்பனவு மழை

வழமையாக ஆண்களுக்கான நகர்வல ஓட்டப் போட்டி 12 கிலோ மீற்றர் தூரத்தையும், பெண்களுக்கான நகர்வல ஓட்டப் போட்டி 8 கிலோ மீற்றர் தூரத்தையும் கொண்டதாக நடத்தப்பட்டுவந்தது. ஆனால் கடந்த வருடத்திலிருந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரண்டு போட்டிகளும் 10 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்டதாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, இம்முறை போட்டிகளில் வடக்கு, கிழக்கு உட்பட 9 மாகாணங்களையும் சேர்ந்த வீர, வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இம்முறை போட்டித் தொடரில் திறமைகளை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய நகர்வல ஓட்டப் போட்டியிலும், அதனைத் தொடர்ந்து மார்ச் 25 ஆம் திகதி பூட்டானில் நடைபெறவுள்ள தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டியிலும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.