ஆசிய பதக்கத்தை தவறவிட்ட கயன்திகா

Asian Games 2022

267

சீனாவின் ஹாங்சுவில் நடைபெற்றுவரும் 19ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை வீராங்கனை கயன்திகா அபேரட்ன நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். 

போட்டியை அவர் 4 நிமிடங்கள் 18.77 செக்கன்களில் நிறைவுசெய்தாலும், 3.20 செக்கன்களால் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார் 

பஹ்ரைனின் வின்பிரெட் யாவி 4 நிமிடங்கள் 11.65 செக்கன்களில் இந்தப் போட்டியை நிறைவு செய்து தங்கப் பதக்கத்தையும், இந்தியாவின் ஹார்மிலான் பைன்ஸ் 4 நிமிடங்கள் 12.74 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்தனர். 

இதனிடையே, இலங்கை வீராங்கனை கயந்திகா அபேரட்னவை 3.20 செக்கன்களில் (4 நிமிடங்கள் 15.97 செக்.) முந்திய பஹ்ரைன் வீராங்கனை மார்தா ஹிர்பதோ யோதா இங்கு வெண்கலப் பதக்கத்தை வென்றார். 

பெண்களுக்கான 1500 மீட்டர் போட்டியில் 17 வீராங்கனைகள் பங்குபற்றியிருந்ததுடன் 36 வயதான கயந்திகா, இம்முறை ஆசிய விளையாட்டு விழா இலங்கை அணியின் தலைவரும் ஆவார். இதற்கு முன்னர் நடைபெற்ற 2014 மற்றும் 2018 ஆகிய இரண்டு ஆசிய விளையாட்டு விழாக்களிலும் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய அனுபவத்தையும் அவர் பெற்றுக்கொண்டுள்ளார் 

இருப்பினும், இறுதியாக கடந்த ஜுலை மாதம் தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய சம்பியன்ஷிப் போட்டியில் 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் கயன்திகா அபேரட்ன வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார். அதேபோல, ஆசிய விளையாட்டு விழாவிற்கு தயாராகும் நோக்கில் கடந்த செப்டம்பரில் ஹங்கேரியில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதை அவர் புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.      

எவ்வாறாயினும், இன்று நடைபெற்ற பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை கயந்திகா தவறவிட்ட போதிலும், நாளை மறுதினம் (03) நடைபெறவுள்ள பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் களமிறங்கவுள்ளார் 

இதனிடையே, இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் தகுதிகாண் போட்டியில் பங்குகொண்ட இலங்கை வீராங்கனையான ருமேஷிகா ரத்நாயக்க, போட்டியை 24.51 செக்கன்களில் நிறைவு செய்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்எவ்வாறாயினும், ஒட்டுமொத்த வீரங்கனைகளான 15 பேரில் 11ஆவது இடத்தைப் பிடித்த அவர், இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.    

இம்முறை ஆசிய விளையாட்டு விழாவின் 9ஆவது நாள் நிறைவடையும் போது இலங்கை ஒரேயொரு வெள்ளிப் பதக்கத்துடன் பதக்கப் பட்டியலில் 29ஆவது இடத்தில் உள்ளது.    

இதற்கிடையில், போட்டியை நடத்தும் சீனா 129 தங்கப் பதக்கங்கள், 71 வெள்ளிப் பதக்கங்கள், 239 வெண்கலப் பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 13 தங்கப் பதக்கங்கள், 19 வெள்ளிப் பதக்கங்கள், 18 வெண்கலப் பதக்கங்களுடன் (மொத்தம் 50) அண்டைய நாடான இந்தியா நான்காவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<