லெஜண்ட்ஸ் தொடரில் விளையாடவுள்ள முரளி, கங்குலி, மோர்கன்!

Legends League Cricket 2022

135

இந்தியாவில் அடுத்தமாதம் நடைபெறவுள்ள லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் சௌரவ் கங்குலி, இலங்கையின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் ஆகியோர் விளையாடவுள்ளனர்.

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 17ம் திகதி முதல் ஒக்டோபர் 8ம் திகதிவரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. போட்டிகள் அனைத்தும் கட்டாக், கொல்கத்தா, லக்னோவ், டெல்லி மற்றும் ஜோத்பூர் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.

சந்தகனின் போராட்டத்தினை தாண்டி இறுதிப் போட்டியில் தமிழ் யூனியன்

இந்தப்போட்டித்தொடருக்கான அணிகளில் சர்வதேசத்தின் முன்னாள் வீரர்கள் 53 பேர் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் முகாமைத்துவம் அறிவித்துள்ளது.

குறித்த இந்த வீரர்களில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், தற்போதைய இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் சௌரவ் கங்குலி உட்பட, கடந்த மாதம் ஓய்வை அறிவித்திருந்த இங்கிலாந்து வீரர் இயன் மோர்கன், வீரர் மிஷ்பா உல்-ஹக், வீரேந்திர செவாக், ஜொண்டி ரொட்ஸ், மிச்சல் ஜோன்ஸன், பிரெட் லீ, ஷேன் வொட்சன், ரொஸ் டெய்லர் மற்றும் டேல் ஸ்டெய்ன் ஆகியோரும் இடம்பெறவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம்,பாகிஸ்தான் முன்னாள் வீரர்களை பொருத்தவரை, இந்திய அரசாங்கத்தின் அனுமதி கிடைத்தவுடன் விளையாட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தொடரின் முதல் பருவகால போட்டிகள் இவ்வருட ஆரம்பத்தில் ஓமானின் மஸ்கட்டில் நடைபெற்றது. இந்த போட்டித்தொடரில் இந்தியா மஹாராஜாஸ், வேர்ல்ட் ஜயண்ட்ஸ் மற்றும் ஆசிய லையன்ஸ் அணிகள் விளையாடியிருந்தன. இதில் டெரன் சமி தலைமையிலான வேர்ல்ட் ஜயண்ட்ஸ் அணியினர் சம்பியனாக முடிசூடியிருந்தனர்.

இம்முறை நடைபெறவுள்ள லெஜண்ட்ஸ் தொடரின் தூதுவர்களாக இந்திய மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனையான ஜுலான் கோஸ்வாமி மற்றும் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் செயற்படவுள்ளதுடன், தொடர் ஆணையாளராக ரவி சாஷ்திரி மற்றும் உயர் கவுன்சில் உறுப்பினராக வசீம் அக்ரம் செயற்படவுள்ளார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<