2020இல் இலங்கையில் இடம்பெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா

231

தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தினால் 2 வருடங்களுக்கு ஒரு முறை நடாத்தப்படுகின்ற தெற்காசிய விளையாட்டு விழாவை எதிர்வரும் 2020ஆம் ஆண்டு இலங்கையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அடுத்த வருடத்துக்கான வரவுசெலவுத் திட்டத்தை பாராளுமனத்தில் முன்வைத்த போது நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் அறிவிக்கப்பட்டது.

2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நீலப் பசுமை எனும் தொனிப்பொருளில் பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த 9ஆம் திகதி சமர்பிக்கப்பட்டது.

ஜோன் டார்பட் மெய்வல்லுனர் தொடரில் அபேசேகர, சதுனி சிறந்த வீரர்களாக முடிசூடல்

இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெற்றுவருகின்ற …

இதில் விளையாட்டுத்துறைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் உரையாற்றிய நிதி அமைச்சர், 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவை இலங்கையில் நடத்துவதற்கு கிடைத்தமை இந்நாட்டுக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவமாகும். இவ்விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு தியகம சர்வதேச விளையாட்டு தொகுதியை அபிவிருத்தி செய்வதற்காக 1500 மில்லியன் ரூபா பணத்தை அடுத்த வருடத்துக்கான வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.

இதன்படி அனைத்து வசதிகளையும் கொண்ட விளையாட்டு தொகுதி, விளையாட்டு வீரர்களுக்கு தங்குமிட வசதிகள் உள்ளிட்ட சகல வசதிகளையும் கொண்ட பயிற்சிக்கூடமொன்றை நிர்மானிப்பதற்கும் இதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எனவே தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்ற தியகம மைதானத்தின் செயற்கை ஓடுபாதை மற்றும் உள்ளக அரங்கிற்கான நிர்மானப் பணிகள் அடுத்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கடவுள்ளன.

இந்நிலையில், 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழா, கடந்த வருடம் இந்தியாவின் குவஹாத்தியில் நடைபெற்றதுடன், அடுத்த விளையாட்டுப் போட்டிகளை நடாத்தும் வாய்ப்பு நேபாளத்துக்கு வழங்கப்பட்டது.

எனினும், குறித்த போட்டித் தொடர் அடுத்த வருடம் நடைபெறவிருந்தாலும், நேபாள அரசு அதற்கான நிதியினை ஒதுக்குவதற்கு முன்வராமை, அந்நாட்டு ஒலிம்பிக் சங்கத்தில் நிலவிய முரண்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் போட்டிகளை நடாத்தும் சந்தர்ப்பத்தை இலங்கைக்கு வழங்குவதற்கு தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனம் நடவடிக்கை எடுத்தது. இதன்படி தேசிய ஒலிம்பிக் சம்மேளனத்தினால், விளையாட்டுத்துறை அமைச்சுக்கு இதுதொடர்பில் அறிவிக்கப்பட்டதுடன், இதுதொடர்பில் விசேட பேச்சுவார்த்தையொன்று கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்றது. எனவே இலங்கை அரசும் அதற்கான சம்மதத்தை வழங்கியுள்ளமை இம்முறை வரவுசெலவு திட்ட உரையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

லீக் சுற்றின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் வீழ்ந்த இலங்கை இளையோர் அணி

மலேஷியாவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ண தொடரில் பாகிஸ்தானுடனான…

விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் தேசிய ஒலிம்பிக் சம்மேளனம் என்பவற்றுக்கு இடையிலான குறித்த பேச்சுவார்த்தையடுத்து விசேட அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்கவும் விளையாட்டுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்தார்.  

இவ்விளையாட்டு விழா முன்னதாக 1991ஆம் மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் கொழும்பில் நடைபெற்றது. இதன்படி, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு 13ஆவது தடவையாக நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் வரவேற்பு நாடான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவுகள், நேபாளம், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தியகம விளையாட்டு மைதானத்தைப் போல சுகததாஸ மைதானத்தின் அபிவிருத்திக்கும் இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் சுகததாஸ உள்ளக அரங்கை அபிவிருத்தி செய்வதற்காக 100 மில்லியன் ரூபா பணமும், சுகததாஸ மைதான அபிவிருத்திக்காக 1,200 மில்லியன் ரூபா பணமும் இம்முறை வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், தேசிய மட்டத்தில் திறமையான வீரர்களை உருவாக்கும் நோக்கில் மாவட்ட மற்றும் மாகாண விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கு இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, திகன, பொலன்னறுவை, கல்முனை சந்தாங்கேனி ஆகிய விளையாட்டு மைதானங்களை எதிர்வரும் 2 வருடங்களில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த காலங்களில் இந்நாட்டின் விளையாட்டு வீரர்கள் அதிகளவு வரி விதிக்கப்பட்டதன் காரணமாக சப்பாத்துக்களை வாங்குவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். இதனையடுத்து அந்த வீரர்களின் நலனைக் கருத்திற்கொண்டு உடன் அமுலுக்கு வரும் வகையில் விளையாட்டுப் போட்டிகளுக்காகப் பயன்படுத்தப்படும் சப்பாத்துக்கள் மீதான இறக்குமதி வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மிதுன்ராஜின் புதிய போட்டி சாதனையுடன் யாழ். ஹார்ட்லிக்கு 5 பதக்கங்கள்

அண்மைக்காலமாக தேசிய மற்றும் அகில இலங்கை பாடசாலை மட்டத்தில் மைதான நிகழ்ச்சிகளில் திறமைகளை…

2018 வரவுசெலவுத் திட்டத்தில் விளையாட்டுத்துறைக்கான நிதி ஒதுக்கீடுகள்

  • கிராமிய விளையாட்டு மைதான அபிவிருத்தி – 100 மில்லியன் ரூபா
  • இளையோர் மெய்வல்லுனர் குழாமை ஸ்தாபிக்கும் நோக்கில் மாவட்ட மற்றும் மாகாண விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை
  • மாத்தளை ஹொக்கி மைதான அபிவிருத்தி – 400 மில்லியன் ரூபா
  • 2020 தெற்காசிய விளையாட்டு விழாவை நடாத்தும் நோக்கில் தியகம விளையாட்டு தொகுதி அபிவிருத்தி – 1,500 மில்லியன் ரூபா
  • சுகததாஸ உள்ளக அரங்கு அபிவிருத்தி – 100 மில்லியன் ரூபா
  • சுகததாஸ சுவட்டு மைதான மற்றும் மைதான அபிவிருத்தி – 1,200 மில்லியன் ரூபா
  • ஊக்கமருந்து மற்றும் மதுபான ஆய்வுகூடம் – 25 மில்லியன் ரூபா
  • விளையாட்டுப் போட்டிகளுக்காகப் பயன்படுத்தப்படும் சப்பாத்துக்கள் மீதான இறக்குமதி வரி நீக்கம்
  • சிரேஷ்ட வீரர்களுக்கான ஆசிய மெய்வல்லுனர் போட்டித் தொடர், பரா மற்றும் விசேட தேவைகளையுடைய வீரர்களுக்காக உதவிகளை வழங்குவதற்கும் தீர்மானம் – 50 மில்லியன் ரூபா