பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் போட்டி நடுவர் மரணம்

182

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் முன்னாள் நடுவரும், முன்னாள் முதற்தர கிரிக்கெட் வீரருமான பாகிஸ்தானின் அசாட் ரவூப் இதய செயலிழப்பு (Cardiac Arrest) காரணமாக தன்னுடைய 66ஆவது வயதில் மரணமடைந்திருக்கின்றார்.

>> தென்னாபிரிக்க பயிற்சிவிப்பாளர் பதவியிலிருந்து விலகவுள்ள மார்க் பௌச்சர்

மொத்தமாக 64 டெஸ்ட், 139 ஒருநாள் மற்றும் 28 T20i போட்டிகளில் நடுவராக பணியாற்றியிருக்கும் அசாட் ரவூப், சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் முன்னணி நடுவர் குழாத்தில் (Elite Panel) அங்கத்துவம் பெற்றிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2000ஆம் ஆண்டு தனது கன்னி ஒருநாள் போட்டியில் நடுவராக அறிமுகம் பெற்ற அசாட் ரவூப் போட்டி நடுவராக மாற முன்னர் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரராக முதல்தரப் போட்டிகளில் ஆடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன்படி 71 முதல்தரப் போட்டிகளில் ஆடி 3,000 இற்கும் அதிகமான ஓட்டங்களை குவித்திருக்கின்றார்.

அசாட் ரவூபின் எதிர்பாராத மரணம் பாகிஸ்தானின் கிரிக்கெட் வட்டாரத்திற்கு மிகப் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (PCB) தலைவரான ரமீஸ் ராஜா, ரவூபின் மரணத்திற்கு தனது இரங்கலை வெளியிட்டிருக்கின்றார்.

>> யாழ். மாவட்ட கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக சுரேஸ் மோகன் நியமனம்!

பாகிஸ்தானைச் சேர்ந்த ஏனைய போட்டி நடுவர்களில் ஒருவரான அலீம் தாரினைப் போன்று கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக காணப்பட்ட சந்தர்ப்பங்களில் சிறந்த நடுவராக கருதப்பட்டிருந்த அசாட் ரவூப், IPL போட்டித் தொடர் பற்றிய சூதாட்ட சர்ச்சைகளுக்கும் முகம் கொடுத்திருந்ததோடு, 2016ஆம் ஆண்டில் தன்மீது குற்றம் எதுவும் இல்லை எனவும் வாதிட்டிருந்தார்.

இதேநேரம் அசாட் ரவூபின் மரணம் அவரது குடும்பத்தினருக்கும், கிரிக்கெட் இரசிகர்களுக்கும் இடையில் அதிர்ச்சியினையும், கவலையினையும் ஏற்படுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<