யாழ்ப்பாண மாவட்ட கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சுரேஸ் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்டத்தின் முன்னணி பயற்றுவிப்பாளர்களில் ஒருவரான சுரேஸ் மோகன், எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு யாழ். மாவட்ட கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
>> T20 உலகக்கிண்ணத்துக்கான மே.தீவுகள் குழாம் அறிவிப்பு
யாழ். மாவட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சுரேஸ் மோகன், இதற்கு முதல் நீண்ட காலமாக யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்ததுடன் அதனைத்தொடர்ந்து யாழ். இந்துக் கல்லூரியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்தார்.
இந்த புதிய நியமனத்தைத் தொடர்ந்து சுரேஸ் மோகன் தற்போது யாழ். இந்துக் கல்லூரியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில், அவரின் இடத்துக்கு இடைக்கால பயற்றுவிப்பாளராக யாழ். மத்தியக் கல்லூரியின் முன்னாள் வீரர் அலன் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய மாவட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சுரேஸ் மோகன் தன்னுடைய எதிர்கால திட்டங்கள் தொடர்பில் குறிப்பிடுகையில்,“யாழ். மாவட்ட பாடசாலை கிரிக்கெட் வீரர்களின் அடிப்படை திறன் மற்றும் அவர்களின் அபிவிருத்தியை பாடசாலை மற்றும் பாடசாலை பயற்றுவிப்பாளர்கள் மேம்படுத்துவர்.
குறிப்பிட்ட பாடசாலைகளில் உள்ள திறமையான வீரர்களை அடையாளம் காண்பதே என்னுடைய பணி. சிறந்த வீரர்கள் குழாம் ஒன்றை கண்டறிந்து அவர்களுடைய திறமையை மெழுகேற்றுவதுடன், தனித்தனி வீரர்களுக்கான பயிற்சிகளை நேரடியாக கொடுக்க எதிர்பார்க்கிறேன். இதன்மூலம் தனிநபர் திறமையை கண்டறியமுடியும் என்பதுடன், யாழ். மாவட்டத்தில் உள்ள சிறந்த வீரர்களை மாகாணம் மற்றும் தேசிய ரீதியில் கொண்டுசெல்வதே என்னுடைய இலக்காக உள்ளது” என்றார்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<