இலங்கை அணிக்காக சகலதுறையிலும் பிரகாசிக்கத் தயார் – சந்திமால்

1441
Image Courtesy - Sri Lanka Cricket

தன்னால் விக்கெட் காப்பைப் போன்று களத்தடுப்பில் ஈடுபட முடியும் என தெரிவித்த தினேஷ் சந்திமால், அந்தந்த நாடுகளில் உள்ள ஆடுகளங்களின் தன்மைக்கு அமைய தெரிவு செய்யப்படுகின்ற அணியைப் பொறுத்து எந்தவொரு இடத்திலும் விளையாடத் தயார் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்தார்.

எனினும், எந்தவொரு நாட்டில் விளையாடினாலும், அனைத்து போட்டித் தொடர்களும் இலங்கை அணிக்கு சவால் மிக்கதாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக நேற்று முன்தினம் (03) இரவு நியூசிலாந்து நோக்கி பயணமாகியது.

அங்கு செல்லும் இலங்கை அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் ஒரேயொரு டி-20 போட்டியில் விளையாடவுள்ளது. அதன் பிறகு, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுடனான போட்டித் தொடர்களிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது.

நியூசிலாந்து செல்லும் இலங்கை அணியில் முக்கிய மாற்றங்கள்

நியூசிலாந்து அணிக்கு எதிராக அடுத்த மாதம்….

இந்த நிலையில், நியூசிலாந்து செல்ல முன் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த மூன்று கிரிக்கெட் சுற்றுப்பயணங்களிலும் எமக்கு சாதகமான ஆடுகளங்கள் கிடைக்காது என்பதை நாம் நன்கு அறிவோம். அதுதான் நாம் சந்திக்கவுள்ள மிகப் பெரிய சவாலாகும். எனினும், அந்த சவாலுக்கு நாம் கட்டாயம் முகங்கொடுக்க வேண்டும். இந்த மூன்று தொடர்களிலும் எம்மால் மாற்றமொன்றை செய்ய முடியுமானால் அதுதான் எமது அணியின் எதிர்காலத்துக்கு மிகப் பெரிய சக்தியாக அமையவுள்ளதுடன், திருப்புமுனையாகவும் இருக்கும் என நம்புகிறேன் என்றார்.

அதே போன்று, இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் ஒருசில தவறுகளை விட்டோம். இதன் காரணமாகவே எமக்கு தோல்வியை சந்திக்க நேரிட்டது. எனினும், அந்த தவறுகளையெல்லாம் நிவர்த்தி செய்து கொண்டு நியூசிலாந்து அணியுடனான தொடரில் சிறப்பாக விளையாடவுள்ளோம். அத்துடன், ஒரு சகலதுறை வீரராக நான் விளையாடவுள்ளேன். எனக்கு விக்கெட் காப்பபைப் போல களத்தடுப்பிலும் ஈடுபட முடியும். எனவே நான் எந்த இடத்தில் விளையாட வேண்டும் என்பதை உடனே தீர்மானிக்க முடியாது. அந்தந்த நாடுகளில் உள்ள ஆடுகளங்களின் தன்மைக்கு அமைய தெரிவு செய்யப்படுகின்ற அணியைப் பொறுத்து எந்தவொரு இடத்திலும் விளையாடத் தயார் என அவர் கூறினார்.

இலங்கை அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்னவுக்கு, சுமார் ஒரு வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், தொடர் உபாதைகள் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளரான நுவன் பிரதீப் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

இது இவ்வாறிருக்க, லஹிரு திரிமான்ன மற்றும் நுவன் பிரதீப்பின் மீள்வருகை குறித்து சந்திமால் கருத்து வெளியிடுகையில்,

”உண்மையில் திரிமான்ன திறமையான துடுப்பாட்ட வீரர் என்பதை நாம் நன்கு அறிவோம். இறுதியாக நடைபெற்ற இலங்கை A மற்றும் இலங்கை பதினொருவர் அணிகளுக்காக விளையாடி துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்தார். எனவே திரிமான்னாவின் மீள்வருகையானது எமது துடுப்பாட்ட வரிசைக்கு பலத்தை கொடுக்கும்.

அத்துடன், வேகப்பந்துவீச்சாளர் நுவன் பிரதீப் அண்மைக்காலமாக தொடர் உபாதைகளுக்கு முகங்கொடுத்து வந்தார். தற்போது அவர் உபாதைகளிலிருந்து பூரண குணமடைந்து அணிக்குள் மீண்டும் திரும்பியுள்ளார்.

இலங்கை வளர்ந்து வரும் அணியை தலைமை தாங்கும் சரித் அசலங்க

வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான …

எனவே, இந்த இரண்டு வீரர்களின் மீள்வருகையானது எமக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளதுடன், அவர்களது அனுபவங்கள் இந்த மூன்று தொடர்களிலும் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமையும்” எனவும் அவர் தெரிவித்தார்.

இங்கிலாந்து அணியுடன் காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் சுழல் பந்துவீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணி தொடர்பாக நடுவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஆய்வுக்குள்ளான அவரது பந்துவீச்சுப் பாணி பரிசோதனையின் இறுதி அறிக்கை கிடைக்கும் வரையில் அவருக்கு டெஸ்ட் குழாமில் வாய்ப்பு வழங்காமல் இருக்க தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நிலையில், அகில் தனஞ்சய டெஸ்ட் அணியில் இடம்பெறாமை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு சந்திமால் கருத்து தெரிவிக்கையில்,

”அகில தனஞ்சய அணியில் இடம்பெறாமை மிகப் பெரிய இழப்பாகும். கடந்த ஒரு வருட காலப்பகுதியில் இடம்பெற்ற மூவகைப் போட்டிகளிலும் சுழல் பந்து வீச்சில் இலங்கை அணிக்காக பிரகாசித்த ஓரேயொரு பந்துவீச்சாளர் அவர்தான். எனினும், துரதிஷ்டவசமாக அவருடைய பந்துவீச்சுப் பாணி தொடர்பில் சந்தேகம் இருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டது. எனவே குறித்த பரிசோதனை அறிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதி வெளிவரவுள்ளது. அவருடைய குறைபாடுகளை நிவர்த்தி செய்து விரைவில் அணியுடன் இணைந்து கொள்வார்” என அவர் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, ஏதிர்வரும் 8 ஆம் திகதி நேப்பியரில் ஆரம்பமாவுள்ள மூன்று நாள் பயிற்சிப் போட்டியுடன் ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்து தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி வெலிங்டனில் ஆரம்பமாகவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<