பதவி துறந்த சில மணிநேரத்தில் டி20 குழாமில் இடம்பெற்ற பாப் டு ப்ளெசிஸ்

77

சுற்றுலா அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடருக்கான தென்னாபிரிக்க அணியின் 16 பேர் கொண்ட குழாம் இன்று (17) தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவர் லிண்டா ஷொண்டியினால் பெயரிடப்பட்டுள்ளது. 

தென்னாபிரிக்க அணி சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியுடன் மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி குறித்த தொடர் நேற்றுடன் (16) நிறைவுக்குவந்த நிலையில் தென்னாபிரிக்க அணி ஒருநாள் தொடரை சமப்படுத்திய நிலையில், டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச தொடர்களை இழந்தது. இந்நிலையில் தென்னாபிரிக்க அணி தங்களது அடுத்த இருதரப்பு தொடரில் அவுஸ்திரேலிய அணியுடன் தங்களது சொந்த மண்ணில் மோதவுள்ளது. 

தலைவர் பதவியிலிருந்து டு ப்ளெசிஸ் திடீர் விலகல்

தென்னாபிரிக்க அணியின் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கான…….

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி அங்கு தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இரு கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளது. தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் சர்வதேச தொடர்களில், முதல் தொடரான டி20 சர்வதேச தொடரில் பங்கேற்கும் தென்னாபிரிக்க குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள டி20 சர்வதேச குழாத்தின்படி தென்னாபிரிக்க டி20 அணியின் தலைவராக தொடர்ந்தும் செயற்படும் அடிப்படையில் விக்கெட் காப்பாளர் குயின்டன் டி கொக் பெயரிடப்பட்டுள்ளார். இதேவேளை கடந்த சில மாதங்களாக பாப் டு ப்ளெசிஸின் அணித்தலைமையில் தென்னாபிரிக்க அணி மோசமான தோல்விகளை சந்தித்துவந்த நிலையில் அணித்தலைவராக செயற்பட்ட பாப் டு ப்ளெசிஸிற்கு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான தென்னாபிரிக்க அணியிலிருந்து ஓய்வு வழங்கப்பட்டுவந்தது.

இந்நிலையில் இலங்கை நேரப்படி இன்று (17) நண்பகல் வேளையில் தென்னாபிரிக்க அணித்தலைவராக செயற்பட்ட பாப் டு ப்ளெசிஸ் தான் அனைத்துவிதமான போட்டிகளுக்குமான அணித்தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பு விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து மாலை வேளையில் அறிவிக்கப்பட்ட அவுஸ்திரேலிய தொடருக்கான டி20 குழாமில் நீண்ட இடைவெளியின் பின்னர் பாப் டு ப்ளெசிஸ் இடம்பெற்றுள்ளார். 

ஒயின் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு ஐ.சி.சி அபராதம்

தென்னாபிரிக்க மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு…….

மேலும் இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச தொடர்களுக்கான குழாம்களில் இடம்பெறாமல் தனிப்பட்ட விடுமுறையில் சென்றிருந்த முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான 24 வயதுடைய இளம் வீரர் ககிஸோ ரபாடா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அத்துடன் இங்கிலாந்து அணியுடனான தொடரில் டெஸ்ட் தொடரில் மாத்திரம் விளையாடிய வேகப்பந்துவீச்சாளரான அன்ரிச் நோட்ரியா ஒரேயொரு டி20 சர்வதேச போட்டியில் மாத்திரம் விளையாடிய நிலையில் மீண்டும் குழாமுக்கு திரும்பியுள்ளார். 

அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்து பின்னர் மீண்டும் அணியில் விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்த அனுபவ அதிரடி துடுப்பாட்ட வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸ், இவ்வாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடும் அடிப்படையில் அவுஸ்திரேலிய அணியுடனான டி20 சர்வதேச குழாமில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் தேர்வுக்குழுவினால் தவறவிடப்பட்டுள்ளார். 

இங்கிலாந்து அணியுடனான டி20 சர்வதேச குழாமில் இடம்பெற்றும் போட்டியில் விளையாடாத துடுப்பாட்ட வீரர் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் அவுஸ்திரேலிய தொடருக்கான குழாமில் தவறவிடப்பட்டுள்ளார். மேலும் தென்னாபிரிக்க அணியில் சர்வதேச அறிமுகம் பெறும் அடிப்படையில் இங்கிலாந்துடனான டி20 சர்வதேச குழாமில் இடம்பெற்றும் போட்டியில் விளையாடாத பந்துவீச்சு சகலதுறை வீரர் சிஸன்டா மகாலா மற்றும் பந்துவீச்சாளர் பியூரன் ஹென்ட்ரிக்ஸ் ஆகியோர் உடற்தகுதி பிரச்சினை காரணமாக குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

கடந்த வருட இறுதியில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற லீக் தொடரான மஸன்ஷி சுப்பர் லீக் தொடரில் பிரகாசித்த விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான பைட் வென் பில்ஜோன் முதல் முறையாக டி20 சர்வதேச குழாமுக்கு அறிமுக வீரராக அழைக்கப்பட்டுள்ளார். இதுவரையில் 66 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 6 அரைச்சதங்களுடன் 1,293 ஓட்டங்களை குவித்துள்ளார். 

ஐ.சி.சி டி20 உலகக்கிண்ண தொடருக்காக வேகப்பந்துவீச்சாளர்களை தயார்படுத்தும் நோக்கில் டேல் ஸ்டெய்ன், லுங்கி ங்கிடி மற்றும் அண்டில் பெஹ்லுக்வாயோ ஆகிய பந்துவீச்சாளர்களுக்கு தொடர்ந்தும் டி20 சர்வதேச குழாமில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. மேலும் குழாமில் இடம்பெற்றுள்ள துடுப்பாட்ட வீரர் டெம்பா பவுமா உடற்தகுதியை பொறுத்தே குழாமில் நீடிப்பார் என தேர்வுக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அவுஸ்திரேலிய – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 டி20  போட்டிகள் கொண்ட சர்வதேச தொடர் எதிரவரும் வெள்ளிக்கிழமை (21) ஜொஹனஸ்பேர்க்கில் ஆரம்பமாகவுள்ளது. 

உபுல் தரங்கவின் சதத்துடன் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இலங்கை பதினொருவர்

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் பயிற்சிப்….

அவுஸ்திரேலிய தொடருக்கான தென்னாபிரிக்க டி20 குழாம்

குயின்டன் டி கொக் (அணித்தலைவர்), டெம்பா பவுமா, பாப் டு ப்ளெசிஸ், ரைஸ் வென் டர் டைஸன், டேவிட் மில்லர், பைட் வென் பில்ஜோன், டுவைன் பிரிடோரியஸ், அண்டில் பெஹ்லுக்வாயோ, ஜொன் ஜொன் ஸ்மட்ஸ், ககிஸோ ரபாடா, தப்ரிஸ் ஷம்ஷி, லுங்கி ங்கிடி, பேர்ஜன் போர்ச்சன், அண்ரிச் நோட்ரியா, டேல் ஸ்டைன், ஹென்ரிச் கிளாஸன்  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<