தலைவர் பதவியிலிருந்து டு ப்ளெசிஸ் திடீர் விலகல்

47

தென்னாபிரிக்க அணியின் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கான தலைவர் பதவியில் இருந்து அனுபவ வீரர் பாப் டு ப்ளெசிஸ் விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். 

அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாக உள்ள நிலையில் டு ப்ளெசிஸ் இந்த முடிவை இன்று (17) அறிவித்துள்ளார்.

ஒயின் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு ஐ.சி.சி அபராதம்

தென்னாபிரிக்க மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று (16) …

இது இவ்வாறிருக்க, இங்கிலாந்து அணியுடனான டி20 தொடரில் விளையாடாத டு ப்ளெசிஸ், எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள தென்னாபிரிக்க குழாத்தில் இடம்பிடித்துள்ளார். 

கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாபிரிக்க அணி முதல் சுற்றுடன் வெளியேறியது. இதனால் அந்த அணியின் தலைவரான டு ப்ளெசிஸ் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

எனவே உலகக் கிண்ணத் தொடரில் மோசமான தோல்வியை சந்தித்ததால் ஒருநாள் போட்டிக்கான தலைவர் பதவியை இராஜினாமா செய்தார்.

அதன்பின் டு ப்ளெசிஸ் தலைமையில் இங்கிலாந்துக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய தென்னாபிரிக்க அணி சொந்த மண்ணில் 1-3 எனத் தொடரை இழந்தது. டி20 தொடரில் இவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. நேற்றுடன் முடிவடைந்த டி20 தொடரையும் தென்னாபிரிக்க அணி 1-2 இழந்தது.

இந்நிலையில் டெஸ்ட் மற்றும் டி20 அணிக்கான தலைவர் பதவியை டு ப்ளெசிஸ் இராஜினாமா செய்துள்ளார். 

தலைவர் பதவியிலிருந்து விலகியது குறித்து டு ப்ளெசிஸ் வெளியிட்ட அறிக்கையில், 

நான் தலைவராகப் பொறுப்பேற்றபோது, அர்ப்பணிப்புடன் அணியை வழிநடத்தினேன், துடுப்பாட்டத்தில் பிரகாசித்தேன், அனைத்து நடவடிக்கையிலும் ஈடுபட்டேன். அணியில் தலைவர் எனும் முறையில் புதிய தலைவருக்கு வழிவிட வேண்டும். இளம் வீரர்களுக்கு வழிகாட்ட வேண்டும். 

தென்னாபிரிக்க அணியின் எதிர்கால நலனுக்காக அனைத்து விதமான போட்டிகளுக்கும் தலைவர் பதவியிலிருந்து நான் விலகிக்கொள்கிறேன்.

இது மிகவும் கடினமான முடிவுதான் என்றாலும், அடுத்துவரும் தலைவர் குயிண்டன் டி கொக்கிற்கு தேவையான அனைத்து விதமான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குவேன். அணியைக் கட்டமைக்க சக அணி வீரர்களுடன் சேர்ந்து பணியாற்றுவேன் என்றார்.

தென்னாபிரிக்க அணிக்காக இதுவரை டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என 112 போட்டிகளுக்கு தலைவராக செயற்பட்டுள்ள டு ப்ளெசிஸ் கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து தலைவராகச் செயற்பட்டுள்ளார். 

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் முதல் முறையாக அவர் தென்னாபிரிக்க அணியை வழிநடத்தினார்.

இது இவ்வாறிருக்க, இங்கிலாந்து தொடரின்போது குயிண்டன் டி கொக் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு தலைவராக செயற்பட்டார். இதனால் தென்னாபிரிக்காவின் மூன்று வகை கிரிக்கெட் அணிக்கும் டி கொக் தலைவராக நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணியுடனான டி20 தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள தென்னாபிரிக்க அணியில் டு ப்ளெசிஸிற்கு வாய்ப்பு வழங்க அந்நாட்டு தெரிவுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…