இலங்கை பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ‘B’ மட்டத்திற்கான போட்டிகளில் தமது சிறப்பான ஆட்டங்கள் மூலம் இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர நிறைவின் போது, இலங்கை கடற்படை, களுத்துறை பெளதீக கலாச்சார அணி, இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவை வலுப்பெற்றுள்ளன.

களுத்துறை நகர கழகம் எதிர் இலங்கை கடற்படை விளையாட்டு கழகம்

நேற்று ஆரம்பமாகியிருந்த மூன்று நாட்கள் கொண்ட இப்போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தை இலங்கை கடற்படை அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களுடன் தொடர்ந்தது. போட்டி ஆரம்பமாகி சிறிது நேரத்திலேயே தமது 7 ஆவது விக்கெட்டாக, நேற்று சிறப்பாக செயற்பட்டிருந்த அஷான் ரணசிங்க 79 ஓட்டங்களை பெற்றவாறு இலங்கை கடற்படை பறிகொடுத்தது. எனினும்  8 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த தினுஷ்க மாலன், இஷான் அபேசேகர ஆகியோர் இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்ட 116 ஓட்டங்களின் துணையுடன் இலங்கை கடற்படை அணி, தமது முதல் இன்னிங்சுக்காக 350 ஓட்டங்களை சகல விக்கெட்டுகளையும் இழந்து பெற்றுக்கொண்டது.

இன்றைய நாளில், வலுவான மொத்த ஓட்ட எண்ணிக்கைக்கு இலங்கை கடற்படையை சேர்ந்த தினுஷ்க மாலன் தனது கன்னி முதல்தர சதத்தினை கடந்து 113 ஓட்டங்களை 16 பவுண்டரிகளை விளாசி பெற்றுக்கொண்டார். மறுமுனையில் இவரிற்கு தோள் கொடுத்த இஷான் அபேசேகர 80 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நின்றிருந்தார்.

பந்து வீச்சில், முன்னர் சிறப்பாக செயற்பட்டிருந்த களுத்துறை நகர கழக அணிக்காக, மொத்தமாக 7 விக்கெட்டுகளை  98 ஓட்டங்களுக்கு மங்கல குமார சாய்த்திருந்தார்.

பின்னர், தமது இரண்டாவது இன்னிங்சினை தமது முதல் இன்னிங்சில் பெற்றுக்கொண்ட 143 ஓட்டங்களின் காரணமாக, 207 ஓட்டங்கள் பின்தங்கியவாறு ஆரம்பித்த களுத்துறை நகர கழக அணி, இன்றைய ஆட்ட நேர நிறைவின் போது 47 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டு இலங்கை கடற்படையை விட 45 ஓட்டங்கள் மேலும் பின்தங்கியிருந்தது. களுத்துறை நகர கழகம் சார்பாக துடுப்பாட்டத்தில், நிபுன கமகே 50 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டதுடன் பந்து வீச்சில், இந்த இன்னிங்சில் சிறப்பாக செயற்பட்ட சுதாரக்க தக்ஷின இரண்டு விக்கெட்டுக்கள் இலங்கை கடற்படை சார்பாக கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

களுத்துறை நகர கழகம் (முதல் இன்னிங்ஸ்): 143 (42.4) – தரிந்து சிறிவர்தன 33, கிரிஷேன அபோன்சு 22, சுதரக்க தக்ஷின 9/4, அஷான் ர ணசிங்க 16/2, இஷான் அபேசேகர 24/2

இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்): 350 (85.2) – தினுஷ்க மாலன் 113, இஷான் அபேசேகர 80*, அஷான் ரணசிங்க 79, மங்கல குமார 98/7

களுத்துறை நகர கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்): 165/5 (47) – நிபுன கமகே 50, தரிந்து சிறிவர்த்தன 45, சுதாரக்க தக்ஷின 50/2

போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாள் நாளை தொடரும்.


களுத்துறை பெளதீக கலாச்சார அணி எதிர் பொலிஸ் விளையாட்டு கழகம்

BRC மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இப்போட்டியில், இன்றைய இரண்டாவது நாளினை ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 41 ஓட்டங்களுடன் தொடர்ந்த களுத்துறை பெளதீக கலாச்சார அணி, இன்றைய நாளின் வீசப்பட்ட முதலாவது ஓவரிலேயே விக்கெட் ஒன்றினை பறிகொடுத்தது. இதனால் நிலைமையை சுதாகரித்துக் கொண்டு ஆடத்தொடங்கிய அவ்வணி 90 ஓட்டங்கள் வரை விக்கெட் இழப்பின்றி ஓட்டங்களை சேர்த்தது. 90 ஓட்டங்களில் பறிபோன மூன்றாவது விக்கெட்டினை அடுத்து தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பொலிஸ் அணியிடம் பறிகொடுத்த களுத்துறை பெளதீக கலாச்சார அணி, தமது முதல் இன்னிங்சுக்காக 67 ஓவர்களில் 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக அதிகபட்சமாக தமிது அஷான் மாத்திரம் 34 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் கல்யாண ரத்னப்பிரிய, சுவஞ்சி மதநாயக்க ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், முதல் இன்னிங்சில் பெற்ற 235 ஓட்டங்கள் காரணமாக, தமது இரண்டாவது இன்னிங்சினை 96 ஓட்டங்கள் முன்னிலையில் ஆரம்பித்த பொலிஸ் அணி, ருச்சிர தரிந்த்ரவின் அபார சுழல் காரணமாக, வெறும் 85 ஓட்டங்களினை மாத்திரமே பெற்று சுருண்டு கொண்டது. பொலிஸ் அணி சார்பாக நான்கு வீரர்கள் ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தனர். அவ்வணியின் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையான 27 ஓட்டங்களினை தரிந்து தில்ஷான் பெற்றிருந்தார்.

பந்து வீச்சில், இடது கை சுழல் பந்து வீச்சாளர் ருச்சிர தரிந்த்ர 31 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை கைப்பற்றி, முதல் தர போட்டிக்கான தனது சிறப்பு பந்து வீச்சினை பதிவு செய்து கொண்டார்.

இதனையடுத்து, பொலிஸ் அணியின் மோசமான துடுப்பாட்டத்தினால் திருப்பு முனையாக அமைந்த இப்போட்டியில், வெற்றி பெற களுத்துறை பெளதீக கலாச்சார அணியிக்கு 182 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதனை பெற களமிறங்கிய அவ்வணி, இன்றைய ஆட்ட நேர நிறைவு வரை, 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருக்கின்றது. களத்தில் 21 ஓட்டங்களுடன் தமிது அஷான் நிற்கின்றார். இன்று பறிபோன இரண்டு விக்கெட்டுகளையும் சுவஞ்சி மதநாயக்க பொலிஸ் அணி சார்பாக கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

பொலிஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 235 (70.1) – சுவஞ்சி மதநாயக்க 96*, சமித் துஷாந்த 45, அகில லக்ஷான் 31, ஜெஸ்ஸி சிங்  38/4, தெனுக்க தனஞ்சய 47/3, ருச்சிர தரிந்த்ர 51/2

களுத்துறை பெளதீக கலாச்சார கழகம் (முதல் இன்னிங்ஸ்): 139 (67) – தமிது அஷான் 34, சுவஞ்சி மதநாயக்க 37/3, கல்யாண ரத்னப்பிரிய 45/3

பொலிஸ் விளையாட்டு கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்): 85 (25.3) – தரிந்து தில்ஷான் 27, ருச்சிர தரிந்த்ர 31/7, ஜெஸ்ஸி சிங் 29/2

களுத்துறை பெளதீக கலாச்சார கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்): 41/2 (10) – தமிது அஷன் 21*, சுவஞ்சி மதநாயக்க 9/2

போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாள் நாளை தொடரும்.


இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

இன்று தமது முதல் இன்னிங்சினை ஒரு விக்கெட்டினை இழந்து 24 ஓட்டங்களுடன் தொடர்ந்த லங்கன் கிரிக்கெட் கழக அணி, குறுகிய ஓட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்து, வெறும் 108 ஓட்டங்களை மாத்திரமே தமது முதல் இன்னிங்சுக்காக குவித்துக்கொண்டது. அவ்வணி சார்பாக ஒன்பது வீரர்கள் ஓற்றை இலக்க ஓட்டங்களினையே குவித்த இவ்வேளையில், ஓரளவு போராடியிருந்த லங்கன் கிரிக்கெட் கழகத்தின் சானக்க ருவன்சிரி 43 ஓட்டங்களினை அதிகபட்சமாக பெற்றார். பந்து வீச்சில் சானக்க கோமசாரு 16 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

பின்னர், தமது இரண்டாவது இன்னிங்சினை தமது முதல் இன்னிங்சில் பெற்றுக்கொண்ட 248 ஓட்டங்கள் காரணமாக, 140 ஓட்டங்கள் முன்னிலையில் ஆரம்பித்த, இலங்கை துறைமுக அதிகார சபை அணி, இன்றைய ஆட்டநேர நிறைவில், 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 228 ஓட்டங்களை பெற்று வலுப்பெற்றிருக்கின்றது. இதில் யொஹான் டி சில்வா 90 ஓட்டங்களை விளாசியதுடன், இஷான் ரங்கன 70 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இன்று பறிபோன விக்கெட்டுகளில் இரண்டினை சாணக்க ருவன்சிரி லங்கன் கிரிக்கெட் கழகத்திற்காக கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை துறைமுக அதிகாரசபை (முதல் இன்னிங்ஸ்): 248 (81.2) – இஷான் ரங்கன 69, சமிகர எதிரிசிங்க 44, ரஜீவ வீரசிங்க 87/4

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 108 (37.3) – சாணக்க ருவன்சிரி 43, சஷீன் பெர்னாந்து 34, சாணக்க கோமசாரு 16/4, சமிந்த பண்டார 56/3

இலங்கை துறைமுக அதிகாரசபை (இரண்டாவது இன்னிங்ஸ்): 228/4 (62) – யொஹான் டி சில்வா 90, இஷான் ரங்கன 70, கிஹான் ரூபசிங்க 40, சாணக்க ருவன்சிரி 65/2

போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாள் நாளை தொடரும்.