ஒயின் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு ஐ.சி.சி அபராதம்

55

தென்னாபிரிக்க மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று (16) செஞ்சூரியன் சுப்பர் ஸ்போட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டி20 சர்வதேச போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீச தாமதமாகிய காரணத்தினால் அவ்வணி மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை போட்டி ஊதியத்தில் 20 சதவீத அபராதம் விதித்துள்ளது.

இருதரப்பு தொடரில் விளையாடுவதற்காக தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச ஆகிய மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடியது.

இமாலய இலக்கை கடந்து டி20 தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து

ஜொஸ் பட்லர், ஜொனி பெயர்ஸ்டோ மற்றும் அணித்தலைவர் ஒயின் மோர்கன்…

சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற அடிப்படையில் கைப்பற்றிய நிலையில், அடுத்த தொடரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் 1-1 என்ற அடிப்படையில் சமநிலையில் நிறைவுக்குவந்தது. இந்நிலையில் இறுதி தொடரான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் நேற்று (16) நிறைவுக்குவந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 223 என்ற இமாலய இலக்கை 5 பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.

போட்டியில் நாயண சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச களமிறங்கியது. இதன்போதே இங்கிலாந்து அணி பந்துவீச்சில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய விதிமுறையை மீறிய காரணத்திற்காக அவ்வணி மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

டி20 சர்வதேச போட்டியில் ஒரு அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களையும் வீசுவதற்கு குறிப்பிட்டளவு நேரம் வழங்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறு வழங்கப்பட்ட நேரத்திற்குள் நேற்றைய போட்டியில் தென்னாபிரிக்க அணியின் அதிரடி ஆட்டம் காரணமாக தடுமாற்றத்திற்கு உள்ளான இங்கிலாந்து அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு ஓவரை குறைவாக வீசியிருந்தது.

இதன் காரணமாக ஐ.சி.சி இனுடைய இலக்கம் 2.22 சரத்தில் குறிப்பிடும் அணித் தலைவர்கள், வீரர்களினுடைய நடத்தை மற்றும் அவர்கள் சார்ந்த கோட்பாடுகளை உள்ளடக்கும் சரத்தின்படி இங்கிலாந்து அணியினருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் இங்கிலாந்து அணி குறித்த ஒரு ஓவரையும் வீசுவதற்கு மேலதிக நேரம் எடுத்ததன் காரணமாக அணித்தலைவர் ஒயின் மோர்கன் உள்ளிட்ட போட்டியில் விளையாடிய ஏனைய 10 வீரர்களுக்கும் ஒரு வீரருக்கு போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவீதம் அபராத தொகையாக விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டினை போட்டியின் களநடுவர்களான அல்லஹூடின் பலேகர் (தென்னாபிரிக்கா), அட்ரியன் ஹோல்ட்ஸ்டொக் (தென்னாபிரிக்கா), மூன்றாம் நடுவர் பொங்கனி ஜெலே (தென்னாபிரிக்கா) மற்றும் நான்காம் நடுவர் பிரட் வைட் (தென்னாபிரிக்கா) ஆகியோர் உறுதிப்படுத்த, போட்டியின் மத்தியஸ்தரான டேவிட் பூண் (அவுஸ்திரேலியா) மூலமாக ஐ.சி.சி இனால் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2020 ஐ.பி.எல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு

எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள 13ஆவது இந்தியன்…

போட்டி முடிவடைந்ததன் பின்னர் இங்கிலாந்து அணித்தலைவவர் ஒயின் மோர்கன் குறித்த குற்றச்சாட்டினை ஒப்புக்கொண்டதன் காரணமாக மேலதிக விசாரணைகள் எதற்கும் அவர் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்பதையும் ஐ.சி.சி தெளிவுபடுத்தியுள்ளது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க