இலங்கை பதினொருவர் அணியின் தலைவராக மெதிவ்ஸ்

1018

சுற்றுலா தென்னாபிரிக்கா அணியுடன் எதிர்வரும் சனிக்கிழமை (07) பி. சரா ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இரண்டு நாள் பயிற்சிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியின் தலைவராக அஞ்செலோ மெதிவ்ஸ் நியமிக்கபட்டுள்ளார்.

ரத்து செய்யப்பட்டுள்ள சந்திக்க ஹத்துருசிங்கவின் இங்கிலாந்து பயணம்

மேற்கிந்திய தீவுகளுக்குச் சுற்றுப் பயணம்…

அண்மைக் காலமாக தொடர் உபாதைகளுக்கு முகங்கொடுத்து வந்த இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளின் அணித் தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸ், கடந்த மாதம் நிறைவுக்கு வந்த மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியில் இடம்பிடித்தார்.

குறித்த போட்டித் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் மாத்திரம் விளையாடிய அவர், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாவதற்கு முன் தனது இரண்டாவது குழந்தையின் பிறப்புக்காக மீண்டும் நாடு திரும்பியிருந்தார்.

இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் எதிர்பார்த்த அளவு பிரகாசிக்கத் தவறிய மெதிவ்ஸ், முதல் இன்னிங்ஸில் 11 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.

எனவே, இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் எதிர்வரும் 12ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன் அவரை தயார்படுத்தும் நோக்கில் தென்னாபிரிக்க அணிக்கெதிரான பயிற்சிப் போட்டியில் மெதிவ்ஸுக்கும் விளையாடுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு தேர்வுக் குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேநேரம், மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் விளையாடி பெரிதளவு சோபிக்க முடியாமல் போன ரொஷேன் சில்வா, தனஞ்சய டி சில்வா, தனுஷ்க குணதிலக்க மற்றும் அசித பெர்னாண்டோ ஆகிய வீரர்களுக்கும் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உள்ளூர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த இலங்கை டெஸ்ட் அணியின் மற்றுமொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கௌஷால் சில்வாவும் இலங்கை பதினொருவர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகளிலிருந்து நாடு திரும்பும் மெதிவ்ஸ், லஹிரு கமகே

மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்…

இந்நிலையில், தென்னாபிரிக்காவுடனான இரண்டு நாள் பயிற்சிப் போட்டியில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற முக்கிய வீரர்களை மாத்திரம் இலங்கை டெஸ்ட் அணியில் இணைத்துக்கொள்ள தேர்வுக் குழுவினர் தீர்மானித்திருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி விபரம்  

அஞ்செலோ மெதிவ்ஸ் (தலைவர்), தனஞ்சய டி சில்வா, கௌஷால் சில்வா, ரொஷேன் சில்வா, மினோத் பானுக, அவிஷ்க பெர்ணான்டோ, தனுஷ்க குணதிலக்க, கசுன் மதுஷங்க, லசித் அம்புல்தெனிய, விமுக்தி பெரேரா, அசித பெர்னாண்டோ,

மேலதிக வீரர்கள்

அஷேன் பண்டார, விகும் சன்ஜய, வனிந்து ஹசரங்க டி சில்வா

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<