ஐந்து தடவைகள் தேசிய கெரம் சம்பியனாகிய ரொஷிட்டா

148

இலங்கையின் நாமத்தை சர்வதேசத்துக்கு மத்தியில் எடுத்துச் சென்ற விளையாட்டுகளில் கிரிக்கெட் எவ்வாறு முக்கியத்தும் பெறுகின்றதோ, அதேபோல கெரம் விளையாட்டிலும் இலங்கை வீரர்கள் உலக சம்பியன்களாக வலம்வந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை ஒருசிலர் மாத்திரமே அறிந்து வைத்துள்ளனர்.

கடந்த வருடம் தென்கொரியாவில் நடைபெற்ற உலக கெரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் மகளிர் பிரிவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை அணியில் இடம்பிடித்த ரொஷிட்டா ஜோசப், அண்மையில் நடைபெற்ற சம்மேளனக் கிண்ண கெரம் சம்பியன்ஷிப்பில் ஹெட்ரிக் சம்பின் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

ஆசிய தகுதிகாண் போட்டியில் சண்முகேஸ்வரன் மற்றும் சப்ரினுக்கு வெற்றி

ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் தேசிய சம்பியனாக …..

பாடசாலையில் கிடைத்த வழிகாட்டலுடன் தேசிய மட்டத்தில் இடம்பெற்ற கெரம் சம்பியன்ஷிப் போட்டிகளில் ஐந்து தடவைகள் சம்பியனாகத் தெரிவரிகிய, தேசிய கெரம் அணியின் தலைவியாக பல தடவைகள் செயற்பட்ட கொழும்பைச் சேர்ந்த ஜோசப் ரொஷிட்டாவுடனான சிறப்பு நேர்காணலை இங்கு வழங்குகின்றோம்.

முதலில் அண்மையில் நீங்கள் பெற்ற வெற்றியைப் பற்றிச் சொல்லுங்கள்?

இலங்கை கெரம் சம்மேளனத்தினால் இவ்வருட ஆரம்பத்தில் நடத்தப்பட்ட 30ஆவது சம்மேளனக் கிண்ண கெரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சம்பியன் பட்டத்தை வென்றேன்.

இதேநேரம், மகளிர் இரட்டையர் பிரிவில் நுகேகொட மஹமாயா கல்லூரி மாணவி தாருஷி ஹிமாஹன்சிகவுடனும், கலப்பு இரட்டையர் பிரிவில் நிஷான்த பெர்ணான்டோவுடனும் ஜோடி சேர்ந்து மேலும் 2 சம்பியன் பட்டங்களை வென்றேன்.

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

எனது பெயர் ரொஷிட்டா ஜோசப். நான் பொரளை ஓல் சென்ட்ஸ் கல்லூரியில் கல்வி பயின்றேன். நான் அம்மா, அக்காவும் இருக்கின்றனர். நான் தற்போது இலங்கை கடற்படையில் பணிபுரிகின்றேன்.

கெரம் விளையாட்டை ஏன் தெரிவு செய்தீர்கள்?

பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி வந்தேன். அதன்பிறகு 2006இல் தான் முதற்தடவையாக கெரம் விளையாட்டை ஆரம்பித்தேன்.

தேசிய மட்டத்தில் நீங்கள் பெற்ற வெற்றிகளைப் பற்றி சொல்லுங்கள்?

2010ஆம் ஆண்டு முதல் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்றேன். இதில் 2010, 2012, 2014, 2016 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய கெரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஒற்றையர் பிரிவு சம்பியனாகத் தெரிவாகினேன். அதே காலப்பகுதியில் நடைபெற்ற ஏனைய போட்டிகளிலும் சம்பியன் பட்டங்களை வென்றுள்ளேன்.  

சம்பளேனக் கிண்ண கெரமில் சஹீட், ரொஷிட்டாவுக்கு ஒற்றையர் சம்பியன் பட்டம்

இலங்கை கெரம் சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட 30ஆவது ……

கெரம் விளையாட்டு உங்களுக்கு சவாலானதா?

தற்போதுள்ள அனைத்து வீராங்கனைகளும் சவால் தான். ஆகவே, எவரையும் குறைத்து மதிப்பிட முடியாது. தரப்படுத்தலில் முன்னிலையில் உள்ளவர்களைப் போல பின்வரிசை வீராங்கனைகளும் சவால் என்றுதான் கருதுகிறேன்.  

கெரம் விளையாட்டுக்கு இலங்கையைப் பொறுத்தமட்டில் பெரிதாக வரவேற்பு கிடையாது. அவ்வாறான நிலையில் ஏன் நீங்கள் கெரம் விளையாட்டை தெரிவு செய்தீர்கள்?

உண்மையில் அது எனது தனிப்பட்ட விருப்பமாகும். இந்த விளையாட்டுக்கு காலடி எடுத்த வைத்தபோது அதுதொடர்பில் எந்தவொரு பின்புலமும் எனக்கு இருக்கவில்லை. தற்போது நான் சம்பியன் பட்டங்களை வென்றாலும், ஆரம்ப காலங்களில் பல தோல்விகளை சந்தித்துள்ளேன்.

தேசிய மட்டத்தில் முன்னிலையில் உள்ள வீராங்கனைகளுடன் போட்டியிட்டு முதல் சுற்றுடன் வெளியேறி விடுவேன். எனவே, தொடர் தோல்விகளால் பின்வாங்காமல் வெற்றிக்காக விளையாட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இந்த விளையாட்டில் ஆர்வத்துடன் தொடர்ந்து ஈடுபட்டேன். அதன் பிரதிபலனாக இன்று தேசிய மற்றும் சர்வதேச மட்டப் போட்டிகளில் விளையாடி வெற்றிகளையும் பெற்று வருகின்றேன்.

கெரம் என்பது மூளைக்கு வேலையைக் கொடுக்குமா? மன அழுத்தத்தைக் கொடுக்குமா?

உண்மையில் கெரம் விளையாட்டென்பது மூளைக்கு வேலையைக் கொடுக்கின்ற விளையாட்டாகும். ஆனால் ஒருபோதும் அது மனஅழுத்தத்தை கொடுக்காது. அதிலும் குறிப்பாக, சரியான முறையில் முடிவெடுக்கின்ற ஆற்றலையும் கெரம் விளையாட்டின் மூலம் நாம் பெற்றுக் கொள்ளலாம்.  

தேசிய சாதனைகளுடன் இலங்கைக்கு நான்கு பதக்கங்கள்

ஆசிய பசுபிக் க்ளெசிக் (Classic), எகியூப்ட் (Equipped) மற்றும் பென்ச் ப்ரெஸ் …..

கெரம் விளையாட்டில் மறக்க முடியாத சம்பவமாக எதைக் கூறுவீர்கள்?

2010இல் இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய கெரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் நான் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டேன். அதன் காலிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனையொருவரை நான் வீழ்த்தியிருந்தேன். அந்த வெற்றியை எனது வாழ்க்கையில் நான் மறக்க மாட்டேன்.

உலக கெரம் சம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவிடம் தொடர்ந்து தோல்வியை பெற்று வருகின்றோம். இதற்கான காரணம் என்ன?

கெரம் என்பது 25 புள்ளிகளைக் கொண்ட விளையாட்டாகும். நாங்கள் ஒவ்வொரு போட்டித் தொடர்களிலும் சிறப்பாக விளையாடியிருந்தோம். நான் விளையாட ஆரம்பித்த காலம் முதல் எமது பெண்கள் அணி இரண்டாவது இடத்தைப் பெற்று வருகின்றது. ஆனால் அந்த தோல்விகளை நாங்கள் மறக்கவில்லை. ஆனால் கடந்த வருடம் நாங்கள் சமபலம் கொண்ட அணியாக இந்தியாவை எதிர்கொண்டோம். அதிலும் குறிப்பாக ஸ்வீஸ் லீக் சுற்றில் இந்தியாவுக்கு பலத்த போட்டியைக் கொடுத்தோம். முன்னர் போல அல்லாமல் இந்தியாவும் தற்போது எமக்கு பயந்துதான் விளையாடுகின்றார்கள் என்பதை உணர முடிந்தது.

சர்வதேசத்துடன் ஒப்பிடும்போது இலங்கையின் கெரம் விளையாட்டு எந்த இடத்தில் உள்ளது?

நாங்கள் சர்வதேச மட்டப் போட்டிகளுக்கு செல்லும் போது பிறநாடுகளில் வைத்து எங்களுக்கு அமோக வரவேற்பு வழங்கப்படும். கெரம் உலகில் இலங்கைக்கு தற்போது அதிக மதிப்பு உள்ளது. ஆனால் இலங்கையில் அவ்வாறான சூழல் ஒன்று இதுவரை உருவாகவில்லை. எமது ஆடவர் கெரம் அணி, 3 தடவைகள் உலக கெரம் சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. ஆனால் அதுபற்றியும் இலங்கையில் உள்ள பெரும்பாலானோர் அறிந்து இருக்க மாட்டார்கள். ஆனால் கிரிக்கெட்டில் வெற்றியொன்று கிடைத்தவுடன் எல்லோரும் அதை அறிவார்கள். அதேபோல, ஊடகம் வாயிலாக கிடைக்கின்ற ஒத்துழைப்பும் போதாது என கருதுகிறேன்.

இலங்கையில் கெரம் விளையாடுகின்ற வீராங்கனைகளுக்கு எவ்வாறான இடம் கிடைத்துள்ளது?

உலகக் கிண்ணங்களை வென்றுள்ள எமது கெரம் விளையாட்டுக்கு இதுவரை அனுசரணையாளர்கள் இல்லை. கிரிக்கெட்டுக்குப் பிறகு நாங்கள் பல சர்வதேச வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். அதிலும் குறிப்பாக, ஆண்கள் கெரம் அணியுடன் ஒப்பிடும்போது எமக்கு போதியளவு அனுசரணையாளர்கள் கிடைப்பதில்லை. அதேபோல, ஆண்களை காட்டிலும், பெண்கள் கெரம் விளையாட்டில் ஈடுபடுவதும் மிக குறைவாக உள்ளது.

உலகின் கடினமான மலையேறும் சவாலுக்குத் தயாராகும் இலங்கை ஜோடி

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலை …..

உங்களைப் போல கெரம் விளையாட்டில் சாதிக்க காத்திருக்கும் வீராங்கனைகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

கெரம் என்பது மிகவும் இலகுவான விளையாட்டாகும். இந்த விளையாட்டில் ஈடுபடுகின்ற வட பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான தமிழ் வீராங்களைகள் படிப்பைக் காரணம் காட்டி அதை புறக்கணித்து வருகின்றனர். ஆனால் இவர்கள் பாடசாலை மட்டப் போட்டிகளில் மாத்திரம் பங்குபற்றினாலும், தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதில்லை. பொதுவாக தேசிய மட்டப் போட்டிகள் தொடர்ந்து 3 மாதங்களுக்கு வார இறுதி நாட்களில் கொழும்பில் நடைபெறுவது வழக்கம். எனவே அவர்களுக்கு தங்குமிட வசதிகள் கிடைக்காத காரணத்தால் இவ்வாறான போட்டிகளில் பங்குபற்றுவதில்லை. ஆகவே அவர்களுக்கு தங்குமிட வசதிக்ளைப் பெற்றுக்கொடுத்தால் நிச்சயம் என்னைப் போல இன்னும் பல தமிழ் வீராங்கனைகள் தேசிய கெரம் அணியில் இடம்பிடிக்க முடியும்.

உங்களது எதிர்கால இலட்சியம் என்ன?

எமது ஆடவர் கெரம் அணி, உலக கெரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கங்களை ஏற்கனவே வென்று விட்டனர். ஆனால் மகளிர் அணி தொடர்ந்து இரண்டாவது இடத்தை மாத்திரம் பெற்று வருகின்றது. எனவே, கெரம் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன் இலங்கைக்கு உலக கெரம் சம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கொடுக்க வேண்டும் என்பதுடன், தனிநபர் போட்டிகளிலும் தங்கப் பதக்கமொன்றை வென்று நாட்டுக்காக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே எனது இலட்சியமாகும்.

உங்களுக்கு உதவி செய்தவர்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

எனது இதுவரையான வெற்றிப் பயணத்துக்கு உதவிய, எனது அம்மாவுக்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேபோல எனது பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியை நிஷானி பிரியங்காவுக்கும், எனது அனைத்து பயிற்சியாளர்கள், இலங்கை கடற்படை, கெரம் சம்மேளனத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<