பிரேசிலை வெளியேற்றிய குரோஷியா அரையிறுதியில் ஆர்ஜன்டீனாவுடன் மோதல்

FIFA World cup 2022

303
FIFA World cup 2022

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் முதல் இரு காலிறுதிப் போட்டிகளிலும் ஆர்ஜன்டீனா மற்றும் குரோஷிய அணிகள் வெற்றியீட்டி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன.

இதன்படி இலங்கை நேரப்படி எதிர்வரும் புதன்கிழமை (14) அதிகாலை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனா மற்றும் குரோஷிய அணிகள் மோதவுள்ளன. இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை (09) மற்றும் சனிக்கிழமை (10) அதிகாலை நடைபெற்ற முதல் இரு காலிறுதிப் போட்டிகளின் விபரம் வருமாறு,

கனவை தக்கவைத்தார் மெஸ்ஸி

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான பரபரப்பான காலிறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் ஆர்ஜன்டீன அணி வெற்றியீட்டியதன் மூலம் மெஸ்ஸி தனது உலகக் கிண்ண கனவை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

லுசைல் அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸியின் அபார பரிமாற்றத்தின் உதவியோடு நகுவெல் மொலினா 35 ஆவது நிமிடத்தில் கோல் பெற்று ஆர்ஜன்டீனாவை முன்னிலை பெறச் செய்தார். தொடர்ந்து கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 73 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி இரண்டாவது கோலை பெற்றபோது ஆர்ஜன்டீனா வெற்றி வாய்ப்பை நெருங்கியது.

>> ஸ்பெயினுக்கு அதிர்ச்சி கொடுத்த மொரோக்கோ போர்த்துக்கலுடன் காலிறுதியில் மோதல்

என்றாலும் போட்டியின் முழு நேரம் முடியும் தருணத்தில் வோட் வொகோஸ் அடுத்தடுத்து கோல்களை பெற்றதால் நெதர்லாந்து உயிர்பெற்றது. போட்டி மேலதிக நேரத்திற்கு சென்றபோதும் இரு அணிகளும் கோல் பெறத் தவறின.

இந்நிலையில் முடிவை தீர்மானிக்கும் பெனால்டி ஷூட் அவுட்டும் மேலும் விறுவிறுப்பை தந்தது. எனினும் ஆர்ஜன்டீன கோல்காப்பாளர் எமி மார்டினஸ் நெதர்லாந்தின் முதல் இரு முற்சிகளையும் அபாரமாக தடுத்ததை அடுத்து ஆட்டம் ஆர்ஜன்டீனா பக்கம் திரும்பியது.

இதன்படி பெனால்டி ஷூட் ஆவுட்டில் ஆர்ஜன்டீனா 4-3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.

வெளியேறியது பிரேசில்

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அதிக வெற்றி வாய்ப்புக் கொண்ட பிரேசில் அணியை குரோஷியா காலிறுதிப் போட்டியில் தோற்கடித்து வெளியேற்றியுள்ளது.

கட்டாரின் கல்வி அரங்கில் வெள்ளிக்கிழமை (09) நடந்த போட்டியில் முழு நேரம் மற்றும் வழங்கப்பட்ட மேலதிக நேரம் என 120 நிமிடங்கள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலை பெற்று போட்டியின் முடிவு பெனால்டி ஷூட் அவுட் முறையில் தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது குரோஷியா தனது நான்கு பெனால்டி உதைகளையும் வலைக்குள் செலுத்திய நிலையில் பிரேசில் அணி இரண்டு வாய்ப்புகளை தவறவிட்டு 4-2 என்ற கோல்கள் கணக்கில் தோற்றது.

>> கட்டாரும் 2022ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கிண்ணத் தொடரும்

இதன் மூலம் நான்கு ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவில் நடந்த உலகக் கிண்ணத்தில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய குரோஷிய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

போட்டியின் 90 நிமிடங்களும் கோலின்றி முடிந்த நிலையில் வழங்கப்பட்ட அரை மணி நேரத்தில் நெய்மார் கோல் பெற்றபோது பிரேசில் அணியின் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. எனினும் பெரும் திருப்பமாக வழங்கப்பட்ட மேலதிக நேரத்தின் இறுதி நிமிடங்களில் ஒர்சிக் வழங்கிய பந்தை ப்ரூனோ பட்கோவிச் வலைக்குள் செலுத்தி பதில் கோல் திருப்பினார்.

இதன் மூலம் ஏற்கனவே ஜப்பானுக்கு எதிரான நொக் அவுட் போட்டியிலும் பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றியீட்டிய குரோஷியா தனக்கு சாதகமான பெனால்டி ஷூட் அவுட்டுக்கு போட்டியை எடுத்துச் சென்றது.

இதில் நெய்மார் பெற்ற கோல் மூலம் அவர் பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் பெற்ற ஜாம்பவான் பீலேவின் சாதனையை சமன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நெய்மார் பெறும் 77 ஆவது சர்வதேச கோல் இதுவாகும்.

ஐந்து முறை உலக சம்பியனான பிரேசில் அணி கடந்த ஐந்து உலகக் கிண்ண தொடர்களில் நான்கில் காலிறுதியில் தோல்வியுற்று வெளியேறியுள்ளது.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<