ஸ்பெயினுக்கு அதிர்ச்சி கொடுத்த மொரோக்கோ போர்த்துக்கலுடன் காலிறுதியில் மோதல்

FIFA World cup 2022

210

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் கடைசி இரண்டு நொக் அவுட் போட்டிகளும் செவ்வாய்க்கிழமை (06) மற்றும் இலங்கை நேரப்படி புதன்கிழமை (07) அதிகாலையில் நடைபெற்றன. இதில் போர்த்துக்கல் அணி சுவிட்சர்லாந்தை இலகுவாக வீழ்த்தியதோடு மொரோக்கோவிடம் ஸ்பெயின் அதிர்ச்சித் தோல் அடைந்தது.

இதன்படி வரும் சனிக்கிழமை (10) நடைபெறும் காலிறுதிப் போட்டியில் போர்த்துக்கல் மற்றும் மொரோக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கடைசி இரு நொக் அவுட் போட்டிகளின் விபரம் வருமாறு

சுவிட்சர்லாந்தை துவம்சம் செய்தது போர்த்துக்கல்

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பதில் களமிறக்கப்பட்ட கன்காலோ ராமோஸ் பெற்ற ஹட்ரிக் கோலுடன் 6-1 என்று கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை துவம்சம் செய்த போர்த்துக்கல் அணி உலகக் கிண்ண காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

போர்த்துக்கல் தலைமை பயிற்சியாளர் பெர்னான்டோ சான்டோஸ், உலகக் கிண்ண நொக் அவுட் போட்டியில் நட்சத்திர வீரர் ரொனால்டோவை ஆரம்ப அணியில் சேர்க்காமல் இருக்க தைரியமான முடிவை எடுத்தார்.

அதிரடி வெற்றியுடன் குரோசியாவுடனான காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில்

எனினும் அவர் இல்லாத குறையை 21 வயதான ராமோஸ் நிவர்த்தி செய்தார். லுசைலா அரங்கில் இலங்கை நேரப்படி புதன்கிழமை (07) அதிகாலை நடைபெற்ற போட்டியின் 17ஆவது நிமிடத்தில் ராமோஸ் அதிரடி கோல் ஒன்றை புகுத்தினார்.

தொடர்ந்து ரொனால்டோவுக்கு பதில் போர்த்துக்கல் அணியின் தலைமை பெறுப்பை ஏற்ற 39 வயது பெபே 33ஆவது நிமிடத்தில் தலையால் முட்டி அபார கோல் ஒன்றை புகுத்தினார். இது உலகக் கிண்ண நொக் அவுட் போட்டியில் மிக வயதானவரால்  புகுத்தப்பட்ட கோலாக இருந்தது.

தொடர்ந்து இரண்டாவது பாதியில் செயல்பட்ட ராமோஸ் மேலும் இரண்டு கோல்களை புகுத்தியதோடு போர்த்துக்கல் சார்பில் ரபேல் குரைரோ மற்றும் ரபேல் லியோவும் கோல் மழை பொழிந்தனர்.

போட்டி முழுவதும் பலவீனமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுவிட்சர்லாந்து 58ஆவது நிமிடத்தில் மனுவேல் அகன்ஜி மூலம் ஒரே ஒரு கோலை போட்டது.

இருக்கையில் இருந்த ரொனால்டோ 72ஆவது நிமிடத்தில் பதில் வீரராக மைதானம் வந்தபோதும் கூடியிருந்த ரசிகர்கள் பெரும் கரகோசத்துடன் வரவேற்றனர். அவர் அடித்த கோல் ஓப் சைட் என நடுவர் நிராகரித்தார்.

2006இல் ஜெர்மனியில் நடந்த உலகக் கிண்ணத்திற்குப் பின்னர் போர்த்துக்கல் அணி நொக் அவுட் போட்டியில் வெல்வது இது முதல் முறையாகும். அந்த அணி 2014 உலகக் கிண்ணத்தில் குழு நிலையிலேயே வெளியேறியதோடு 2010, 2018 தொடர்களில் 16 அணிகள் சுற்றில் வெளியேறியது.

ஸ்பெயினை வீழ்த்தி வரலாறு படைத்தது மொரோக்கோ

ஸ்பெயினுக்கு எதிரான நொக் அவுட் சுற்றில் பெனால்டி சூட் அவுட் முறையில் 3-0 என வெற்றியீட்டிய மொரோக்கோ அணி உலகக் கிண்ணத்தில் முதல் முறை காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது.

கட்டாரின் கல்வி நகர அரங்கில் செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்ற போட்டியின் முழுநேரம் மற்றும் வழங்கப்பட்ட அரை மணி மேலதிக நேரத்தில் இரு அணிகளாலும் கோல் புகுத்த முடியாத நிலையிலேயே முடிவை தீர்மானிக்க பெனால்டி சூட் அவுட் முறைக்கு ஆட்டம் சென்றது.

எனினும் முன்னாள் உலக சம்பியனும் பலம்மிக்க அணியுமான ஸ்பெயின் ஒரு ஸ்பொட் கிக்கைக் கூட வலைக்குள் செலுத்தவில்லை. பப்லோ சரபி, கார்லொஸ் மற்றும் செர்கியொ புக்குட் உதைத்த பெனால்டி சூட் அவுட்களை மொரோக்கோ கோல் காப்பாளர் யாசின் பவுனு அபாரமாகத் தடுத்தார்.

ஆண்களின் உலகில் கால் பதித்த முதல் பெண் நடுவர்

இதனால் மொரோக்கோவுக்கான வெற்றி ஸ்பொட் கிக்கை அஷ்ரப் ஹகிமி உதைத்தது மற்றொரு சிறப்பம்சமாகும். பீ.எஸ்.ஜி. கழக வீரரான ஹகிமி ஸ்பெயினில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 1986க்கு பின்னர் உலகக் கிண்ணத்தில் நொக் அவுட் சுற்றில் களமிறங்கிய மொரோக்கோ அணியின் தற்காப்பு போட்டி முழுவதும் வலுவாக இருந்தது. முதல் பாதியில் ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியபோதும் மொரோக்கோவின் அரணை முறியடிக்க முடியவில்லை.

முதல் பதியில் சிறந்த வாய்ப்பு ஒன்று மொரோக்கோவுக்கே கிடைத்தது. அந்த அணியின் பின்கள வீரர் நயேப் அகுவேர் நெருக்கமான தூரத்தில் இருந்து தலையால் முட்டிய பந்து பட்டும் படாமலும் சென்றது.

2010 உலக சம்பியன் ஸ்பெயின் இரண்டாவது பாதியிலும் அதிக நேரம் பந்தை தன்வசம் வைத்து ஆக்கிரமித்ததை பார்க்க முடிந்தது. எனினும் இரண்டாவது பாதியில் மொரோக்கோவுக்கு குறைந்தது இரண்டு கோல் வாய்ப்புகள் நுலிழையில் தவறியது குறிப்பிடத்தக்கதாகும்.

எனினும் 123ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கியது. எதிரணி கோல் கம்பத்திற்கு அருகில் பப்லோ சலபியாவின் கால்களுக்கு வந்த பந்தை அவர் வேகமாக உதைத்தபோது அது கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.