“சுபர் 4” சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி இலகு வெற்றி

265
Image Courtesy - AFP

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின், இரண்டாம் கட்டப் போட்டிகளான “சுபர் 4” சுற்றின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை இந்தியா 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலகு வெற்றி ஒன்றைப் பதிவு செய்தது.

ஆசியக் கிண்ணத் தொடரின் லீக் ஆட்டங்கள் அனைத்தும் வியாழக்கிழமை (20) நிறைவடைந்து லீக் போட்டிகளின் புள்ளிகள் பட்டியலில் இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே ”சுபர் 4” சுற்று இடம்பெற்று வருகின்றது. இந்த “சுபர் 4” சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி, பங்களாதேஷை டுபாய் மைதானத்தில் வைத்து எதிர்கொண்டிருந்தது.

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியை போராடி வென்றது பாகிஸ்தான்

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பங்களாதேஷ் அணிக்கு வழங்கியிருந்தார். இதன்படி துடுப்பாட தயராகியிருந்த பங்களாதேஷ் அணி ஆப்கானுடனான தமது இறுதிப் போட்டியில் ஓய்வை வழங்கியிருந்த முஷ்பிகுர் ரஹீம், முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகிய இரண்டு முக்கிய வீரர்களையும் இணைத்து போட்டியை ஆரம்பித்தது.

பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான லிடன் தாஸ், நஸ்முல் ஹொசைன் ஆகிய இருவரும் இந்திய அணியின் புவ்னேஸ்வர்குமார், ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பத்து ஓட்டங்களைக் கூட தாண்டாது மைதானத்தை விட்டு வெளியேறினர்.

பின்னர் சகீப் அல் ஹஸன், முஷ்பிகுர் ரஹீம் ஆகியோரின் விக்கெட்டுக்களை இந்திய ஒரு நாள் அணியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இடம்பிடித்த ரவிந்திர ஜடேஜா தகர்த்தார். சகீப் அல் ஹஸன் 17 ஓட்டங்களுடனும், முஷ்பிகுர் ரஹீம் 21 ஓட்டங்களுடனும் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

தொடர்ந்து பங்களாதேஷ் அணியின் மத்திய வரிசையும் சரிவினைக் காட்டியது. நம்பிக்கை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட மஹ்மதுல்லாஹ் 25 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் மஷ்ரபி மொர்தஸா 26 ஓட்டங்களையும் குவித்து ஏமாற்றியிருந்தனர்.

இதனை அடுத்து மிகவும் இக்கட்டான நிலைக்குச் சென்ற பங்களாதேஷ் அணிக்கு மெஹிதி பெற்றுக்கொடுத்த 42 ஓட்டங்களே ஆறுதலாக இருந்தது. மெஹிதி ஹஸனின் பங்களிப்போடு பங்களாதேஷ் அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 173 ஓட்டங்களை மட்டுமே குவித்தது.

இந்திய அணியின் பந்துவீச்சு சார்பாக ரவீந்திர ஜடேஜா 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், புவ்னேஸ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 174 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி, 36.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 174 ஓட்டங்களை பெற்றவாறு இலக்கை அடைந்தது.

இந்திய அணியின் வெற்றிக்காக இறுதிவரை ஆட்டமிழக்காது நின்று பங்களிப்புச் செய்த ரோஹித் சர்மா 104 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 83 ஓட்டங்களை குவித்திருந்ததுடன், ஷிக்கர் தவான் 40 ஓட்டங்களையும், மஹேந்திர சிங் டோனி 33 ஓட்டங்களையும் பெற்று தமது தரப்பின் வெற்றிக்கு ஏனைய வீரர்களாக உதவியிருந்தனர்.

இலங்கை வரும் இங்கிலாந்து டெஸ்ட் குழாமில் மூன்று புதுமுக வீரர்கள்

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் மஷ்ரபி மொர்தஸா, சகீப் அல் ஹஸன், ருபெல் ஹொசைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்த போதிலும் அது அவர்களது தரப்பிற்கு ஆட்டத்தில் வெற்றி பெற போதுமாக அமைந்திருக்கவில்லை.

இப்போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் இந்திய அணி, “சுபர் 4” சுற்றின் தமது அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணியை ஞாயிற்றுக்கிழமை (23) எதிர்கொள்ளவுள்ளதுடன், அதேநாளில் பங்களாதேஷ் அணி ஆப்கான் அணியையும் எதிர்கொள்கின்றது. போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் – 173 (49.1) – மெஹிதி ஹஸன் 42(50), ரவீந்திர ஜடேஜா 29/4(10), புவ்னேஸ்வர் குமார் 32/3(10), ஜஸ்பிரிட் பும்ரா 37/3(9.1)

இந்தியா – 174/3 (36.2) – ரோஹித் சர்மா 83*(104), ஷிக்கர் தவான் 40(47), மஹேந்திர சிங் டோனி 33(37), ருபெல் ஹொசைன் 21/1(5)

முடிவு – இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<