பேலின் கடைசி நேர கோலால் தப்பித்த வேல்ஸ்; இங்கிலாந்து இலகு வெற்றி

FIFA World cup 2022

168

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் கரேட் பேல் பெற்ற பெனால்டி கோல் மூலம் வேல்ஸ் தோல்வியை தவிர்த்துக் கொண்டது. அதேபோன்று, இங்கிலாந்து இலகு வெற்றியையும், நெதர்லாந்து இறுதி நேரத்திலும் வெற்றியை உறுதி செய்துகொண்டது.  

வேல்ஸ் எதிர் அமெரிக்கா

அஹமது பின் அலி அரங்கில் இலங்கை நேரப்படி செவ்வாய்க்கிழமை (22) அதிகாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் துடிப்பான அமெரிக்க அணி 36 ஆவது நிமிடத்தில் கோல் புகுத்தி முன்னிலை பெற்றது. டிம் வே அந்த கோலை புகுத்தினார்.

64 ஆண்டுகளின் பின் உலகக் கிண்ணத்தில் களமிறங்கிய வேல்ஸ் அணி தோல்வியை நெருக்கும் நிலையில், பந்தை கோலை நோக்கி கொண்டுவந்த பேல்லை அமெரிக்க அணி பின்கள வீரர் வோகர் சிம்மர்மான் கீழே வீழ்த்த, 82 ஆவது நிமிடத்தில் வேல்ஸ் அணிக்கு பெனால்டி கிட் வாய்ப்பு கிட்டியது.

>> உலகக் கிண்ணத்தை நடத்தும் கட்டார் ஆரம்பப் போட்டியில் தோல்வி

>> அல் அக்ஸாவை வீழ்த்தி யாழ் மத்தி இறுதிப் போட்டிக்கு தெரிவு

இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட பேல் போட்டியை 1–1 என சமநிலை செய்தார்.

இந்த உலகக் கிண்ணத்தில் இரண்டாவது இளமையான அணியுடன் களமிறங்கி இருக்கும் அமெரிக்கா ஆரம்பத்தில் வேகமாக ஆடியதன் உதவியோடே போட்டியின் பெரும்பாலான நேரத்தில் முன்னிலை பெற முடிந்தது. எனினும் வேல்ஸ் இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.

இந்நிலையில் பி குழுவில் வேல்ஸ் அடுத்து வரும் வெள்ளிக்கிழமை (25) ஈரானை எதிர்கொள்ளவிருப்பதோடு, அமெரிக்க அணி இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

கடைசி நிமிட கோல்களால் நெதர்லாந்து வெற்றி

செனகலுக்கு எதிரான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் கடைசி நிமிட கோல்கள் மூலம் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

A குழுவுக்காக கட்டாரின் அல் துமாமா அரங்கில் திங்கட்கிழமை (21) நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதி இரு அணிகளும் கோல் பெறாமல் இழுபறியுடன் முடிவுக்கு வந்தது.

இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலும் இதே நிலைமை நீடித்தது. எனினும் 83 ஆவது நிமிடத்தில் டி ஜொங்ஸ் உயர பரிமாற்றிய பந்தை செனகல் கோல் எல்லைப் பகுதிக்குள் இருந்த கொடி காக்போ (Cody Gakpo) உயரப் பாய்ந்து தலையால் முட்டி வலைக்குள் வெலுத்தினார்.

இந்த கோலை அடுத்து கடைசி நிமிடங்களில் பதில் கோல் திருப்ப செனகல் வீரர்கள் அவசரம் காட்டினார்கள். எனினும் வழங்கப்பட்ட மேலதிக நேரத்தில் நெதர்லாந்து இரண்டாவது கோலையும் புகுத்தி வெற்றியை உறுதி செய்தது. பதில் வீரராக வந்த டாவி கிளாசன் அந்த கோலை புகுத்தினார்.

2014ஆம் ஆண்டுக்குப் பின்னரே நெதர்லாந்து அணி உலகக் கிண்ணப் போட்டியில் ஆடுவதோடு, செனகல் அணி தமது நட்சத்திர வீரர் சாடியோ மானெ இன்றியே உலகக் கிண்ணத்தில் பங்கேற்றுள்ளது.

ஈரானுக்கு எதிராக இங்கிலாந்து கோல் மழை

ஈரானுக்கு எதிரான உலகக் கிண்ண கால்பந்து ஆரம்ப சுற்றுப் போட்டியில் கோல் மழை பொழிந்த இங்கிலாந்து அணி 6-2 என்ற கோல்கள் கணக்கில் இலகு வெற்றியீட்டியது.

>> புதிய சாதனைகளுடன் FIFA உலகக் கிண்ணம் 2022 ஆரம்பம் ! | FOOTBALL ULAGAM

B குழுவுக்காக கட்டாரின் கலீபா சர்வதேச அரங்கில் நடைபெற்ற (21) போட்டியில் 35 ஆவது நிமிடம் தொடக்கம் இங்கிலாந்து அணி இடைவிடாது கோல் புகுத்த ஆரம்பித்தது. பெலிங்கம் (35), சாகா (43, 62), ஸ்டர்லிங் (45+1), ரஷ்போர்ட் (71) மற்றும் கிரேலிஷ் (89) ஆகியோர் கோல்கள் பெற்றனர்.

உலக கால்பந்து தரவரிசையில் ஆசியாவில் முதலிடம் (20) வகிக்கும் ஈரான், தனது தற்காப்பு தொடக்கம் முன்களம் வரை மைதானத்தின் அனைத்து பக்கமும் பின்னடைவையே சந்தித்தது. தரேமி 65 ஆவது நிமிடத்திலும் மேலதிக நேரத்திலும் கோல்களை புகுத்தியபோதும் இங்கிலாந்துக்கு அது எந்த நெருக்கடியையும் கொடுக்கவில்லை.

போட்டியில் கிட்டத்தட்ட 80 வீதமான நேரம், பந்து இங்கிலாந்து வீரர்களின் கால்களிலேயே சுழன்றது.

எனினும் போட்டியின் முதல் பாதியில் ஈரான் கோல் காப்பாளர் பெய்ரன்ட்வான்டின் தலையில் ஏற்பட்ட காயத்தால் வெளியேறியது அந்த அணிக்கு பின்னடைவாக இருந்தது.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<