இங்கிலாந்தின் கனவை தகர்த்து குரோஷியா முதல் முறை உலகக் கிண்ண இறுதியில்

204
Image Courtesy - Reuters
 

இங்கிலாந்துடனான பரபரப்பான அரையிறுதிப் போட்டியின் மேலதிக நேரத்தில் கோல் பெற்ற குரோஷிய அணி 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிரான்ஸுடனான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட தகுதி பெற்றுள்ளது.

ஜுவண்டஸ் முன்கள வீரர் மாரியோ மன்சுகிக் 109 ஆவது நிமிடத்தில் பெற்ற அபார கோல் வெறுமனே நான்கு மில்லியன் மக்கள் தொகை கொண்ட குறுகிய வரலாற்றை உடைய குரோஷியாவை முதல் முறை உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறச் செய்தது.

பெல்ஜியத்தை வீழ்த்தி பிரான்ஸ் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி

மறுபுறம் 1966 ஆம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் ஒருமுறை உலகக் கிண்ணத்தை வெல்லும் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த இங்கிலாந்து இரண்டாவது முறையாகவும் உலகக் கிண்ண அரையிறுதியுடன் வெளியேறியது.

இதன்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 15) மொஸ்கோ லுஸ்னிக்கி அரங்கில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் குரோஷிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதற்கு முன்னதாக சனிக்கிழமை (ஜூலை 14) செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் நடைபெறவிருக்கும் மூன்றாவது இடத்தை தீர்மானிக்கும் போட்டியில் இங்கிலாந்துடன் பெல்ஜியம் அணி மோதும்.

மொஸ்கோவில் ரஷ்ய நேரப்படி புதன்கிழமை (11) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து அணி அதிரடி கோல் ஒன்றை பெற்று ஸ்திரமான நிலையை எட்டியது.

குரோஷிய வீரர் லூகா மொட்ரிக் செய்த தவறால் இங்கிலாந்து அணிக்கு போட்டியின் 5 ஆவது நிமிடத்திலேயே ப்ரீ கிக் ஒன்று கிடைத்தது. 20 யார் தூரத்தில் இருந்து அந்த ப்ரீ கிக்கை உதைத்த கீரன் டிரிப்பியர் குரோஷிய கோல்காப்பாளருக்கு பிடிக்க முடியாமல் மேலால் பந்தை வலைக்குள் செலுத்தினார்.

2006 ஆம் ஆண்டு ஈக்வடோருக்கு எதிராக டேவிட் பெக்கம் ப்ரீ கிக் மூலம் நேரடி கோல் ஒன்றைப் பெற்ற பின் உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்துக்காக அவ்வாறு நேரடி கோல் பெற்றவர் டிரிப்பியர் ஆவார். அதேபோன்று 1958 இற்கு பின்னர் உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டி ஒன்றில் பெறப்பட்ட மிக வேகமான கோலாகவும் இது இருந்தது.

ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற இங்கிலாந்து முதல் பாதி முழுவதும் அந்த முன்னிலையை தற்காத்துக் கொள்ளும் நோக்கிலேயே ஆடியது. இதன்போது குரோஷிய அணி அதிக முறை இங்கிலாந்து கோல் எல்லையை ஆக்கிரமித்தபோதும் அதனால் கோல் பெற முடியாமல்போனது. எனினும் முதல் பாதியில் இங்கிலாந்து அணித் தலைவர் ஹெரி கேனுக்கு கோல் ஒன்றை பெறும் பொன்னான வாய்ப்பு தவறிப்போனமை குறிப்பிடத்தக்கது.

முதல் பாதி: இங்கிலாந்து 1 – 0 குரோஷியா

காலிறுதியில் சுவீடனை வீழ்த்திய அதே அணி வரிசையுடனேயே இங்கிலாந்து அரையிறுதியில் களமிறங்கியபோது குரோஷியா அன்ட்ரெஜ் கரமரிக்கிற்கு பதில் இன்டர் மிலானின் மார்செலோ ப்ரோசோவிக்கை களமிறக்கி இருந்தது.

இரண்டாவது பாதியில் குரோஷியா தொடர்ந்து ஆக்கிரமிப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியபோது இங்கிலாந்து அணியின் உற்சாகம் குறைந்தது. 68 ஆவது நிமிடத்தில் சிம் வ்சல்கோ கச்சிதமாக வழங்கிய பந்தை இவான் பெரசிக் வலைக்குள் தட்டிவிட்டார். இதன் மூலம் போட்டியை 1-1 என சமநிலைக்கு கொண்டுவந்த குரோசஷியா இங்கிலாந்துக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது.

72 ஆவது நிமிடத்தில் பெரசிக் உதைத்த பந்து இங்கிலாந்து கோல்காப்பாளரையும் தாண்டி கோல் கம்பத்தில்பட்டு வெளியேறியது. இதனால் முழுநேர ஆட்டம் முடியும்போது இரு அணிகளும் தலா ஒரு கோலை பெற்றிருந்ததால் போட்டி மேலதிக அரைமணி நேரத்திற்கு சென்றது.

லிதுவேனியாவிடம் போராடி வீழ்ந்தது இலங்கை B அணி

குரோஷிய அணி இம்முறை உலகக் கிண்ணத்தின் 16 அணிகள் சுற்று மற்றும் காலிறுதிப் போட்டியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வென்ற நிலையில் அரையிறுதி ஆட்டத்தையும் மேலதிக நேரத்திற்கு இட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: இங்கிலாந்து 1 – 1 குரோஷியா

அடுத்த அரை மணி நேரத்தில் கோல் ஒன்றை பெற்றால் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இரு அணிகளும் பந்தை தக்கவைத்துக்கொள்ள கடுமையாக போராடின. 99 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு கிடைத்த கோனர் கிக் மூலம் ஜோன் ஸ்டோன் கோலை நோக்கி தலையால் முட்டியபோது குரோஷிய பின்கள வீரர் கடைசி நேரத்தில் அதனை தடுத்தார். அதேபோன்று 105 ஆவது நிமிடத்தில் பெரசிக் பரிமாற்றிய பந்தை மன்சுகிக் கோல் கம்பத்திற்கு நெருங்கிய தூரத்தில் இருந்து உதைத்தபோது இங்கிலாந்து கோல்காப்பாளர் பிக்போர்ட் அரணாக இருந்து அதனை தடுத்தார்.

எனினும் 109 ஆவது நிமிடத்தில் பெரசிக் தலையால் முட்டிய பந்து வலையை நெருங்கிச் சென்றபோது அங்கு விரைவாக வந்த மன்சுகிக் இங்கிலாந்து கோல்காப்பாளருக்கு தடுக்க முடியாமல் வேகமாக வலையை நோக்கி உதைத்தார். இதன் மூலம் குரோஷிய அணிக்கு வெற்றி கோலை பெறமுடிந்தது.

குரோஷிய அணி ஐந்து முறை உலகக் கிண்ண தொடரில் பங்கேற்றிருந்தபோதும் அது முதல் முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பதோடு 1950 ஆம் ஆண்டு உருகுவேயுக்கு பின்னர் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மிகச் சிறிய நாடாகவும் பதிவாகியுள்ளது.

மேலதிக நேரம்: இங்கிலாந்து 1 – 2 குரோஷியா

கோல் பெற்றவர்கள்

இங்கிலாந்து – கீரன் டிரிப்பியர் 5′

குரோஷியா – இவான் பெரசிக் 68′, மாரியோ மன்சுகிக் 109′

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<