லிதுவேனியாவிடம் போராடி வீழ்ந்தது இலங்கை B அணி

865

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள லிதுவேனிய கால்பந்து அணி இன்று (11) இடம்பெற்ற இலங்கை B அணியுடனான நட்பு ரீதியிலான போட்டியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டுள்ளது.  

இலங்கை தேசிய அணியுடனான, இந்த தொடரின் முதல் போட்டியை எந்தவித கோல்களும் இன்றி சமநிலையில் முடித்த லிதுவேனிய அணி முதல் போட்டி இடம்பெற்ற கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் இலங்கை B அணியை எதிர்கொண்டது.

ஆட்டம் ஆரம்பித்து முதல் நிமிடத்திலேயே லிதுவேனிய அணியின் எல்லையின் வலது புறத்தில் இலங்கை வீரர்களுக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை கொழும்பு கால்பந்து அணி வீரர் டிலான் டி சில்வா பெற்றார். அவர் உதைந்த பந்தை அணித் தலைவர் பண்டார வரகாகொட ஹெடர் செய்ய, பந்து கம்பங்களை விட்டு வெளியே சென்றது.

லிதுவேனியாவை எதிர்கொள்ளவுள்ள இலங்கை B அணி அறிவிப்பு

நட்பு ரீதியிலான கால்பந்து தொடரில் பங்கு…….

ஆட்டத்தின் 16ஆவது நிமிடத்தில் பெனால்டி பெட்டிக்கு சற்று வெளியில் கோலுக்கு நேர் எதிரே லிதுவேனிய அணிக்கு கிடைத்த ப்ரீ கிக்கை அவ்வணியின் எலியோசியஸ் பெற்றார். அவர் உதைந்த பந்து கம்பங்களை விட உயர்ந்து வெளியே சென்றது.

அடுத்த நிமிடம் லிதுவேனிய அணியின் பின்கள வீரரினால் மேற்கொள்ளப்பட்ட தவறின்போது பந்தைப் பெற்ற இலங்கை வீரர்கள் அதனை எதிரணியின் கோல் எல்லைக்குள் கொண்டு சென்ற போதும், அவர்களால் சிறந்த நிறைவை மேற்கொள்ள முடியாமல் போனது.

22ஆவது நிமிடத்தில் லிதுவேனிய முன்கள வீரர்களுக்கிடையில் இடம்பெற்ற சிறந்த பந்துப் பரிமாற்றத்தின் பின்னர் எலியோசியஸ் கோலுக்கு உதைந்த பந்து வலது புற கம்பத்தில் பட்டு வெளியே வந்தது. இதன்போது, இலங்கை அணியின் பின்கள வீரர்களால் ஹெடர் மூலம் பந்து மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது.

அடுத்த சில நிமிடங்களில் லிதுவேனிய வீரர்கள் மைதானத்தில் பல திசைகளிலிருந்தும் இலங்கை தரப்பின் கோல் திசைக்கு தொடர்ச்சியாக செலுத்திய பந்துகளை இலங்கை அணித் தலைவரும் இராணுவப்படை விளையாட்டுக் கழகத்தின் அனுபவம் வாய்ந்த பின்கள வீரருமான பண்டார வரகாகொட மற்றும் மதுரங்க பெரேரா ஆகியோர் தடுத்து திசை திருப்பினர்.

ஆட்டத்தின் 30ஆவது நிமிடத்தில் இலங்கை அணியின் கோலுக்கு அண்மையில் இரு அணி வீரர்களுக்கு இடையிலும் மேற்கொள்ளப்பட்ட உதைகள் மற்றும் தடுப்புகளுக்குப் பின்னர் தன்னிடம் வந்த பந்தை லிதுவேனிய வீரர் டொங்கஸ் லொரீனாஸ் இலகுவாக கோலுக்குள் செலுத்தி தமது அணியை முன்னிலைப்படுத்தினார்.

Photos: International Friendlies Football – Sri Lanka Vs Lithuania – Day 1

Title International Friendlies – Sri Lanka Vs Lithuania – Day 1……

இலங்கைக்கான இந்த சுற்றுத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை தேசிய அணியுடன் கோல்கள் இன்றி ஆட்டத்தை நிறைவு செய்தமையினால், லிதுவேனிய அணி தொடரில் பெற்ற முதல் கோலாக லொரீனாஸின் கோல் பதிவானது.

முதல் கோல் பெற்று அடுத்த நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து பந்தைப் பரித்த சஹீல், அதனை மொஹமட் ரிஸ்கானுக்கு வழங்கினார். ரிஸ்கான் வலது புறத்தில் இருந்து கோல் நோக்கி உதைந்த பந்து எதிர் திசைக்கு செல்ல அந்த முயற்சியிலும் எந்தவித பயனும் இல்லாமல் போனது.

37ஆவது நிமிடத்தில் எதிரணியின் பெனால்டி எல்லைக்கு வெளியில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை மீண்டும் டிலான் பெற்றார். குறைந்த அளவிலான உயரத்தில் உள்ளனுப்பிய பந்தை வரகாகொட ஹெடர் செய்தார். எனினும் பந்து வெளியே சென்றது.

எனவே, ஒரு கோலுடன் முதல் பாதி ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

முதல் பாதி: லிதுவேனியா 1 – 0 இலங்கை B

இரண்டாவது பாதி ஆரம்பிக்கும்பொழுது இலங்கை அணியின் அமான் பைசர் மைதானத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக நியு யங்ஸ் அணி வீரர் ஹசித்த பிரியன்கர களத்திற்குள் நுழைந்தார்.

இரண்டாவது பாதியின் முதல் முயற்சியாக லிதுவேனிய வீரர்களால் உள்ளனுப்பப்பட்ட பந்தை லொரீனாஸ் ஹெடர் செய்தபோது பந்து கம்பங்களை விட உயர்ந்து வெளியேறியது.

லிதுவேனியாவுடனான மோதலை சமநிலையில் முடித்த இலங்கை

கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் இன்று……

ஆட்டத்தின் 59ஆவது நிமிடத்தில் லிதுவேனிய வீரர்களுக்கு கிடைத்த ப்ரீ கிக்கின்போது எலியோசியஸ் உள்ளனுப்பிய பந்தை அனைத்து வீரர்களுக்கும் பின்னால் இருந்த லுகாஸ் தலையால் முட்டி கோலுக்குள் செலுத்தினார். இதனால் ஆட்டத்தின் இரண்டாவது கோலையும் தொடரின் விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர்.

இந்தப் பாதியில் இலங்கை அணி பெற்ற மிகவும் சிறந்த வாய்ப்பாக பின்களத்தில் இருந்து பந்தைப் பெற்ற ஹர்ஷ பெர்னாண்டோ, அதனை மத்திய களத்தில் இருந்த நவீன் ஜூட்டிடம் வழங்கினார். நவீன் அதனை எதிரணியின் கோல் எல்லை வரை எடுத்துச் சென்று, கோல் திசையில் இருந்த வீரருக்கு பரிமாற்றம் செய்கையில் பந்து லிதுவேனிய கோல் காப்பாளரின் கைகளுக்கே சென்றது.

மீண்டும் கவிது இஷான் பந்தைப் பெற்று எதிரணியின் கோல் எல்லைக்குள் எடுத்துச் சென்று உள்ளனுப்பினார். எனினும், அங்கே பந்தைப் பெறுவதற்கு இலங்கை அணியின் எந்தவொரு வீரரும் இல்லாமல் இருந்ததால் கோலுக்கான வாய்ப்பு வீணானது.

ஆட்டத்தின் 90ஆவது நிமிடத்தில் மைதானத்தின் மத்தியில் இலங்கைக்கு கிடைத்த ப்ரீ கிக்கை பின்கள வீரர் லிஹிரு தாரக பெற்றார். மிக நீண்ட தூரம் அவர் உதைந்த பந்து லிதுவேனிய கோல் எல்லைக்கு அருகில் செல்ல, அதனை அவ்வணியின் கோல் காப்பாளர் க்ரபிகாஸ் பாய்ந்து பிடித்தார்.

போட்டியின் இறுதி முயற்சியாக எதிரணியின் மத்திய களத்தில் இருந்து கிடைத்த ப்ரீ கிக்கை கவிது இஷான் கோல் நோக்கி உதைய, பந்து கம்பங்களை விட சற்று உயர்ந்து வெளியே சென்றது.

முழு நேரம்: லிதுவேனியா 2 – 0 இலங்கை B

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – லொரீனாஸ் டொங்கஸ் (லிதுவேனியா)

கோல் பெற்றவர்கள்

லிதுவேனியா – லொரீனாஸ் டொங்கஸ் 30′, A. லுகாஸ் 59′

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<