FA கிண்ண புத்தளம் மாவட்ட சம்பியனாக மகுடம் சூடிய லிவர்பூல் அணி

436

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள 2018ஆம் ஆண்டு பருவகாலத்திற்கான FA கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் புத்தளம் மாவட்டத்திற்கான இறுதிப் போட்டியில் கல்பிட்டி பேல்ஸ் விளையாட்டுக் கழகத்தை பெனால்டி முறையில் 2-0 என வெற்றி கொண்ட லிவர்பூல் விளையாட்டுக் கழகத்தினர் மாவட்ட சம்பியன்களாக முடிசூடிக்கொண்டனர்.

அரையிறுதிப் போட்டிகளில் நியூ ப்ரன்ஸ் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்திய லிவர்பூல் கழகமும், யாழ் யுனைடட் விளையாட்டுக் கழகத்தினை வீழ்த்திய பேல்ஸ் அணியும் FA கிண்ண மாவட்ட இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தன.

நடப்பு சம்பியன் ஜெர்மனியின் உலகக் கிண்ண குழாம் அறிவிப்பு

இறுதியாக இடம்பெற்ற உலகக் கிண்ணத்தை வெல்லும்…

புத்தளம் தில்லையடி முஸ்லிம் வித்தியாலய மைதானத்தில் நேற்று (15) மாலை இடம்பெற்ற இந்த ஆட்டத்தினை பார்வையிட பெருந்திரலான உதைப்பந்தாட்ட ரசிகர்கள் மைதானத்தை முழுமையாகச் சூழ்ந்திருந்தனர்.

ஆட்டத்தின் ஆரம்பத்தில் லிவர்பூல் கழகத்தின் ஆதிக்கம் அதிகரித்திருந்தது. பந்து தட்டப்பட்ட கனமே லிவர்பூல் அணியின் நஸ்ரி கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை பெற்ற நஸீம் கம்பம் நோக்கி அடிக்க அதை பேல்ஸ் கோல்காப்பாளர் ரிபாய் நேர்த்தியாகத் தட்டிவிட்டார்

பின்னர் லிவர்பூலின் வேகமான ஆட்டம் சற்று குறைவடைய சுதாகரித்துக் கொண்ட பேல்ஸ் கழகம் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் போராடியது. இதனால் ஆட்டத்தின் 13ஆவது நிமிடத்தில் பேல்ஸ் அணியின் ரிஸ்கான் கொடுத்த சாதூர்யமான பரிமாற்றத்தின்போதுஅல்தாப் பந்தைப் பெற்று கம்பத்தின் இடப்புறத்தினூடான வெளியில் அடித்து வாய்ப்பை வீணடித்தார்.

மேலும் 5 நிமிடங்களில் லிவர்பூல் வீரர் அலி கொடுத்த இலகுவான கோலுக்குறிய பந்துப் பரிமாற்றத்தினை நஸ்ரி பெற்ற போதிலும் அவரால் அந்த வாய்ப்பை கோலாக்க முடியாமல் போக லிவர்பூல் ரசிகர்கள் அதிர்ச்சியில் உரைந்தனர்.

இரு கோல் கம்பங்களுக்கும் பந்து சென்று வந்த வண்ணமிருக்க போட்டியின் 29ஆவது நிமிடத்தில் பேல்ஸ் முன்கள வீரர் சர்பான் கொடுத்த சிறப்பான பந்துப் பரிமாற்றத்தை அஸ்பாக் பெற்று, எதிரணியின் கோல் கம்பம் நோக்கி முன்னேறினார். இதன்போது லிவர்பூலின் தடுப்பு வீரர் தஸ்ரிம் பந்தை சிறப்பாகத் தடுத்து பந்தை வெளியேற்றினார்

முதல் பாதியின் இறுதி முயற்சியாய் லிவர்பூலின் தடுப்பு வீரரான தஸ்ரிம் மிக வேகமான தம் பகுதியிலிருந்து பந்தை எடுத்து வந்து மைதானத்தின் மத்திய பகுதியிலிருந்து எதிரணியின் கம்பம் நோக்கி உயர்த்தி அடித்தார். பந்து கம்பத்தின் மேலால் சென்று ஏமாற்ற முதல் பாதியின் இறுதி முயற்சியும் வீணாகிப் போனது.  

முதல் பாதி: லிவர்பூல் 0 – 0 பேல்ஸ்

முதல் பாதியில் இரு கழகத்தின் ஆதிக்கமும் சமவிகிதத்தில் இருக்க, வெற்றியைத் தீர்மானிக்கும் இரண்டாம் பாதி அனைவரின் எதிர்பார்ப்பையும் அதிகமாய் தூண்டியது.  

இரண்டாம் பாதியில் பந்து தட்டப்பட்டு 3 நிமிடங்கள் கடந்த நிலையில் பேல்ஸ் வீரர் அஸ்பாக் கொடுத்த நேர்த்தியாக பந்துப் பரிமாற்றத்தை ரிஸ்கான் பெற்ற போதும், இலகுவான கோல் வாய்ப்பை கம்பத்திற்கு வெளியே அடித்து ஏமாற்றினார்.

  • சம்பியன் கிண்ணத்தைப் பெறும் லிவர்பூல் அணியின் தலைவர்

பின்னர் 54ஆவது நிமிடத்தில் லிவர்பூல் முன்கள வீரர் அலி தனக்கு கிடைத்த பந்துடன் மிக வேகமாக பேல்ஸின் தடுப்பு வீரர்களின் தடைகளை மீறி பெனால்டி பகுதிக்குள் நுழைந்து கோல் நோக்கி அடிக்க, பந்தை ரிபாய் மிகத் திறமையாகத் தட்டி வெளியேற்றினார்.

பின்னர் 74ஆவது நிமிடத்தில் லிவர்பூல் அணிக்கு கிடைத்த கோணர் வாய்ப்பை ஹம்ருஸைன் உயர்த்தி அடிக்க ரியாய் தன் கையால் பந்தை தட்டிவிட்டார். பந்து லிவர்பூல் வீரர் நப்ரியின் கால்களில் தஞ்சமடைய அதை அவர் வேகமாக கம்பத்தினுள் அடித்து போட்டியின் முதல் கோலை போட்டு லிவர்பூல் அணியை முன்னிலைப்படுத்தினார்.

உலகக் கிண்ணத்திற்கான ரொனால்டோவின் போர்த்துக்கல் குழாம் அறிவிப்பு

உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கு..

பின்னர் ஆட்டம் முடிவடையும் இறுதி நிமிடத்தில் பேல்ஸ் கழகத்திற்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை ரில்வான் உயர்த்தி அடித்தார். இதன்போது, உயரே எழுந்த சும்ரி பந்தை தலையால் முட்டி கம்பத்தின் வலப் புறத்தினூடாக கோலுக்குள் அனுப்பி பதில் கோலைப் போட்டு இறுதித் தருவாயில் எதிரணிக்கு சவால் கொடுத்தார்.

முழு நேரம்: லிவர்பூல் 1 – 1 பேல்ஸ்

முழு நேர ஆட்டம் சமநிலையில் நிறைவுபெற, இறுதிப் போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக பெனால்டி உதை வழங்கப்பட்டது. இதன் முதல் வாய்ப்பு புத்தளம் லிவர்பூல் கழகத்திற்கு வழங்கப்பட்டது.

லிவர்பூல் கழகம்

  1. ரஸ்வான் அடித்த பந்து கம்பத்திற்கு வெளியால் சென்றது.
  2. நப்ரி கம்பத்தின் வலப் பக்கத்தினூடாக பந்தை உள்ளனுப்பி கோலாக்கினார்.
  3. அலி அடித்த பந்தை ரியாய் நேர்த்தியாகத் தடுத்தார்.
  4. ஹம்ருஸைன் கம்பத்தின் இடப்பக்கத்தினூடாக உள்ளனுப்பி கோலாக்கினார்.

பேல்ஸ் கழகம்.

  1. ரில்வான் அடித்த பந்தை பரோஸ் சிறப்பாகத் தடுத்தார்.
  2. அஸ்பாக் பந்தை கம்கத்திற்கு வெளியே அடித்தார்.
  3. ரிஸ்கானும் பந்தை கம்பத்தின் வெளியில் அடித்தார்.
  4. சும்ரி அடித்த பந்தும் கம்பத்தை விட்டு வெளியேறியது.

பெனால்டி முடிவு: லிவர்பூல் 2 – 0 பேல்ஸ்

 >> புகைப்படங்களைப் பார்வையிட << 

இறுதியில் பெனால்டி மூலம் புத்தளம் லிவர்பூல் கழகம் 2 – 0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று FA கிண்ணத் தொடரின் அடுத்த கட்டப் போட்டிகளுக்கு புத்தள மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது.  

புத்தளம் மாவட்டத்தின் மற்றொரு அணியான விம்பில்டன் விளையாட்டுக் கழகம் இம்முறை FA கிண்ணத் தொடரின் 32 அணிகள் பங்கு கொள்ளும் சுற்றில் இருந்து தமது போட்டிகளை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோல் பெற்றவர்கள்

லிவர்பூல் விளையாட்டுக் கழகம் – மொஹமட் நப்ரி 73’
பேல்ஸ் விளையாட்டுக் கழகம் – மொஹமட் சும்ரி 79’

மஞ்சள் அட்டைகள்  

லிவர்பூல் விளையாட்டுக் கழகம் – நஸ்ரி– 33’, ஹம்ருஸைன் 78’
பேல்ஸ் விளையாட்டுக் கழகம் – நுஸ்கான் 27’, ரிஸ்கான் 73’, ரினூஸான் 76’

தொடரின் சிறந்த வீரர் – அஸ்பாக் (பேல்ஸ் வி.க)
தொடரின் சிறந்த கோல் காப்பாளர் – பரோஸ் (லிவர்பூர் வி.க)

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<