ப்ளூம்பீல்ட் கழகத்தை மட்டுப்படுத்திய சசித்ர சேனநாயக்க

216

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 ஆண்டுக்கான உள்ளூர் பருவத்திற்கான ப்ரீமியர் லீக் A நிலை தொடரின் ஐந்து போட்டிகள் இன்று ஆரம்பமாகின.

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

கொழும்பு கிரிக்கெட் கழக பந்துவீச்சாளர்கள் மிரட்ட கோல்ட்ஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 89 ஓட்டங்களுக்கே சுருண்டு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அந்த கழகம் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அஞ்செலோ ஜயசூரிய தலைமையிலான கோல்ட்ஸ் கழகம் ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

கோல்ட்ஸ் அணி சார்பில் பிரியமால் பெரேரா (26) மற்றும் கவிஷ்க அஞ்சுல (24) ஆகியோர் மாத்திரமே இரட்டை இலக்க ஓட்டத்தைப் பெற்றனர். கொழும்பு கிரிக்கெட் கழகம் சார்பில் மனல்கர் டி சில்வா, லஹிரு கமகே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு அஷான் பிரிஞ்சன் மற்றும் லக்ஷான் சந்தகன் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.

19 வயதின் கீழ் சிங்கர் பாடசாலைகள் கிரிக்கெட் – மூன்றாம் தவணை குறித்த பார்வை

இந்நிலையில் தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த கொழும்பு கிரிக்கெட் கழகம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது. கோல்ட்ஸ் கழக இளம் வேகப்பந்து வீச்சாளர் கவீஷ்க அஞ்சுல வீழ்த்தப்பட்ட 5 விக்கெட்டுகளையும் பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 89 (31.5) – பிரியமால் பெரேரா 26, கவீஷ்க அஞ்சுல 24, மனல்கர் டி சில்வா 3/13,  லஹிரு கமகே 3/29, அஷான் பிரியஞ்சன் 2/01, லக்ஷான் சதகன் 2/05  

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 192/5 (49) – வனிந்து ஹசரங்க 70*, மாதவ வர்ணபுர 37*, ரொன் சந்திரகுப்தா 29, குசல் மெண்டிஸ் 25, கவீஷ்க அஞ்சுல 5/44


தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் இராணுவப்படை கிரிக்கெட் கழகம்

லக்‌ஷித மதுஷானின் நிதான ஆட்டத்தின் மூலம் தமிழ் யூனியன் கழகத்துக்கு எதிரான போட்டியில் இராணுவப்படை கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்சில் ஸ்திரமான ஓட்டங்களை பெற்றுள்ளது.

பனாகொடை இராணுவ மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இராணுவப்படை கிரிக்கெட் கழகம் மிக நிதானமாக ஆடி விக்கெட்டுகளை காத்துக்கொண்டது. முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிவரும் இராணுவ கிரிக்கெட் கழகம் 286 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

பந்துவீச்சில் தமிழ் யூனியன் சார்பில் இலங்கை தேசிய அணி வீரர் ஜீவன் மெண்டிஸ் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 286/8 (93.1) – லக்‌ஷித மதுஷான் 87, கசுன் டி சில்வா 72, நவோத் இலுக்வத்த 21, ஜீவன் மெண்டிஸ் 3/42


ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் SSC

கொழும்பு ப்ளூம்பீல்ட் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் SSC அணி பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்தபோதும் ப்ளூம்பீல்ட் கழகம் லஹிரு ஜயகொடியின் சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் முதல் இன்னிங்சில் வலுவான நிலையில் உள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ப்ளும்பீல்ட் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தனது முதல் இன்னிங்சுக்காக 7 விக்கெட்டுகளை இழந்து 231 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் லஹிரு ஜயகொடி 86 ஓட்டங்களைக் குவித்தார்.

சானகவின் சதத்தினால் லங்கன் கிரிக்கெட் கழகம் வலுவான நிலையில்

பந்துவீச்சில் SSC அணி சார்பில் சர்வதேச அனுபவம் பெற்ற சுழல் பந்துவீச்சாளர் சச்சித்ர சேனநாயக்க 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்

ப்ளூம்பீல்ட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 231/7 (73) – லஹிரு ஜயகொடி 86, லஹிரு சமரகோன் 32*, நிபுன் ஹக்கல்ல 25, அதீஷ நானயக்கார 23, சசித்ர சேனநாயக்க 5/69, கசுன் மதுஷங்க 2/43


ராகம கிரிக்கெட் கழகம் எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

லஹிரு திரிமான்ன மற்றும் ஜனித் லியனகேவின் அபார இணைப்பாட்டத்தின் மூலம் சரசென்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் ராகம கழகம் வலுவான நிலையில் உள்ளது.

குறிப்பாக சரசென்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் டில்ஷான் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

கொழும்பு, தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ராகம கிரிக்கெட் கழகம் ஓட்டம் இன்றியே முதல் விக்கெட்டை பறிகொடுத்ததோடு 6 ஓட்டங்களைப் பெறுவதற்கு மேலும் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

எனினும் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த திரிமான்ன மற்றும் லியனகே 149 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். திரமான்ன 80 ஓட்டங்களுடன் டில்ஷானின் பந்துக்கு போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தனது முதல் இன்னிங்ஸை ஆடும் ராகம கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. ஜனித் லியனகே ஆட்டமிழக்காமல் 98 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.

போட்டியின் சுருக்கம்

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 218/7 (58.3) – ஜனித் லியனகே 98*, லஹிரு திரிமான்ன 80, மொஹமட் டில்ஷாட் 5/60, சாலிய சமன் 2/43


BRC எதிர் NCC  

கொழும்பு NCC மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் NCC அணியின் சுழல் பந்துவீச்சாளர் லசித் அம்புல்தெனிய 6 விக்கெட்டுளை வீழ்த்த BRC அணி முதல் இன்னிங்சுக்காக 244 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் BRC அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேஷான் டயஸ் சதம் (105) பெற்று அணியை கௌரவமான நிலைக்கு இட்டுச் சென்றார். இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த NCC அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 34 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.

போட்டியின் சுருக்கம்

BRC (முதல் இன்னிங்ஸ்) – 244 (77.4) – டேஷான் டயஸ் 105, ருமேஷ் புத்திக்க 38, சுராஜ் ரன்தீவ் 24, லசித் அம்புல்தெனிய 6/59, லஹிரு குமார 2/34, தரிந்து கௌஷால் 2/64

NCC (முதல் இன்னிங்ஸ்) – 34/1 (10)