மாகாண அணிகளுக்கான கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஏறாவூர் யங் ஸ்டார்

175

கிழக்கு மாகாணத்தின் டிவிஷன் – II கழகங்கள் இடையே இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரின் தீர்க்கமான குழுநிலை போட்டி ஒன்றில், ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தினை ஏறாவூரின் மற்றைய கழகமான யங் ஸ்டார் அணி 94 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.  

மேலும், இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் மாகாண அணிகளுக்கான இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கும் தெரிவாகியுள்ளது. 

வனிந்து ஹசரங்கவின் அபாரத்தால் இலங்கைக்கு த்ரில் வெற்றி

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள்…

மட்டக்களப்பு சிவானந்த மைதானத்தில் இன்று (22) இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற யங் ஸ்டார் அணியினர், போட்டியில் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்பிற்காக தெரிவு செய்து கொண்டனர். 

இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய யங் ஸ்டார் வீரர்கள் 46 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 192 ஓட்டங்களை எடுத்தனர். 

யங் ஸ்டார் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அரைச்சதம் விளாசிய சம்ஹான் 53 ஓட்டங்கள் பெற, பாஹிம் 43 ஓட்டங்கள் எடுத்திருந்தார். 

அதேநேரம், யங் ஹீரோஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் அஸார்தீன், நவ்சாத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க, இஹ்கான் 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார். 

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 193 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய யங் ஹீரோஸ் அணியினர் ஆரம்பம் முதலே தடுமாற்றம் காண்பித்தனர். தொடர்ந்து, 28.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழக அணியினர் 98 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியைத் தழுவினர்.

யங் ஹீரோஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் போராட்டம் காட்டிய நிப்ராஸ் 41 ஓட்டங்களைப் பெற்றார். மறுமுனையில், யங் ஸ்டார் அணியின் பந்துவீச்சுக்காக அசத்திய அஹமட் வெறும் 4 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, ஆஷிக் மற்றும் ரிப்னாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் தங்களிடையே பகிர்ந்து தமது தரப்பின் வெற்றியை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

யங் ஸ்டார் வி.க – 192 (46) – ஸம்ஹான் 53, பாஹிம் 43, நவ்சாத் 35/3, அஸார்தீன் 39/3, இஹ்கான் 38/2

யங் ஹீரோஸ் வி.க – 98 (28.5) – நிப்ராஸ் 41, அஹமட் 4/3, ஆஷிக் 10/2, றிப்னாஸ் 19/2

முடிவு – யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் 94 ஓட்டங்களால் வெற்றி    

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<