உஸ்மான், இமாம் உல்-ஹக் ஆகியோரின் சிறப்பாட்டத்தால் பாகிஸ்தானுக்கு இலகு வெற்றி

196

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகின்ற ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில், உஸ்மான் கான், இமாம்-உல்-ஹக் ஆகியோரின் சிறப்பாட்டத்தோடு பாகிஸ்தான் அணி ஹொங்கொங் அணியை 8 விக்கெட்டுக்களால் இலகுவான முறையில் வீழ்த்தி தொடரை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது.

டுபாய் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) ஆரம்பமாகியிருந்த இந்த (பாகிஸ்தான் – ஹொங்கொங் அணிகளுக்கு இடையிலான) ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி குழு A இன் முதல் லீக் ஆட்டமாகவும் அமைந்திருந்தது.

மாலிங்கவின் பந்துவீச்சு வீண்; ஆசிய கிண்ண முதல் போட்டியில் பங்களாதேஷ் வெற்றி

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஹொங்கொங் அணியின் தலைவர் அன்சுமான் ராத் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தார். துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ஹொங்கொங் அணிக்கு எதிர்பார்த்த ஆரம்பம் அமையவில்லை. ஹசன் அலி, சதாப் கான் ஆகியோரின் அதிரடி பந்துவீச்சு காரணமாக ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை பறிகொடுக்க ஆரம்பித்த ஹொங்கொங் அணி ஒரு கட்டத்தில் 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.  

இப்படியான ஒரு இக்கட்டான தருணத்தில் கின்சித் சாஹ் மற்றும் அய்சாஸ் கான் ஜோடி இணைந்து ஹொங்கொங் அணிக்காக அரைச்சத இணைப்பாட்டம் (53) ஒன்றை வழங்கி நம்பிக்கை தந்த போதிலும் இந்த இணைப்பாட்டத்தை பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் கான் போட்டியின் 31 ஆவது ஓவரில், அய்சாஸ் கானின் விக்கெட்டோடு முடிவுக்கு கொண்டு வந்தார்.  அந்தவகையில் அய்சாஸ் கான் ஹொங்கொங் அணியின் 6 ஆவது விக்கெட்டாக 27 ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். அய்சாஸின் கானை அடுத்து உஸ்மான் கான் பாகிஸ்தானுக்காக இன்னும் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்ற மீண்டும் சரிவு நிலைக்குச் சென்ற ஹொங்கொங் அணி 37.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரமே குவித்தது.

ஹொங்கொங் அணியின் துடுப்பாட்டத்தில் அய்சாஸ் கானிற்கு துடுப்பாட்டத்தில் துணையாக இருந்த  கின்சித் சாஹ் 26 ஓட்டங்களை சேர்த்திருந்ததோடு, பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுக்காக உஸ்மான் கான் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், சதாப் கான் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்திருந்தனர்.

தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்கான 117 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, 23.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து எவ்வித அழுத்தங்களுமின்றி 120 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கை இலகுவாக நெருங்கியது.

பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு இமாம்-உல்-ஹக் அரைச்சதம் ஒன்றுடன் இறுதிவரை ஆட்டமிழக்காது நின்று பங்களிப்புச் செய்திருந்தார். 69 பந்துகளை எதிர்கொண்டிருந்த இமாம்-உல்-ஹக் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 69 பந்துகளுக்கு 50 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, பாபர் அசாம் 33 ஓட்டங்களை பாகிஸ்தான் அணியின் வெற்றிக்காக பெற்றுத் தந்திருந்தார்.

கட்டாய வெற்றிக்காக ஆப்கானை எதிர்கொள்ளும் இலங்கை அணி

ஹொங்கொங் அணியின் பந்துவீச்சு சார்பாக எஹ்சான் கான் பாகிஸ்தான் அணியில் பறிபோன இரண்டு விக்கெட்டுக்களையும் தனக்காக சொந்தமாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய பாகிஸ்தான் வீரர் உஸ்மான் கானுக்கு வழங்கப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் பாகிஸ்தான் அணி தமது அடுத்த போட்டியில் இந்தியாவை எதிர்வரும் புதன்கிழமை (19) எதிர்கொள்கின்றது.

போட்டிச் சுருக்கம் 
ஹொங்கொங் – 116 (37.1) – அய்சாஸ் கான் 27(47), உஸ்மான் கான் 19/3(7.3), ஹசன் அலி 19/2(7.1), சதாப் கான் 31/2(8)
பாகிஸ்தான் – 120/2 (23.4) – இமாம்-உல்-ஹக் 50(69), எஹ்சான் கான் 34/2(8)
போட்டி முடிவு – பாகிஸ்தான் 8 விக்கெட்டுக்களால் வெற்றி 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<