திரில் வெற்றியை சுவைத்த மேற்கிந்திய தீவுகள்

336
Jason Holder
Image courtesy - Getty Images

இங்கிலாந்துடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கடும் போராட்டத்தை வெளிப்படுத்திய மேற்கிந்திய தீவுகள் அணி 26 ஓட்டங்களால் திரில் வெற்றி ஒன்றை பெற்று 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என சமநிலைக்கு கொண்டுவந்தது.

290 என்ற ஓட்ட வெற்றி இலக்கை துரத்தி இங்கிலாந்து அணி வெற்றியை நெருங்கிய நிலையில் வெறும் 35 ஓட்டங்களுக்கு கடைசி ஆறு விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 263 ஓட்டங்களுக்கு சுருண்டது.

ஜேசன் ஹோல்டர் அடுத்தடுத்த பந்துகளில் ஜொஸ் பட்லர் மற்றும் டொம் கரன் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியதை அடுத்து இங்கிலாந்து அணி சரிவை சந்தித்தது. ஷெல்டன் கொட்ரல் தனது சிறந்த பந்துவீச்சாக 46 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.   

மேற்கிந்திய தீவுகளின் சாதனை இலக்கை எட்டியது இங்கிலாந்து

பார்படோசில் இன்று (23) அதிகாலை முடிவுற்ற போட்டியில், ஷிம்ரோன் ஹெட்மியர் ஆட்டமிழக்காது 104 ஓட்டங்களை பெற மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 289 ஓட்டங்களை குவித்தது.

முதல் போட்டியில் அதிரடி சதம் பெற்ற கிறிஸ் கெயில் சற்று நிதானமாக ஆடி 63 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு இயன் மோர்கன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் நான்காவது விக்கெட்டுக்கு 99 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டனர். இதன் மூலம் இங்கிலாந்து அணி ஒரு பந்துக்கு ஒரு ஓட்டம் வீதம் பெற்றால் போதும் என்ற ஸ்திரமான நிலையில் இருந்தது. இயன் மோர்கன் 70 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.  

இங்கிலாந்து அணி வெற்றிபெற 100 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் 35 ஆவது ஓவரை வீச வந்த மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் ஆட்டத்தை திசைதிருப்பினார்.

இந்நிலையில் 79 ஓட்டங்களை பெற்றிருந்த பென் ஸ்டோக்ஸ் விக்கெட்காப்பாளர் ஷாய் ஹோப்பிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து விக்கெட்டுகள் மளமளவென்று சரிய ஆரம்பித்தது.  

ஐந்து போட்டிகளைக் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி வரும் திங்கட்கிழமை (25) கிரனடாவில் நடைபெறவுள்ளது.   

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் – 289/6 (50) – ஷிம்ரோன் ஹெட்மியர் 104*, கிறிஸ் கெயில் 50, ஷாய் ஹோப் 33, ஆதில் ரஷீத் 1/28

இங்கிலாந்து – 263 (47.4) – பென் ஸ்டோக்ஸ் 79, இயன் மோர்கன் 70, ஷெல்டன் கொட்ரல் 5/46, ஜேசன் ஹோல்டர் 3/53

முடிவு – மேற்கிந்திய தீவுகள் 26 ஓட்டங்களால் வெற்றி

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க