அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது மொரோக்கோ

FIFA World cup 2022

189
Quarterfinals Report

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டிகளில் போர்த்துகலை வீழ்த்தி மொரோக்கோ அணியும் இங்கிலாந்தை வீழ்த்தி பிரான்ஸ் அணியும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் கண்டுள்ளன. இந்த இரு போட்டிகளின் விபரம் வருமாறு,

வெளியேறியது இங்கிலாந்து

கடைசி நேர பெனால்டி வாய்ப்பு ஒன்றை ஹரி கேன் தவறவிட்ட நிலையில் நடப்புச் சம்பியன் பிரான்ஸிடம் உலகக் கிண்ண காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியை சந்தித்தது.

இதன் மூலம் உலகக் கிண்ணத்தை தக்கவைத்துக்கொள்ள பிரான்ஸ் அணி இலங்கை நேரப்படி எதிர்வரும் வியாழக்கிழமை (15) அதிகாலை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் மொரோக்கோ அணியை எதிர்கொள்ளவுள்ளது

கட்டாரின் அல் பைத் அரங்கில் இலங்கை நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை நடைபெற்ற காலிறுதிப் போட்டியின் 17 ஆவது நிமிடத்தில் அவ்ரேலியன் டக்கௌமனியின் நேர்த்தியான உதை மூலம் பிரான்ஸ் அணி முன்னிலை பெற்றது.

>> பிரேசிலை வெளியேற்றிய குரோஷியா அரையிறுதியில் ஆர்ஜன்டீனாவுடன் மோதல்

எனினும் 54 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியை கோலாக்கி பதில் கோல் திருப்பினார் ஹரி கேன். ஒலிவியர் கிரவுட் 78 ஆவது நிமிடத்தில் கோல் புகுத்தி பிரான்ஸை மீண்டும் முன்னிலை பெறச் செய்தார்.

இந்நிலையில் 84 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு மற்றொரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஹரி கேன் இம்முறை அதனை தவறவிட்டார். அவர் உதைத்த பந்து கம்பத்திற்கு வெளியால் சென்றது.

முந்தைய ஸ்பொட் கிக் மூலம் இங்கிலாந்துக்காக அதிக பெனால்டிகளை பெற்ற வெயின் ரூனியின் சாதனையை (53) சமன் செய்த கேன் அதனை முறியடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இதன் மூலம் 1966 இற்குப் பின் மீண்டும் உலகக் கிண்ணத்தை வெல்லும் இங்கிலாந்தின் எதிர்பார்ப்பு வீணானபோதும், 60 ஆண்டுகளுக்கு முன் பிரேசில் தொடர்ச்சியாக இரண்டு உலகக் கிண்ணங்களை வென்ற சாதனையை மீண்டும் நிலைநாட்ட பிரான்ஸ் அணிக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

வரலாறு படைத்தது மொரோக்கோ

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்த்துக்கல் எதிர்பார்ப்பை சிதறடித்த மொரோக்கோ முதல் ஆபிரிக்க மற்றும் அரபு நாடாக உலகக் கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

அல் துமாமா அரங்கில் சனிக்கிழமை (10) நடைபெற்ற காலிறுதிப் போட்டியின் 42 ஆவது நிமிடத்தில் வைத்து அத்தியாத் அல்லா உயரப் பரிமாற்றிய பந்தை முன்கள வீரர் யுசப் அன் நசில் தாவி தலையால் முட்டி வலைக்குள் செலுத்தினார்.

இந்த கோலின் மூலம் மொரோக்கோ முதல் பாதியிலேயே முன்னிலை பெற்ற நிலையில், போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்திய போர்த்துக்கலால் பதில் கோல் திருப்ப முடியாத சூழலில் அந்த கோல் மொரோக்கோவின் வெற்றி கோலாக மாறியது.

>> பிரேசில் பயிற்சியாளர் டிடே ராஜினாமா; ‘மதில் மேல்’ நெய்மார்

இப்போட்டியில் மீண்டும் ஒருமுறை இருக்கையில் அமரவைக்கப்பட்ட ரொனால்டோ 50ஆவது நிமிடத்தில் வைத்து மைதானத்திற்கு திரும்பியதன் மூலம் அவர் அதிக சர்வதேச கால்பந்து போட்டிகளில் ஆடிய வீரராக உலக சாதனையை சமப்படுத்தினார்.

ரொனால்டோ களமிறங்கும் 196ஆவது போட்டியாக இது இருந்தபோதம் அவர் அணிக்குத் திருப்பத்தைத் தர தவறிவிட்டார். முன்னதாக குவைட் வீரர் பதர் அல் முதாவா 196 சர்வதேச போட்டிகளில் ஆடி சாதனை படைத்திருந்தார்.

எனினும் போர்த்துக்கல் அணித்தலைவர் ப்ரூனோ பெர்னாண்டஸ் கோல் வாய்ப்பை நெருங்கியபோதும் துரதிர்ஷ்டவசமாக அவர் உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.

போட்டியின் மேலதிக நேரத்தில் வைத்து மொரோக்கோவின் முன்கள வீரர் வலித் சத்திரா இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார்.

இதற்கு முன்னர் ஆபிரிக்க அணிகள் உலகக் கிண்ணத்தில் மூன்று தடவைகள் காலிறுதிக்கு முன்னேறியபோதும் ஒரு தடவை கூட அதனைத் தாண்டியதில்லை.

ஏற்கனவே ஆரம்ப சுற்றில் பெல்ஜியம் மற்றும் நொக் அவுட்டில் ஸ்பெயினை வீழ்த்திய மொரோக்கோவுக்கு போர்த்துக்கலுடனான வெற்றி புதிய உற்சாகத்தை தந்துள்ளது.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<