மாலனின் அதிரடி சததத்தால் நியூஸிலாந்தை பந்தாடியது இங்கிலாந்து

65
AFP

நியூஸிலாந்து அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் டேவிட் மாலனின் அதிரடி சதம் மற்றும் மார்க் பார்கிங்ஸனின் அபார பந்துவீச்சு ஆகியவற்றின் உதவியுடன் இங்கிலாந்து அணி 76 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரினை 2 – 2 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி சமன் செய்தது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, .சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதற்கு முன்னோடியாக இங்கிலாந்து கிரிக்கெட் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகின்றது.

முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதுடன், 2ஆவது மற்றும் 3ஆவது போட்டிகளில் நியூஸிலாந்து அணி வெற்றியீட்டியது. இந்த நிலையில், மெக்லீன் பார்க், நேப்பியர் மைதானத்தில் இன்று (08) நடைபெற்ற நான்காவது போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணித் தலைவர் டிம் சௌத்தி  முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ரோஹித் சர்மாவின் அதிரடியோடு T20 தொடரை சமநிலை செய்த இந்தியா

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகள் இடையிலான இரண்டாவது T20…

இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதல் விக்கெட்டுக்காக 16 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணியின் ஜோனி பெயர்ஸ்டொவ் 8 ஒட்டங்களுளை எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து டொம் பென்டோனுடன் 2ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேவிட் மாலன் 42 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று ஆறுதல் கொடுத்தனர். இதன்போது டொம் பென்டோன் 31 ஓட்டங்களுக்கு சான்ட்னர் பந்துவீச்சில் எல்பிடபில்யு முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்துவந்த அணித் தலைவர் ஓய்ன் மோர்கன், மாலனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது. இருவரும் நியூஸிலாந்து பந்துவீச்சை வெளுத்துவாங்கினர்.  

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய டேவிட் மாலன் 48 பந்துகளில் தனது முதலாவது டி20 சதத்தைப் பதிவு செய்தார். அத்துடன் டி20 சதமடித்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார்.

இருவரும் இணைந்து 182 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துக் கொண்டனர். இதன்போது ஒய்ன் மோர்கன் 91 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனையடுத்து களமிறங்கிய சேம் பிளிங்ஸ் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும், டேவிட் மாலன் 51 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 9 பௌண்ரிகள் உள்ளடங்களாக ஆட்டமிழக்காது 103 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ஓட்டங்களை குவித்துக்கொண்டது.

இதன்போது இங்கிலாந்து அணி ஒரு சில சாதனைளையும் படைத்தது. இந்தப் போட்டியில் 241 ஓட்டங்களைக் குவித்த இங்கிலாந்து அணி, டி20 அரங்கில் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையைப் பதிவு செய்தது.

ரொஸ்டன் சேஸ், ஷாய் ஹோப்பின் அபாரத்தால் ஆப்கானை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்

லக்னோவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள்….

மேலும், மாலன் மற்றும் மோர்கன் ஜோடி 182 ஓட்டங்கள் இணைப்பாட்டமாகப் பெற்று 3ஆவது விக்கெட்டுக்காக அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட இங்கிலாந்து ஜோடி என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டனர்.

இதற்குமுன் 2014ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் மோர்கன் ஜோடி 152 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதே சாதனையாக இருந்தது.

மேலும், டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி எந்தவொரு விக்கெட்டுக்காகவும் பெற்றுக்கொண்ட அதிகூடிய இணைப்பாட்டமாகவும் இது இடம்பிடித்தது.

இதுஇவ்வாறிருக்க, டி20 அரங்கில் இங்கிலாந்து அணியின் அதிவேக அரைச் சதத்தை ஒய்ன் மோர்கன் பதிவு செய்தார். அவர் 21 பந்துகளில் அரைச் சதத்தை கடந்தார். முன்னதாக ஜோஸ் பட்லர் 22 பந்துகளில் அரைச் சதம் கடந்திருந்தார்

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில், மிட்செல் சான்ட்னர் 2 விக்கெட்டுகளையும், டிம் சௌத்தி ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 242 என்ற இமாலய ஓட்டங்களை நோக்கி, களமிறங்கிய நியூஸிலாந்து அணிக்காக மார்டின் கப்டில் மற்றும் கொலின் முன்ரோ இருவரும் அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தனர். இவர்கள் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 54 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துக் கொண்டனர்

இதன்போது, மார்டின் கப்டில் 27 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து வந்த டிம் சீபெர்ட், 3 ஓட்டங்களுடனும், கொலின் டி கிராண்ட்ஹோம், 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொலின் முன்ரோ 30 ஓட்டங்களை எடுத்த நிலையில், மெட் பார்கின்ஸனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பஞ்சாப் அணியிலிருந்து விடைபெறும் அஸ்வின்!

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக….

தொடர்ந்து வந்த பின்வரிசை வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டழிந்து சென்றாலும், அணித் தலைவர் டிம் சௌத்தி அதிரடியாக துடுப்பெடுத்தாடிய 39 ஓட்டங்களைப் பெற்று நம்பிக்கை கொடுத்தார்.

எனினும், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நியூஸிலாந்து அணி 16.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களை எடுத்து 76 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு இரண்டு வெற்றிகளைப் பெற்று சமநிலையில் இருக்கின்றன

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் மெட் பார்க்கிஸன் 4 விக்கெட்டுகளையும், கிறிஸ் ஜோர்டான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இப்போட்டியின் ஆட்டநாயகனாக டேவிட் மாலன் தெரிவுசெய்யப்பட்டார்.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான தொடரைத் தீர்மானிக்கின்ற 5ஆவதும், இறுதியுமான டி20 கிரிக்கெட் போட்டி 10ஆம் திகதி ஒக்லாந்தில் நடைபெறவுள்ளது

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<