ரோஹித் சர்மாவின் அதிரடியோடு T20 தொடரை சமநிலை செய்த இந்தியா

151
PHOTO - BCCI

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகள் இடையிலான இரண்டாவது T20 போட்டியில் இந்திய அணி ரோஹித் சர்மாவின் அதிரடி துடுப்பாட்டத்தோடு 8 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினை பதிவு செய்துள்ளது. 

மேலும், இந்த வெற்றியுடன் இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரினையும் 1-1 என சமநிலை செய்துள்ளது. 

டி-20 இல் இந்தியாவை முதல் முறை வீழ்த்தியது பங்களாதேஷ்

முஷ்பீகுர் ரஹீமின் அபார துடுப்பாட்டத்தின் மூலம்…..

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இந்தியா சென்றுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி குறித்த டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடுகின்றது. 

இந்த T20 தொடரின் முதல் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) டெல்லியில் நடைபெற்றது. குறித்த போட்டியில் பங்களாதேஷ் அணி வென்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது T20 போட்டி வியாழக்கிழமை (7) ராஜ்கோட் நகரில்  ஆரம்பமானது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோஹித் சர்மா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பங்களாதேஷ் அணிக்கு வழங்கினார். 

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைவாக இப்போட்டியிலும் வெற்றி பெற்று T20 தொடரை கைப்பற்றும் நோக்குடன் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தமது துடுப்பாட்டத்தை தொடங்கியது. 

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு அதன் ஆரம்ப துடுப்பாட்டவீரர்களான லிடன் தாஸ் மற்றும் மொஹமட் நயீம் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தினை வழங்கினர். தொடர்ந்து, பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முதல் விக்கெட்டாக லிடன் தாஸ் 21 பந்துகளுக்கு 29 ஓட்டங்களை பெற்ற நிலையில் மைதானத்தை விட்டு வெளியேறினார். 

லிடன் தாஸின் விக்கெட்டின் பின்னர் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இந்தியாவின் மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் சிறிது தடுமாறியது. எனினும் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய மொஹமட் நயீம் 31 பந்துகளில் 5 பௌண்டரிகள் உடன் 36 ஓட்டங்களை பெற்றிருந்தார். 

இதன் பின்னர் மத்திய வரிசையில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணித் தலைவர் மஹமதுல்லா தனது தரப்பிற்கு கை கொடுத்தார்.  மஹமதுல்லாவின் துடுப்பாட்ட உதவியோடு பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. 

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அணித்தலைவர் மஹமதுல்லாஹ் மற்றும் சௌம்யா சர்க்கர் ஆகியோர் தலா 30 ஓட்டங்கள் வீதம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுடனான டி-20 யிலிருந்து பெட் கம்மின்ஸ் திடீர் விலகல்

பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில்…..

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் மணிக்கட்டு சுழல் வீரரான யுஸ்வேந்திர சஹால் 2 விக்கெட்டுக்களை சாய்க்க, வொஷிங்டன் சுந்தர், கலீல் அஹ்மட் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 154 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைய இந்திய கிரிக்கெட் அணி தமது பதில் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது. 

இந்திய கிரிக்கெட் அணிக்காக அதன் தலைவர் ரோஹித் சர்மா ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்து அதிரடியான முறையில் ஓட்டங்கள் சேர்த்தார். சர்மாவின் துடுப்பாட்ட உதவியோடு இந்திய கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கினை வெறும் 15.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 154 ஓட்டங்களுடன் அடைந்தது. 

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு உதவிய ரோஹித் சர்மா T20 சர்வதேச போட்டிகளில் அவரின் 18ஆவது அரைச்சதத்தோடு 43 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 85 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.  இது தவிர ரோஹித் சர்மாவுடன் சிக்கர் தவானும் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியினை 31 ஓட்டங்களுடன் உறுதி செய்திருந்தார். 

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் அமீனுல் இஸ்லாம் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்த போதிலும் அவரது பந்துவீச்சு வீணானது. 

போட்டியின் ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மா தெரிவானார். 

அடுத்ததாக T20 தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இந்த T20 தொடரின் மூன்றாவது போட்டி இந்திய, பங்களாதேஷ் அணிகள் இடையே  ஞாயிற்றுக்கிழமை (10) நாக்பூர் நகரில் இடம்பெறவுள்ளது.  

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் – 153/6 (20) – மொஹமட் நயீம் 36, யுஸ்வேந்திர சஹால் 28/2

இந்தியா – 154/2 (15.4) – ரோஹித் சர்மா 85, சிக்கர் தவான் 31, அமினுல் இஸ்லாம் 29/2

முடிவு – இந்திய அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<