ரொஸ்டன் சேஸ், ஷாய் ஹோப்பின் அபாரத்தால் ஆப்கானை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்

56
 

லக்னோவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஷாய் ஹோப் மற்றும் ரொஸ்டன் சேஸின் அபார ஆட்டத்தால் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகு வெற்றி பெற்றது.

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் உள்ள மைதானத்தை சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது.

இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வகை கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. 

இதன்படி, இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி இன்று (06) லக்னோவில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

அதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்களாக ஹஸ்ரதுல்லாஹ் ஷசாய் மற்றும் ஜாவித் அஹ்மதி ஆகியோர் களமிறங்கினர்.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, தங்களுடைய முதல் விக்கெட்டினை 11 ஓட்டங்களுக்கு இழந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஹஸ்ரதுல்லாஹ் ஷசாய் (9) ஷெல்டன் கொட்ரலின் பந்து வீச்சில் போல்டாகி வெளியேறினார்.

மறுபுறத்தில் இருந்த ஜாவித் அஹ்மதி (05) ஜேசன் ஹோல்டரின் பந்துவீச்சில் நிக்கொலஸ் பூரணிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

எனினும், இவ்விரண்டு வீரர்களினதும் ஆட்டமிழப்பின் பின் ஜோடி சேர்ந்த ரஹ்மத் ஷாஹ் மற்றும் இக்ரம் அலிகில் ஆகியோர் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தனர்.

நிதானமாக ஓட்டங்களை குவித்த இருவரும் 3 ஆவது விக்கெட்டுக்காக 111 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று வலுச்சேர்த்தனர்.

எனினும், ரொஸ்டன் சேஸின் ஓவரில் இக்ரம் அலிகில் 58 ஓட்டங்களை எடுத்து துரதிஷ்டவசமாக ரன்-அவுட் முறையில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நஜிபுல்லாஹ் சத்ரான் அதே ஓவரின் இறுதிப் பந்தில் டக் அவுட் ஆனார். 

தொடர்ந்து, அபாரமாக துடுப்பெடுத்தாடிய ரஹ்மத் ஷாஹ் தனது 16 ஆவது ஒருநாள் அரைச் சதத்தைக் கடந்து அஸ்கர் ஆப்கானுடன் துடுப்பெடுத்தாடினார். 

நிதானமாக ஓட்டங்களை குவித்த இருவரும் 5 ஆவது விக்கெட்டுக்காக 26 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொள்ள, ரொஸ்டன் சேஸின் பந்தில் ரஹ்மத் ஷாஹ் 61 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து வந்த அஸ்கர் ஆப்கான் மாத்திரம் சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 35 ஓட்டங்களைக் குவிக்க பின்வரிசை வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். 

இறுதியில் ஆப்கானிஸ் அணி 45.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 194 ஓட்டங்களைக் குவித்தது.

ஸ்மித்தின் அபாரத்தினால் பாகிஸ்தானை பந்தாடியது ஆஸி.

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் அரைச்சதமடித்து…

பந்து வீச்சில் ஷெல்டன் கொட்ரல், ஜேசன் ஹோல்டர் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

195 என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடக் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ஷாய் ஹோப் மற்றும் எவின் லுவிஸ் களமிறங்கினர். 

எவின் லீவிஸ் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்தவந்த சிம்ரொன் ஹெட்மயர் 3 ஓட்டங்களுடன் வெளியேறினார். 

எனினும், 3 ஆவது விக்கெட்டுக்ககாக ஷாய் ஹோப்புடன் ஜோடி சேர்ந்த ரொஸ் சேஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்ததுடன், 163 ஓட்டங்களை தமக்கிடையே பகிர்ந்ததன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி இலக்கை அடைந்தது. 

இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 46.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 197 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இதன்போது ரொஸ்டன் சேஸ் 115 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 94 ஓட்டங்களை விளாசியதோடு, ஷாய் ஹோப் 133 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 77 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் முஜிபுர் ரஹ்மான் 2 விக்கெட்டுக்களையும், நவீன் உல் ஹக் ஓரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக துடுப்பாட்டத்திலும், பந்துவீச்சிலும் அசத்திய மேற்கிந்திய தீவுகள் அணியின் ரொஸ்டன் சேஸ் தெரிவானார். 

ஆப்கானிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான  இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

ஆப்கானிஸ்தான் அணி – 194 (45.2) – ரஹ்மத் ஷாஹ் 61, இக்ரம் அலிகில் 58, அஸ்கர் ஆப்கான் 35, ஜேசன் ஹோல்டர் 21/2, ரொஸ்டன் சேஸ் 31/2, ரொமாரியோ ஷெப்பர்ட் 32/2

மேற்கிந்திய தீவுகள் அணி – 197/3 (46.3) – ரொஸ்டன் சேஸ் 94, ஷாய் ஹோப் 77*, முஜிபுர் ரஹ்மான் 33/2, நவீன் உல் ஹக் 33/1

முடிவு – மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<