அயர்லாந்துக்கு எதிரான குழாத்தை அறிவித்த இங்கிலாந்து

213

அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐசிசி கிரிக்கெட் சுப்பர் லீக் தொடருக்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 14 பேர்கொண்ட இங்கிலாந்து குழாம் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் சுமார் 4 வருட காலப்பகுதிக்கு பின்னர், ரீஸ் டொப்லி இணைக்கப்பட்டுள்ளதுடன், செம் பில்லிங்ஸ் உட்பட டேவிட் வில்லி ஆகியோரும் மீண்டும் குழாத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். 

மோசமான சாதனைக்கு சொந்தக்காரர்களாகிய 5 பந்துவீச்சாளர்கள்!

ஒருநாள் குழாத்தில் வழமையாக விளையாடிவரும் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜோ ரூட், க்ரிஸ் வோக்ஸ் மற்றும் ஜொப்ரா ஆர்ச்சர் ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. 

(Caption – 2019 உலகக் கிண்ணப் போட்டியில் லஹிரு திரிமான்னேவின் ஆட்டமிழப்பை கொண்டாடும் இங்கிலாந்து வீரர்கள்)

அதேநேரம் இங்கிலாந்து தேர்வுக்குழுவினர், ரிச்சட் க்ளீசன், லிவிஸ் க்ரொகெரி மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஆகிய புதுமுக வீரர்களையும் மேலதிக வீரர்களாக பெயரிட்டுள்ளனர். 

அணிக்குழாம் தொடர்பில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தேர்வாளர் ஜேம்ஸ் டெய்லர் குறிப்பிடுகையில்,  

“நாம் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணியை வலிமையாக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் வீரர்கள் எவரும் இந்த ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்பில்லை. அத்துடன், வீரர்களுக்கு இடையிலான இடத்தை தக்கவைப்பதற்கு இது சரியான போட்டி. இதனை நாம் உள்ளக பயிற்சிப் போட்டி மற்றும் இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கான பயிற்சிப் போட்டியிலும் கண்டிருந்தோம்.

அதனால் இந்த குழாத்தில் அதிகமான வீரர்களை நாம் துரதிஷ்டவசமாக இழந்திருந்தோம். இதன்மூலமாக குழாம் ஒன்றை தெரிவுசெய்வதற்கான அதியுயர் அழுத்தத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

அயர்லாந்து அணிக்கு எதிரான தொடர் எமக்கான பரிணாமமிக்க ஒருநாள் குழாம் ஒன்றை அமைப்பதற்கு சரியான தருணம். அதேநேரம், எதிர்வரும் 2021ம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்துக்கான குழாத்தை கண்டறிவதற்கும் இதுவொரு சரியான தருணம். 

இதுவொரு சவாலான பருவகாலம். இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர்கள், உதவி அதிகாரிகள் ஆகியோர் வீரர்களுக்காக கடினமான உழைப்பை வழங்கியுள்ளனர். அத்துடன், போட்டித் தன்மையான கிரிக்கெட்டுக்கும் நாம் தயாராகியுள்ளோம்” என்றார். 

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்தத் தொடர், ஐசிசி கிரிக்கெட் சுப்பர் லீக்கின் முதல் தொடராக அமையவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 30ம் திகதி ஏஜஸ் போவ்ல் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<