பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக இன்று (17) நடைபெற்ற IPL போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பஞ்சாப் அணியின் பிளே-ஓஃப் கனவை கேள்விக்குறியாக்கியுள்ளது.
தர்மசாலாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் நாணய சுழற்சியில் வென்றிருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு வழங்கியது.
டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி பிளே-ஓஃப் வாய்ப்பை இழந்திருந்ததுடன், பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே-ஓஃப் வாய்ப்பை தொடர்ந்தும் தக்கவைப்பதற்கு சிறந்த வாய்ப்பாக இந்தப் போட்டி அமைந்திருந்தது.
>> பங்களாதேஷ் – ஆப்கான் தொடரின் போட்டி அட்டவணை வெளியானது
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பணிப்பின்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு அற்புதமான துடுப்பாட்ட பங்களிப்பு கிடைத்திருந்தது.
டேவிட் வோர்னர் வேகமான ஓட்டக்குவிப்பை ஆரம்பிக்க மறுமுனையில் துடுப்பாட்ட பிரகாசிப்பின்மையால் அணியில் வாய்ப்பை பெறாமலிருந்த பிரிதிவி ஷோவ் இந்தப் போட்டியில் களமிறங்கி சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்காக 94 ஓட்டங்களை பகிர்ந்ததுடன், டேவிட் வோர்னர் 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பிரதிவி ஷோவ் இந்த பருவகாலத்தில் தன்னுடைய முதல் அரைச்சதத்தை பதிவுசெய்து 38 பந்துகளில் 54 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இந்த இரண்டு விக்கெட்டுகள் மாத்திரம் வீழ்த்தப்பட அடுத்து களமிறங்கியிருந்த ரெய்லி ரூஷோவ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷோவுடன் இணைந்து இணைப்பாட்டத்தை கட்டியெழுப்பியது மாத்திரமின்றி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 82 ஓட்டங்களை விளாசினார்.
ரூஷோவுடன் ஓட்டங்களை பெற்றுக்கொள்ள பங்களிப்பு வழங்கிய பில் சோல்ட் 14 பந்துகளில் 26 ஓட்டங்களை பெற்றதுடன் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களை பெற்றக்கொண்டது. பந்துவீச்சில் செம் கரன் மாத்திரம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நிர்ணயித்திருந்த மிகப்பெரிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சிறந்த ஆரம்பம் கிடைக்கவில்லை. அணித்தலைவர் சிகர் தவான் ஓட்டங்களின்றி ஆட்டமிழக்க மந்தமான ஓட்ட வேகத்துடன் பஞ்சாப் அணி ஓட்டத்தை பெறத்தொடங்கியது.
இதில் அதர்வா டைடே மற்றும் லியம் லிவிங்ஷ்டன் இணைப்பாட்டமொன்றை ஆரம்பிக்க முதல் 10 ஓவர்களில் 75 ஓட்டங்களை கடந்தது. இதனைத்தொடர்ந்து அதர்வா டைடே 42 பந்துகளில் 55 ஓட்டங்களை பெற்று களத்திலிருந்து வெளியேற, பெறுவதற்கு கடினமான இலக்கை நோக்கி லிவிங்ஷ்டன் தனியாளாக போராடினார்.
அதிரடியாக ஆடிய இவர் தன்னுடைய அரைச்சதத்தை கடந்தது மாத்திரமின்றி டெல்லி அணிக்கு நெருக்கடியை கொடுக்க தொடங்கினார். 15 ஓவர்களில் 128 ஓட்டங்களை பெற்றிருந்த பஞ்சாப் அணிக்கு மேலும் நம்பிக்கை கொடுத்த இவர் இறுதி ஓவர்வரை போட்டியை பஞ்சாப் அணி பக்கம் திருப்ப முயன்றார்.
எனினும் இறுதி ஓவரில் 32 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் 17 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்ததுடன், இன்னிங்ஸின் இறுதிப்பந்தில் லிவிங்ஷ்டன் ஆட்டமிழந்தும் வெளியேறினார்.
அதிரடியாக ஆடிய இவர் 48 பந்துகளில் 9 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 94 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பஞ்சாப் கிங்ஸ் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்களை பெற்று 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பந்துவீச்சில் அன்ரிச் நோக்கியா மற்றும் இசாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதேவேளை இந்தப் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே-ஓஃப் சுற்றுக்கு தகுதிபெறுவதற்க அடுத்து நடைபெறவுள்ள ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கட்டாய வெற்றியை எதிர்நோக்கியுள்ளது. குறித்த போட்டியில் வெற்றிபெற்று 14 புள்ளிகளை பெற்றாலும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளின் அடுத்த போட்டிகளின்படியே பஞ்சாப் அணியால் பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<