பாகிஸ்தானுடன் மோதும் இங்கிலாந்து டி20 குழாம் அறிவிப்பு

284
ECB

சுற்றுலா பாகிஸ்தான் அணியுடன் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடருக்கான இங்கிலாந்து அணியின் 14 பேர் கொண்ட குழாம் இன்று (18) இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டது.

கொரோனா வைரஸ் சவாலுக்கு மத்தியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச தொடர்களில் விளையாடவுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டதன் பின்னர் நடைபெறுகின்ற முதலாவது டி20 சர்வதேச தொடராகவும் இங்கிலாந்து – பாகிஸ்தான் தொடர் அமைந்துள்ளது. 

துடுப்பாட்ட தரவரிசையில் புதிய சாதனை படைத்த பாபர் அஸாம்

இரு அணிகளுக்கும் இடையிலான இருதரப்பு தொடரின் முதல் தொடரான டெஸ்ட் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகின்ற நிலையில் அடுத்து நடைபெறவுள்ள டி20 சர்வதேச தொடருக்கான இங்கிலாந்து அணியின் குழாமே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இங்கிலாந்து அணியின் வெள்ளை நிற பந்து தொடருக்கான அணித்தலைவரான ஒயின் மோர்கன் வழமைபோல் டி20 அணியின் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார். 

இங்கிலாந்து அணியின் முக்கிய அனுபவ வீரர்களுக்கு குறித்த டி20 தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி டெஸ்ட் அணித்தலைவர் ஜோ ரூட், விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் ஜொஸ் பட்லர், வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் கிறிஸ் வோக்ஸ் மற்றும் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. 

இதேவேளை தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் டெஸ்ட் போட்டியுடன் நியூசிலாந்து பயணமான அனுபவ சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்தும் நியூசிலாந்தில் தங்கியுள்ளதன் காரணமாக டி20 சர்வதேச தொடருக்கான குழாமில் இடம்பெறவில்லை. உபாதை காரணமாக அயர்லாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் தவறவிடப்பட்டிருந்த டேவிட் மலான் மற்றும் கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் மீண்டும் குழாமிற்கு திரும்பியுள்ளனர். 

இந்த ஆண்டுக்கான IPL பிரதான அனுசரணையாளராக ட்ரீம் லெவன்

இறுதியாக பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் விளையாடியதன் பின்னர் கடந்த ஜூலை மாதம் அறுவை சிகிச்சை மேற்கொண்ட கிறிஸ் ஜோர்டன் இவ்வாறு குழாமிற்கு திரும்பியுள்ளார். அயர்லாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் வெளியேற்றப்பட்ட ஜோ டென்லி மீண்டும் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். ஜேம்ஸ் வின்ஸூக்கு பதிலாக வெறும் 5 டி20 போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள சகலதுறை வீரர் லுவிஸ் க்ரேகெரி இணைக்கப்பட்டுள்ளார். 

இறுதியாக நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அயர்லாந்து அணியுடனான ஒருநாள் சர்வதேச தொடரில் சிறப்பான பந்துவீச்சு மூலம் தொடர் ஆட்ட நாயகன் விருது வென்ற வேகப்பந்துவீச்சாளர் டேவிட் வில்லி இறுதியாக 2019 மே மாதம் டி20 போட்டியில் விளையாடிய நிலையில் நீண்ட இடைவெளியின் பின்னர் குழாமிற்கு திரும்பியுள்ளார். 

பாகிஸ்தான் டி20 சர்வதேச தொடருக்கான இங்கிலாந்து அணியின் 14 பேர் கொண்ட குழாம்.

ஒயின் மோர்கன் (அணித்தலைவர்), மொயின் அலி, ஜொனி பெயர்ஸ்டோ, டொம் பென்டன், சேம் பில்லிங்ஸ், டொம் கரன், ஜோ டென்லி, லுவிஸ் க்ரேகெரி, கிறிஸ் ஜோர்டன், ஷாகிப் மஹ்மூத், டேவிட் மாலன், ஆதில் ரஷீட், ஜேசன் ரோய், டேவிட் வில்லி

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியில் இணையும் என்ரிச் நோட்ஜே

இதேவேளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பெட் ப்ரவுண், லியம் லிவ்விங்ஸ்டன் மற்றும் ரீஸ் டொப்லி ஆகிய வீரர்கள் மேலதிக வீரர்களாக குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர். இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அனைத்து போட்டிகளும் மென்செஸ்டரில் அமைந்துள்ள ஓல்ட் ட்ரபெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க