தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகள் ஒக்டோபரில் ஆரம்பம்

251
Munchee National Volleyball Tournament 2016

ஓவ்வொரு வருடமும் தொடர்ந்து இடம்பெற்று வரும் தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளின் 2016ஆம் ஆண்டுக்கான போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ளன.

தேசிய கரப்பந்தாட்ட சம்மேளனத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இந்த போட்டிகளுக்கு, ஒன்பதாவது தடவையாக இம்முறையும் மஞ்சி பிஸ்கட் நிறுவனம் அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலாருக்கும் நடைபெறவுள்ள இந்தப் போட்டிகள் ஆரம்ப நிலையிலுள்ளவர்கள் மற்றும் சுப்பர் லீக் ஆகிய இரு பிரிவுகளில் நடைபெறும். மஞ்சி தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் 2016 இன் இறுதிப் போட்டிகள் இவ்வருடம் நவம்பர் 29ஆம் திகதி மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தின் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறும்.

தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகள் – 2016 

இந்தப் போட்டித் தொடருக்கு மஞ்சி அனுசரணை வழங்குவது தொடர்பில் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் டபிள்யு.ஜி.எஸ். எரந்திக கருத்துத் தெரிவிக்கையில்,

“மஞ்சியின் அனுசரணையில், கரப்பந்தாட்டம் பாரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதன்மூலம் விளையாட்டின் அபிவிருத்தியை நாம் அனுபவித்துள்ளோம். குறிப்பாக கிராமிய மட்டத்தில் எம்மால் இந்த வளர்ச்சியை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தப் போட்டியில் பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் கரப்பந்தில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தியை எம்மால் அவதானிக்க முடிகின்றது”‘ என்று தெரிவித்தார்.

ஆரம்ப நிலையிலுள்ளவர்கள் பிரிவு 

இம்முறை இடம்பெறும் போட்டிகளில் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் பிரிவில் பாடசாலை அணிகள், இளைஞர் மன்ற அணிகள் மற்றும் நிறுவனம், கழகம் சார்ந்த அணிகள் உள்ளடங்குகின்றன. இந்த பிரிவில் சுப்பர் லீக் பிரிவில் உள்ள அணிகள் உள்ளடங்கப்பட மாட்டாது.

ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் பிரிவில் சம்பியனாகத் தெரிவு செய்யப்படும் அணிக்கு 50,000 ரூபாய் பணப்பரிசும்,  இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொள்ளும் அணிக்கு 30,000 ரூபாய் பணப்பரிசும், மூன்றாம் இடத்தைப் பெறும் அணிக்கு 20,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்படும்.

இந்த போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் தற்பொழுது கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் பூரணப்படுத்தப்பட்டு, ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு முன்னர் ‘குழுச் செயலாளர், இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம், இல 33, டொரிங்டன், கொழும்பு 7’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 0112-663944 என்ற பெக்ஸ் இலக்கத்திற்கோ விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.

சுப்பர் லீக் பிரிவு 

சுப்பர் லீக் பிரிவுக்கான போட்டிகள் நவம்பர் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகின்றன. இதில் தேசிய மட்டத்தில் உள்ள ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவுகளில் உள்ள தலா எட்டு முன்னணி அணிகள் பங்கு கொள்ளவுள்ளன.

சுப்பர் லீக் பிரிவின் முதல் சுற்றுப் போட்டிகள் நவம்பர் 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தின் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறும். அதன் இறுதிப் போட்டி நவம்பர் 29ஆம் திகதி அதே விளையாட்டரங்கில் இடம்பெறும்.

சுப்பர் லீக் பிரிவில் சம்பியனாகத் தெரிவு செய்யப்படும் அணிக்கு ஒரு லட்சம் ரூபாய் பணப்பரிசும்,  இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொள்ளும் அணிக்கு 75,000 ரூபாய் பணப்பரிசும், மூன்றாம் இடத்தைப் பெறும் அணிக்கு 50,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்படும்.

இறுதியாக இடம்பெற்ற தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில் சுப்பர் லீக் பிரிவில் ஆண்களுக்கான சம்பியனாக இலங்கை ராணுவப்படை விளையாட்டுக் கழகம் தெரிவாகியது.

இம்முறை சுப்பர் லீக் பிரிவில் இடம்பெறும் அணிகள் 

ஆண்கள் – விமானப்படை அணி, ராணுவப்படை அணி, கடற்படை அணி, பொலிஸ் அணி, மின்சார வாரிய அணி, இளைஞர் சேவைகள் அணி, துறைமுக அதிகார சபை அணி, சமூக சேவைகள் அணி

பெண்கள் – விமானப்படை அணி, ராணுவப்படை அணி, கடற்படை அணி, பொலிஸ் அணி, துறைமுக அதிகாரசபை அணி, கெஷூவல் அணி, இளைஞர் சேவைகள் அணி, பிராண்டிக்ஸ் அணி