இமாலய இலக்கை கடந்து டி20 தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து

72
ESPNcricinfo

ஜொஸ் பட்லர், ஜொனி பெயர்ஸ்டோ மற்றும் அணித்தலைவர் ஒயின் மோர்கன் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் இங்கிலாந்து அணி இமாலய இலக்கை கடந்து 5 விக்கெட்டுக்களினால் மூன்றாவது டி20 போட்டியை வென்று, தொடரை 2-1 என்ற அடிப்படையில் எதிரணியின் சொந்த மண்ணில் வைத்து கைப்பற்றியுள்ளது. 

இருதரப்பு தொடருக்காக மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் ஆடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்னாபிரிக்க மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. முதல் தொடரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது. 

த்ரில் வெற்றி மூலம் தென்னாபிரிக்காவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து

டொம் கர்ரன் கடைசி இரண்டு பந்துகளுக்கும்…..

அதனை தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் ஒரு போட்டி மழையினால் முழுமையாக கைவிடப்பட தொடர் 1-1 என்ற அடிப்படையில் சமநிலையில் நிறைவுக்கு வந்தது. இந்நிலையில் குறித்த சுற்றுப்பயணத்தின் இறுதி தொடரான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் கடந்த புதன்கிழமை (12) ஆரம்பமானது. 

முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி 1 ஓட்டத்தினால் த்ரில் வெற்றி பெற்றிருந்த நிலையில், நேற்று முன்தினம் (14) நடைபெற்ற இரண்டாவது டி20 சர்வதேச போட்டியில் இங்கிலாந்து அணி 2 ஓட்டங்களினால் த்ரில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் டி20 சர்வதேச தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று (16) செஞ்சூரியன் சுப்பர் ஸ்போட்ஸ் பார்க் மைதானத்தில் ஆரம்பமானது. 

இன்றைய போட்டிக்கு தென்னாபிரிக்க அணியிலிருந்து இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஹென்ரிச் கிளாசன் மற்றும் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட ஜொன் ஜொன் ஸ்மட்ஸ் மற்றும் பியூரன் ஹென்ட்ரிக்ஸ் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இங்கிலாந்து அணியில் ஜோ டென்லிக்கு பதிலாக டேவிட் மலான் அழைக்கப்பட்டார். 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான டெம்பா பவுமா மற்றும் அணித்தலைவர் குயின்டன் டி கொக் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தனர். தென்னாபிரிக்க அணி முதல் பவர்-பிளே (power play) ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 64 ஓட்டங்களை குவித்தது. 

பாதுகாப்பு பிரச்சினையின் பின்னர் டெஸ்ட் குழாமுக்கு திரும்பிய முஸ்பிகுர் ரஹீம்

ஜிம்பாப்வே அணியுடன் சொந்த மண்ணில்……

தொடர்ச்சியாக மூன்று பந்துகளில் மூன்று சிக்ஸர்களை விளாசிய அணித்தலைவர் குயின்டன் டி கொக் 8ஆவது ஓவரில் 35 ஓட்டங்களுடன்  ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே அதிரடியாக ஆடிய மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டெம்பா பவுமா 24 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகளை விளாசி 49 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். தென்னாபிரிக்க அணி முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 100 ஓட்டங்களை குவித்தது. 

அதனை தொடர்ந்து 12ஆவது ஓவரில் ரைஸ் வென் டர் டஸன் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் 4ஆவது விக்கெட்டுக்காக ஹென்ரிச் கிளாசனுடன் இணைந்த டேவிட் மில்லர் ஜோடி அதிரடியாக 64 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ரிச் கிளாசன் 33 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகளுடன் டி20 சர்வதேச அரங்கில் தனது இரண்டாவது அரைச்சத்தை பூர்த்தி செய்து 66 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

அதனை தொடர்ந்து வந்த டுவைன் பிரிடோரியஸ் 19ஆவது ஓவரில் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மீண்டும் இறுதி ஓவரில் அண்டில் பெஹ்லுக்வாயே 1 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காது 35 ஓட்டங்கள் பெற்ற டேவிட் மில்லரின் போராட்டத்துடன் தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் டொம் கரண் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், பென் ஸ்டோக்ஸ் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ஆதில் ரஷீட் மற்றும் மார்க் வூட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட் வீதமும் வீழ்த்தினர். 223 என்ற இமாலய வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட் இரண்டாவது ஓவரிலேயே வீழ்த்தப்பட்டது. 

அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோய் 7 ஓட்டத்துடன் ஏமாற்றமளித்தார். ஆனால் இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்த ஜொஸ் பட்லர் – ஜொனி பெயர்ஸ்டோ ஜோடியின் அதிரடி துடுப்பாட்டத்துடன் இங்கிலாந்து அணி 8.2 ஓவர்கள் நிறைவில் 100 ஓட்டங்களை கடந்தது. அதிரடியாக ஆடிய விக்கெட் காப்பாளர் ஜொஸ் பட்லர் 23 பந்துகளில் டி20 சர்வதேச அரங்கில் தனது 8ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். இந்நிலையில் இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக 91 ஓட்டங்கள் பெறப்பட்ட வேளையில் ஜொஸ் பட்லர் 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். 

அதனை தொடர்ந்து ஜொனி பெயர்ஸ்டோ டி20 சர்வதேச அரங்கில் தனது 4ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்து 3 சிக்ஸர்கள், 7 பௌண்டரிகளுடன் 64 ஓட்டங்களை குவித்து 13ஆவது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து அடுத்த ஓவரில் டேவிட் மலான் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் ஐந்தாவது விக்கெட்டுக்காக இணைந்த அணித்தலைவர் ஒயின் மோர்கன் – பென் ஸ்டோக்ஸ் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 

இருவரும் இணைப்பாட்டமாக 23 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். அதிரடியாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இறுதி 11 பந்துகளில் 17 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இந்நிலையில் குறித்த ஓவரில் அணித்தலைவர் ஒயின் மோர்கன் தொடர்ச்சியாக 2 சிக்ஸர்களை விளாச போட்டி திடீரென இங்கிலாந்து பக்கம் மாறியது. 

7 சிக்ஸர்களை விளாசிய அணித்தலைவர் ஒயின் மோர்கன் 21 பந்துகளில் அரைச்சதம் கடந்து டி20 சர்வதேச அரங்கில் தனது 13ஆவது அரைச்சத்தை பூர்த்தி செய்து இங்கிலாந்து அணியின் வெற்றியை 5 பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட்டுக்களினால் உறுதி செய்தார். இங்கிலாந்து அணி, இவ்வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரை 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது. 

2020 ஐ.பி.எல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு

எதிர்வரும் மார்ச் மாத இறுதியில்…….

போட்டியின் ஆட்டநாயகனாக அதிரடியாக அரைச்சதம் கடந்து அணியின் வெற்றியை உறுதி செய்த அணித்தலைவர் ஒயின் மோர்கன் தெரிவானதுடன், தொடர் ஆட்டநாயகனாகவும் அவரே தெரிவானார். 

போட்டியின் சுருக்கம்

தென்னாபிரிக்கா – 222/6 (20) – ஹென்ரிச் கிளாசன் 66 (33), டெம்பா பவுமா 49 (24), டேவிட் மில்லர் 35 (20), டொம் கரண் 2/33 (4), பென் ஸ்டோக்ஸ் 2/35 (4)

இங்கிலாந்து – 226/5 (19.1) – ஜொனி பெயர்ஸ்டோ 64 (34), ஒயின் மோர்கன் 57 (22), ஜொஸ் பட்லர் 57 (29), லுங்கி ங்கிடி 2/55 (4), அண்டில் பெஹ்லுக்வாயோ 1/34 (3.1)

முடிவு – இங்கிலாந்து 5 விக்கெட்டுக்களினால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<