ஜிம்பாப்வே T20 தொடரில் சகீப் அல் ஹசன் ஆடுவாரா?

69

ஜிம்பாப்வே அணியின் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் போது நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் சகீப் அல் ஹசன் ஆடுவது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே அணி மே மாதம் 03ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை 5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆடவிருக்கின்றது. 

ஒருநாள் தரவரிசையில் உலகின் முதலிடத்தில் சமரி

இந்த T20I தொடருக்கான பங்களாதேஷ் குழாம் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் பயிற்சி பெறுகின்ற குழாத்தில் பங்களாதேஷ் அணியின் சிரேஷ்ட சகலதுறைவீரர் சகீப் அல் ஹசன் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் இணைந்திருக்கவில்லை. இந்த வீரர்களில் முஸ்தபிசுர் ரஹ்மான் IPL போட்டிகளில் ஆடும் நிலையில் சகீப் அல் ஹஸன் தற்போது ஐக்கிய அமெரிக்காவில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

சகீப் அல் ஹஸன் இம்மாத இறுதியில் பங்களாதேஷ் திரும்புவார் எனக் குறிப்பிடப்பட்ட நிலையில் அவர் ஜிம்பாப்வே தொடருக்கு முன்னர் உள்ளூர் கிரிக்கெட் தொடரான டாக்கா பிரீமியர் லீக் (DPL) தொடரில் பங்கேற்று தன்னை சர்வதேச போட்டிகளுக்கு தயார்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

விடயங்கள் இவ்வாறு காணப்படும் நிலையிலையே சகீப் அல் ஹஸனை ஜிம்பாப்வே தொடரின் இறுதி போட்டிகளிலும் ஆட வைக்க எதிர்பார்ப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் தேர்வுக்குழு அதிகாரி கா(G)சி அஷ்ரப் ஹொசைன் குறிப்பிட்டுள்ளார். எனினும் சில தகவல்கள் அவர் ஜிம்பாப்வே தொடரில் முழுமையாக ஆடமாட்டார் எனவும் குறிப்பிடுகின்றன 

அதேவேளை ஜிம்பாப்வே தொடருக்கான பங்களாதேஷ் குழாம் இம்மாதம் 28ஆம் திகதியளவில் அறிவிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. எனவே இந்த வீரர்கள் குழாத்தின் அறிவிப்பினைத் தொடர்ந்தே பங்களாதேஷ் குழாத்தில் சகீப் அல் ஹசன் ஆடுவது உறுதி செய்யப்படும் எனக் கூறப்பட்டிருக்கின்றது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<