2017ஆம் ஆண்டானது வழமையான ஒருசில உள்ளூர் மற்றும் சர்வதேச மெய்வல்லுனர் போட்டித் தொடர்களை கொண்ட வருடமாக அமைந்திருந்ததுடன், இதில் சுவட்டு மற்றும் மைதான நிகழ்ச்சிகள், ஒரு சில தனிபர் நிகழ்ச்சிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வருடத்தை பொறுத்தமட்டில் தேசிய மெய்வல்லுனர் குழாமிற்கான 2 கட்டங்களைக் கொண்ட தகுதிகாண் போட்டிகள் கடந்த ஏப்ரல் மற்றும் ஜுன் மாதங்களில் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள், 43ஆவது தேசிய விளையாட்டு விழா மற்றும் 54ஆவது இராணுவ மெய்வல்லுனர் போட்டிகள் என்பன உள்ளூர் மெய்வல்லுனர் அரங்கில் முக்கிய இடத்தை வகித்தன.

2018ஆம் ஆண்டில் அதிக போட்டிகளில் பங்கேற்கவுள்ள இலங்கையின் தடகள வீரர்கள்

இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெற்றுவருகின்ற…

அதேபோல, சர்வதேச மெய்வல்லுனர் போட்டித் தொடர்களாக இந்தியாவில் நடைபெற்ற 22ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர், 3 கட்டங்களைக் கொண்டதாக சீனாவில் நடைபெற்ற ஆசிய க்ரோன் ப்றீ மெய்வல்லுனர் போட்டிகள், துர்க்மெனிஸ்தானில் நடைபெற்ற ஆசிய உள்ளக மெய்வல்லுனர் போட்டிகள், லண்டனில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் என்பன இடம்பெற்றன.

இதில் பெரும்பாலான தேசிய மட்டப் போட்டிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வீரர்கள் கடந்த காலங்களைவிட அதிகளவு வெற்றிகளை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்படி, பொத்துவிலைச் சேர்ந்த அஷ்ரப், அட்டாளைச்சேனையை சேர்ந்த எம்.ஐ.எம் மிப்ரான், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன், வெலிகமையைச் சேர்ந்த மொஹமட் சப்ரான், நிந்தவூரைச் சேர்ந்த ஆஷிக், ஒலுவிலைச் சேர்ந்த ரஜாஸ்கான், திருகோணமலையைச் சேர்ந்த வொஷிம் இல்ஹாம் மற்றும் மொஹமட் பாஸில் உடையார் ஆகியோரது வெற்றிகள் மற்றும் அடைவுமட்டங்கள் அந்தந்த மாகாணங்களுக்கு கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்ததுடன், தேசிய மட்டத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி காலடி எடுத்துவைப்பதற்கும் முக்கிய காரணமாக அமைந்தது.

போராட்ட வீரன் அஷ்ரப்

கிழக்கு மாகாணத்தைப் பிரிநிதித்துவப்படுத்தி அண்மைக்காலமாக சர்வதேச மற்றும் உள்ளுர் மெய்வல்லுனர் போட்டிகளில் 100, 200 மீற்றர் மற்றும் அஞ்சலோட்டப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற அஷ்ரப்புக்கு இவ்வருடம் பல வெற்றிகளை கொடுத்திருந்தது. அத்துடன் இவ்வருடத்தில் அவர் தனது சிறந்த காலத்தையும் பதிவுசெய்தார்.

இவ்வருடத்தின் முதலாவது போட்டித் தொடராக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் குழாமிற்கான தகுதிகாண் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட அவர், 10.68 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து முதலாவது இடத்தைப் பெற்றுக்கெண்டார்.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் போட்டிக்கான இரண்டாவது தகுதிகாண் போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்ட மொஹமட் அஷ்ரப் குறித்த போட்டித்தூரத்தை 10.58 செக்கன்களில் ஓடி முடித்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதன் பிரதிபலனாக இந்தியாவில் கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற 22ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் ஆண்களுக்கான 4 X100 மீற்றர் அஞ்சலோட்ட இலங்கை குழாமிலும் அவர் இடம்பிடித்தார்.

இந்நிலையில், 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெற்றிபெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஷ்ரப், போட்டியை 10.71 செக்கன்களில் ஓடி முடித்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, கிரிகிஸ்தான் திறந்த மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபற்றிய அவர், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தை 10.51 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கம் வென்று இவ்வருடத்துக்கான தனது சிறந்த காலத்தையும் பதிவு செய்தார்.

அதன்பிறகு மாத்தறையில் நடைபெற்ற 43ஆவது தேசிய விளையாட்டு விழாவில் தங்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவர், போட்டி தூரத்தை 10.86 செக்கன்களில் நிறைவு செய்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

முதல் இடத்தைப் பறிகொடுத்த அஷ்ரப் : நிமாலிக்கு அதிர்ச்சித் தோல்வி

முதல் இடத்தைப் பறிகொடுத்த அஷ்ரப் : நிமாலிக்கு அதிர்ச்சித் தோல்வி

இந்நிலையில், வருடத்தின் இறுதி மெய்வல்லுனர் போட்டித் தொடராக 54ஆவது இராணுவ மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் இலங்கை இராணுவத்தின் இயந்திரவியல் மற்றும் பொறியியல் படைப்பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட மொஹமட் அஷ்ரப், 10.65 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டு இவ்வருடத்தை வெற்றியுடன் நிறைவுக்கு கொண்டுவந்தார்.

சாதனை நாயகி அனித்தா

வட மாகாணத்துக்கு தேசிய மட்டத்தில் அண்மைக்காலமாக கௌரவத்தைப் பெற்றுக்கொடுக்கின்ற நட்சத்திரமாக கோலூன்றிப் பாய்தலில் வருடந்தோறும் சாதனை படைத்து வருகின்ற அனித்தா ஜெகதீஸ்வரனை குறிப்பிடலாம். பாடசாலை வாழ்க்கைக்கு விடைகொடுத்துள்ள அவர், இவ்வருடம் முதல் தேசிய மட்டப் போட்டிகளில் களமிறங்கினார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் குழாமிற்கான முதலாவது தகுதிகாண் போட்டியில் 3.45 மீற்றர் உயரம் தாவி நிலைநாட்டிய தனது சொந்த சாதனையை முறியடித்த அனித்தா, அதனைத் தொடர்ந்து கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற 2ஆவது தகுதிகாண் போட்டிகளில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.47 மீற்றர் உயரம் தாவி புதிய தேசிய சாதனை படைத்தார்.

தேசிய விளையாட்டு விழாவில் 2ஆவது முறையாகவும் அனித்தா தேசிய சாதனை

விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறைத் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள…

அதன்பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் யாழ். மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் கலந்துகொண்ட அனித்தா ஜெகதீஸ்வரன், 3.46 மீற்றர் உயரத்தைத் தாவி மீண்டும் புதிய தேசிய சாதனை படைத்தார்.

இதன்படி தாய்லாந்தில் நடைபெற்ற தாய் திறந்த மெய்வல்லுனர் போட்டிகளில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அவர் முதற்தடவையாக இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், 43ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் கலந்துகொண்ட அனித்தா 3.48 மீற்றர் உயரத்தைத் தாவி மீண்டும் தேசிய சாதனை படைத்து, இவ்வருடத்தில் தொடர்ச்சியாக 4ஆவது முறையாகவும் தேசிய சாதனையை முறியடித்த வீராங்கனையாக வரலாற்றில் இடம்பிடித்தார்.

கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து கோலூன்றிப் பாய்தல் நிகழ்ச்சியின் முன்னணி பயிற்றுனராக வலம்வந்து கொண்டிருக்கின்ற சுபாஸ்கரனின் பயிற்றுவிப்பின் கீழ் தனது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற அனித்தா அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மற்றும் ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசத்திற்கு கௌரவத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

தொடர் நாயகன் ஆஷிக்

இவ்வருடத்தில் நடைபெற்ற சகல தேசிய மட்டப் போட்டிகளிலும் பரிதி வட்டம் எறிதல் மற்றும் குண்டு போடுதல் ஆகிய போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்த வீரராக ஆஷிக் இடம்பிடித்தார்.

கிழக்கு மாகாணம் சார்பாக முதலாவது தங்கப்பதக்கம் வென்ற ஆஷிக்

43ஆவது தேசிய விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டிகளில் கிழக்கு …

கடந்த 10 வருடங்களாக தேசிய மெய்வல்லுனர் அரங்கில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற அம்பாறை மாவட்டம் நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் குழாமிற்கான முதலாவது தகுதிகாண் போட்டியில் ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் 42.28 மீற்றர் தூரம் எறிந்து முதலாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற 2ஆவது தகுதிகாண் போட்டிகளில் பரிதி வட்டம் எறிதலில் 42.48 மீற்றர் தூரம் எறிந்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட ஆஷிக், ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் 42.48 மீற்றர் தூரம் எறிந்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், 43ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் கலந்துகொண்ட இவர், 42.97 மீற்றர் தூரம் எறிந்து தொடர்ச்சியாக 2ஆவது தடவையாக தேசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கம் வென்றதுடன், ஆண்களுக்கான குண்டு போடுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதனையடுத்து இராணுவ மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்துகொண்ட ஆஷிக், ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் 43.05 மீற்றர் தூரம் எறிந்து இராணுவ மெய்வல்லுனர் போட்டிகளில் தொடர்ச்சியாக 2ஆவது தடவையாகவும் தங்கப் பதக்கத்தினை பெற்றுக்கொண்டதுடன், இவ்வருடத்துக்கான சிறந்த தூரத்தைப் பதிவு செய்தார்.

இதன்படி இவ்வருடம் நடைபெற்ற முக்கிய 3 மெய்வல்லுனர் போட்டித் தொடர்களிலும் ஆஷிக், வெற்றிகளைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இளம் புயல் பாசில்

இலங்கையின் அடுத்த அதிவேக குறுந்தூர வீரராக மாறுவதற்கான அனைத்து திறமைகளையும் கொண்ட வீரரான உருவெடுத்துள்ள திருகோணமலையைச் சேர்ந்த மொஹமட் பாசில் உடையார், இவ்வருடம் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் முதற்தடவையாக கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றியைப் பதிவு செய்திருந்ததுடன், இன்னும் பல தேசிய மட்டப் போட்டிகளில் தனது சிறந்த ஓட்டப் பிரதிகளையும் பதிவு செய்தார்.

இதில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 55ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர் போட்டிகளில் அவர் வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தினார்.

பின்னர் நடைபெற்ற 43ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாசில் உடையார், போட்டித் தூரத்தை 22.16 செக்கன்களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கம் வென்றார். எனினும், 100 மீற்றர் இறுதிப் போட்டியில் அவர் போட்டி தூரத்தை 10.94 செக்கன்களில் நிறைவுசெய்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சிகரம் தொட்ட இல்ஹாம்

கடந்த வருடம் முதல் தேசிய மட்டப் போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்து வருகின்ற திருகோணமலையைச் சேர்ந்த மற்றுமொரு இளம் வீரரான ஆர்.வொஷிம் இல்ஹாம், இவ்வருடம் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் பல முக்கிய மைல்கல்லை எட்டினார்.

தேசிய மெய்வல்லுனரில் கிழக்கு மாகாணம் இரண்டாவது நாளிலும் அபாரம்

ஆண்களுக்கான அஞ்சலோட்டப் போட்டியில் கிழக்கு மாகாண வீரர்களின் வரலாற்று வெற்றியுடன் …

இதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் குழாமிற்கான முதலாவது தகுதிகாண் போட்டியில் 14.91 செக்கன்களிலும், ஜுன் மாதம் நடைபெற்ற 2ஆவது தகுதிகாண் போட்டியில் 15.00 செக்கன்களிலும் போட்டியை நிறைவுசெய்து 4ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் கலந்துகொண்ட அவர், போட்டித் தூரத்தை 14.54 செக்கன்களில் நிறைவு செய்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், 43ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 110 மீற்றர் தடைதாண்டலில் தங்கப் பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆர்.வொஷிம் இல்ஹாம், காலில் ஏற்பட்ட சிறு உபாதை காரணமாக போட்டியை 14.88 செக்கன்களில் நிறைவுசெய்து 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

ஆனால், கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான தடை தாண்டலில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதற்தடவையாக கலந்துகொண்ட இவர், போட்டித் தூரத்தை 14.90 செக்கன்களில் கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்று தனது முதலாவது தேசிய மட்ட வெற்றியைப் பதிவு செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இறுதி மெய்வல்லுனர் தொடரான இராணுவ மெய்வல்லுனரில் கலந்துகொண்ட வொஷிம் இல்ஹாம், முதற்தடவையாக இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரில் தங்கப் பதக்கம் வென்றார். அவர் குறித்த போட்டியை 14.51 செக்கன்களில் நிறைவுசெய்ததுடன், இவ்வருடத்துக்கான தனது சிறந்த காலத்தையும் பதிவுசெய்தார்.

விடாமுயற்சியின் அடையாளம் சப்ரான்

பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகள் மூலமாக மெய்வல்லுனர் விளையாட்டுக்கு காலடி எடுத்துவைத்த தென்மாகாணம் வெலிகமையைச் சேர்ந்த மொஹமட் சப்ரான், 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பாடசாலை மட்டம், தேசிய மட்டம் என பல வெற்றிகளைப் பதிவு செய்தார். கடந்த 2012ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு விழாவில் வருடத்தின் அதிவேக வீரராகவும் மாறினார்.

எனினும், 2014ஆம் ஆண்டு துரதிஷ்டவசமாக தோள்பட்டை உபாதைக்குள்ளாகி ஒருசில காலம் மெய்வல்லுனர் அரங்கிலிருந்து விலகியிருந்தார். அதன்பிறகு மெய்வல்லுனர் போட்டிகளில் அவர் பங்குபற்றியிருந்தாலும், எதிர்பார்த்தளவு முன்னேற்றத்தை அவரால் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. இதனையடுத்து சமிந்த பெரேராவிடம் பயிற்சிகளை ஆரம்பித்த சப்ரான், சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு மெய்வல்லுனர் அரங்கிற்கு திரும்பினார்.

இந்நிலையில், தேசிய மெய்வல்லுனர் குழாமிற்கான முதலாவது தகுதிகாண் போட்டிகளில் கலந்துகொண்ட மொஹமட் சப்ரான், 100 மீற்றர் ஓட்டப்போட்டியை 10.93 செக்கன்களில் நிறைவுசெய்து 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற இரண்டாவது தகுதிகாண் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப்போட்டியை 10.70 செக்கன்களில் ஓடிமுடித்து 4ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

இதன் பிரதிபலனாக இந்தியாவில் கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் ஆண்களுக்கான 4X100 அஞ்சலோட்ட அணியிலும் அவர் இடம்பிடித்தார்.

எனினும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா மற்றும் இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடர்களில் காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவரால் பங்குபற்ற முடியாமல் போனது.

மிப்ரானின் பின்னடைவு

43 வருடகால தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் வருடத்தின் சிறந்த மெய்வல்லுனர் வீரருக்கான விருதை முதற்தடவையாக கிழக்கு மாகாணத்துக்குப் பெற்றுக்கொடுத்த பெருமை அட்டாளைச்சேனையை சேர்ந்த எம்.ஐ.எம் மிப்ரானைச் சாரும். கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 42வது தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் 7.72 மீற்றர் நீளம் பாய்ந்து தனது முதலாவது தேசிய மட்ட வெற்றியை அவர் பதிவுசெய்தார்.

எனினும், 2017ஆம் ஆண்டு மிப்ரானுக்கு எதிர்பார்த்தளவு வெற்றியைக் கொடுக்காவிட்டாலும் இவ்வருடம் தென்கொரிய திறந்த மெய்வல்லுனரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதற்தடவையாக சர்வதேச போட்டித் தொடரொன்றில் பங்கேற்றிருந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் குழாமிற்கான தெரிவுப் போட்டிகளில் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் கலந்துகொண்ட மொஹமட் மிப்ரான் 7.73 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்தார். எனினும், ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளை இலக்காகக் கொண்டு 2ஆவது கட்டமாக நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளில் கலந்துகொண்ட அவர், குறித்த போட்டித் தொடருக்கான அடைவு மட்டத்தை(7.78 மீ) பூர்த்தி செய்யாத காரணத்தால் இலங்கை குழாமில் இடம்பெறும் வாய்ப்பை இழந்தார்.

இதனையடுத்து நடைபெற்ற 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் களமிறங்கிய மொஹமட் மிப்ரான், 7.72 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் கலந்துகொண்ட மிப்ரான், தவறான பாய்ச்சலை மேற்கொண்டு அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தார்.

முப்பாய்ச்சலில் அசத்தும் சப்ரின்

தென் மாகாணம், வெலிகமையிலிருந்து தேசிய மெய்வல்லுனர் அரங்கிற்கு காலடிவைத்த சப்ரின் அஹமட், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தேசிய மட்டப் போட்டிகளில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றார். அவர் இவ்வருடம் நடைபெற்ற பெரும்பாலான மெய்வல்லுனர் போட்டிகளில் முப்பாய்ச்சல் மற்றும் நீளம் பாய்தலில் போட்டிகளில் கலந்துகொண்டு தனது சிறந்த தூரத்தைப் பதிவுசெய்து தேசிய குழாமிலும் இடம்பிடித்துள்ளார்.

ஊக்கமருந்து சர்ச்சையினால் ரஷ்யாவுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை

ஆசிய பாடசாலைகளுக்கிடையிலான நகர் வல ஓட்ட சம்பியன்ஷிப்… தடகள மன்னன், ஓய்வுபெற்ற உசைன்…

இதில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் குழாமிற்கான முதலாவாத தகுதிகாண் போட்டியில் நீளம் பாய்தலில் கலந்துகொண்டு 7.49 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து கடந்த ஜுனில் நடைபெற்ற 2ஆவது தகுதிகாண் போட்டியில் முப்பாய்ச்சலில் கலந்துகொண்டு 16.05 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அவர், ஆண்களுக்கான நீளம் பாய்தலில் 7.48 மீற்றர் தூரம் பாய்ந்து 5ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து நடைபெற்ற 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் 15.97 மீற்றர் தூரம் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தை அவர் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.