இளையோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிபெற தாய்லாந்து பயணமாகும் 8 இலங்கையர்

212

மூன்றாவது இளையோர் (18 வயதுக்குட்பட்ட) ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை ஆர்ஜென்டீனாவின் புவனோஸ் ஐரிஸ்ஸில் நடைபெறவுள்ளன.

இந்நிலையில், குறித்த போட்டிகளுக்கு தகுதியினைப் பெற்றுக்கொள்வதற்காக தாய்லாந்தின் பெங்கோக் நகரில் எதிர்வரும் ஜுன் மாதம் 3ஆம், 4ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள ஆசிய தகுதிகாண் போட்டிகளுக்காக இலங்கையிலிருந்து 8 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.  

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் 12 இலங்கை வீரர்கள்

ஜப்பானின் கிபு நகரில் எதிர்வரும் ஜுன் மாதம் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை …

இதன்படி, இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் 4 வீரர்களும், 4 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர்.

இதன்படி, கடந்த மாத இறுதியில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 48.55 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய போட்டி சாதனையுடன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட குருநாகல் ஜோன் கொத்தலாவல கல்லூரியைச் சேர்ந்த டிலான் போகொட, இம்முறை இளையோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிபெற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்ற முதன்மை வீரராக இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில், ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 2.03 மீற்றர் உயரத்தைப் பதிவு செய்து ஆசிய மட்டத்தில் 3ஆவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள கொழும்பு றோயல் கல்லூரியின் செனிரு அமரசிங்கவும் இளையோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஆசிய தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றவுள்ளார்.

இதேநேரம், இவ்வருடம் பூராகவும் தொடர் உபாதைகள் காரணமாக எந்தவொரு போட்டிகளிலும் பங்குபற்றாத கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரியைச் சேர்ந்த சந்தூஷ் குணதிலக்கவும் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளார். எனினும், உடற் தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் அவருக்கு போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற இளையோருக்கான உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய சந்தூஷ், குறித்த போட்டியை 21.71 செக்கன்களில் நிறைவுசெய்து தனது சிறந்த காலத்தையும் பதிவு செய்தார். இதன்படி, ஆசிய மட்டத்தில் 2ஆவது சிறந்த காலத்தை பதிவுசெய்துள்ள அவர், இம்முறை ஆசிய தகுதிகாண் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

இதேநேரம், அண்மையில் நிறைவுக்கு வந்த தேசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 22.09 செக்கன்களில் நிறைவு செய்த புனித பேதுரு கல்லூரியின் தினெத் நுவன்த சேனாநாயக்கவுக்கும் குறித்த தகுதிகாண் போட்டிகளுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெண்கள் பிரிவில் குளியாப்பிட்டிய மத்திய கல்லூரியைச் சேர்ந்த அஷ்மிகா ஹேரத் மற்றும் வசந்தி மாரிஸ்டெல்லா ஆகிய வீராங்கனைகள் ஆசிய தகுதிகாண் போட்டிகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.  

இம்முறை கனிஷ்ட மெய்வல்லனரில் பெண்களுக்கான 2000 மீற்றர் தடை தாண்டல் போட்டியில் முதலிரண்டு இடங்களையும் பெற்றுக்கொண்ட குறித்த வீராங்கனைகள் தற்போதுள்ள அடைவுமட்டங்களுக்கு அமைய ஆசிய மட்டத்தில் முதலிரண்டு இடங்களிலும் உள்ளதால் அவர்களுக்கு வாய்ப்பினை வழங்குவதற்கு தெரிவுக்குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேநேரம், குறுந்தூரப் போட்டிகளில் வளர்ந்து வருகின்ற வீராங்கனையாக முத்திரை பதித்த இராஜகிரிய கேட்வே சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த ஷெலிண்டா ஜென்சன், பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார்.

  • வசந்தி மாரிஸ்டெல்லா

அண்மையில் நிறைவுக்கு வந்த கனிஷ்ட மெய்வல்லுனரில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 24.98 செக்கன்களில் நிறைவு செய்து புதிய போட்டி சாதனை படைத்த அவர், ஆசிய மட்டத்தில் 4ஆவது சிறந்த காலத்தைப் பதிவுசெய்த வீராங்கனையாக இளையோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஆசிய தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றவுள்ளார்.

ஆசிய விளையாட்டு விழா தகுதிகாண் போட்டியின் இரண்டாம் கட்டம் முடிவுகள்

இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 18 …

இதேவேளை, கடந்த முறை நடைபெற்ற ஆசிய இளையோர் சம்பியன்ஷிப் மெய்வல்லுனர் தொடரில் பெண்களுக்கான 1,500 மீற்றரில் தங்கப் பதக்கத்தை வென்ற வீராங்கனையை விட சிறந்த காலத்தைப் பதிவுசெய்துள்ள (4 நிமி. 53.57 செக்.) வலள ரத்னாயக்க கல்லூரியைச் சேர்ந்த சமுதிகா ஹேரத்துக்கும் இலங்கை குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் முதலிடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி விபரம்

பெயர் போட்டி பாடசாலை
டிலான் போகொட 400 மீற்றர் குருநாகல் ஜோன் கொத்தலாவல கல்லூரி
செனிரு அமரசிங்க உயரம் பாய்தல் கொழும்பு றோயல் கல்லூரி
சந்தூஷ் குணதிலக்க 200 மீற்றர் கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரி
தினெத் நுவன்த 200 மீற்றர் புனித பேதுரு கல்லூரி
வசந்தி மாரிஸ்டெல்லா       2000 மீற்றர் தடைதாண்டல் குளியாப்பிட்டிய மத்திய கல்லூரி
அஷ்மிகா ஹேரத் 2000 மீற்றர் தடைதாண்டல் குளியாப்பிட்டிய மத்திய கல்லூரி
ஷெலிண்டா ஜென்சன் 200 மீற்றர் கேட்வே சர்வதேச பாடசாலை
சமுதிகா ஹேரத் 1500 மீற்றர் வலள ரத்னாயக்க கல்லூரி

 

 காணொளிகளைப் பார்வையிட …