பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைப்பு

214

நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கல்வி அமைச்சினால் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கிய சகல விளையாட்டு நிகழ்ச்சிகளையும் நடத்துவதற்கு தடை விதிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.  

இதன்படி, இவ்வருடம் நிறைவடையும் வரை பாடசாலை மட்டத்திலான எந்தவொரு விளையாட்டுப் போட்டியும் இடம்பெறமாட்டாது என அனைத்து பாடசாலைகளுக்கும், விளையாட்டு சங்கங்களுக்கும் கடிதம் மூலம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் விளையாட்டுப் பணிப்பாளர் தயா பண்டார தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் தள்ளிப்போகும் பாடசாலை விளையாட்டு நிகழ்ச்சிகள்

கொவிட் – 19 வைரஸின் அச்சுறுத்தல் குறைவடையத் தொடங்கியதை அடுத்து நாட்டில் கட்டம்கட்டமாக பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் வழமையான நேரத்தில் பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்தது.

இதனிடையே, பாடசாலைகள் திறக்கப்பட்ட காரணத்தால் விளையாட்டு நிகழ்ச்சிகளையும் ஆரம்பிக்க வேண்டும் என கல்வி அமைச்சுக்கு பல்வேறு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், தேசிய அளவிலான போட்டிகளை நவம்பர் மாதம் நடத்துவதற்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது.

இதுஇவ்வாறிருக்க, நாட்டில் மீண்டும் கொவிட் – 19 வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கல்வி அமைச்சினால் அனுமதி வழங்கிய விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் மீண்டும் தடைப்பட்ட உள்ளூர் விளையாட்டு

இதுதொடர்பில், கல்வி அமைச்சின் விளையாட்டுப் பிரிவின் பணிப்பாளர் தயா பண்டார கருத்து தெரிவிக்கையில்,

“நாங்கள் அனைத்துப் பாடசாலைகளுக்கும் அனைத்து விளையாட்டு போட்டிகளையும் மறு அறிவித்தல் வரும் வரை பிற்போடுமாறு அறிவித்துள்ளோம். முன்னதாக கிரிக்கெட், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் உள்ளிட்ட விளையாட்டுக்களை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி ஆரம்பிக்குமாறு நாங்கள் அனுமதி வழங்கியிருந்தோம். ஆனால் தற்போது அனைத்து விளையாட்டுக்களையும் நடத்த வேண்டாம் என தெரியப்படுத்தியுள்ளோம்” என்றார்.

இதன்படி, 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு பிறகு ஒருநாள் போட்டிகளாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், தற்போதுள்ள நிலைமையில் அந்தத் தொடரை இந்த வருடம் ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கிரிக்கெட், கால்பந்து, ரக்பி மற்றும் மெய்வல்லுனர் உள்ளிட்ட விளையாட்டுக்களை 2021 ஜனவரி முதல் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<