பிரதமர் கிண்ண முதல் நாள் போட்டிகள் ஒத்திவைப்பு

Mahinda Rajapaksa trophy four nations tournament

107

இலங்கை, பங்களாதேஷ், மாலைதீவுகள் மற்றும் சீசெல்ஸ் ஆகிய நான்கு நாடுகள் பங்கேற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்துத் தொடரின் முதல் நாளுக்கான போட்டிகள் இரண்டும் சீரற்ற காலநிலையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் இன்று 8ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதன்படி, இன்றைய தினம் (08) மாலை நான்கு மணிக்கு பங்களாதேஷ் எதிர் சீசெல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெறவிருந்தது. எனினும், நேற்றைய தினம் தொடர்ந்து பெய்த மழை காரணமாக குறித்த போட்டி ஒத்திவைக்கப்படுவதாக இன்று காலை அறிவிக்கப்பட்டது.

எனினும், ஏற்கனவே அறிவித்ததன்படி இன்று இரவு 8 மணிக்கு தொடரின் ஆரம்ப நிகழ்வும், பின்னர் இரவு 9 மணிக்கு மாலைதீவுகள் எதிர் இலங்கை இடையிலான போட்டியும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இன்றைய தினம் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக மாலைதீவுகள் எதிர் இலங்கை இடையிலான போட்டியையும் நடாத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையினால் இரண்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்படுவதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

எனவே, குறித்த இரண்டு போட்டிகளையும் நாளைய தினத்தில் நடாத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை மாலை 4 மணிக்கு இடம்பெறும் முதல் போட்டியில் பங்களாதேஷ், சீசெல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடாத்தவுள்ள அதேவேளை, இரவு 9 மணிக்கு இடம்பெறும் அடுத்த போட்டியில் இலங்கையும் மாலைதீவுகளும் போட்டியிடவுள்ளன.

எவ்வாறிருப்பினும், நாடு முழுவதும் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<