பரபரப்பான முதல் டி20யை வென்றது அயர்லாந்து

84
©AFP

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான போல் ஸ்டெர்லிங் மற்றும் கெவின் ஓ பிரெயன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதலாவது டி20 சர்வதேச போட்டியில் அயர்லாந்து அணி 4 ஓட்டங்களினால் த்ரில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் அயர்லாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 3க்கு 0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியது.  

மீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு திரும்பும் டுவைன் பிராவோ!

அயர்லாந்து அணிக்கு எதிரான T20I தொடருக்கான மேற்கிந்திய ……………

இந்த நிலையில், கிரெனேடாவில் நேற்று (15) நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அயர்லாந்து அணி சார்பில் போல் ஸ்டெர்லிங் மற்றும் கெவின் பிரெயன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இரு வீரர்களும் ஆரம்பம் முதல் அடித்து ஆடி ஓட்டங்களைக் குவித்தனர். இதனால் முதல் 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 93 ஓட்டங்களை அயர்லாந்து அணி பெற்றுக் கொண்டது

சிறப்பாக ஆடிய போல் ஸ்டெர்லிங் 20 பந்துகளில் தனது 17ஆவது டி20 அரைச்சதத்தை பதிவு செய்து அதிகபட்ச டி20 ஓட்டத்தைக் குவித்தார்

முதல் விக்கெட்டுக்காக இவ்விருவரும் 153 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த போது கெவின் பிரெயன் 48 ஓட்டங்களை எடுத்து டுவைன் பிராவோவின் பந்தில் ஆட்டமிழக்க, 8 சிக்ஸர்கள், 6  பௌண்டரிகளுடன் 95 ஓட்டங்களை எடுத்த போல் ஸ்டெர்லிங் ஹெய்டன் வோல்ஷின் பந்தில், எவின் லுவிஸிடன் பிடிகொடுத்து வெளியேறினார்

எவின் லுவிஸின் அபார சதத்தினால் மேற்கிந்திய தீவுகளுக்கு ஹெட்ரிக் வெற்றி

மேற்கிந்திய தீவுகளின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும்……………….

அதன்பின் வந்த துடுப்பாட்ட வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். எனினும், கரெத் டெலனி (19) மற்றும் கெரி வில்சன் ஆகியோரது பங்களிப்புடன் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 208 ஓட்டங்களைக் குவித்தது. 

மேற்கிந்திய தீவுகள் தரப்பில் டுவைன் பிராவோ, ஹரி பீரே மற்றும் ஷெல்டன் கொட்ரல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பின்னர், 241 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. மேற்கிந்திய தீவுகள் தரப்பில் எவின் லுவிஸ் மற்றும் லென்டில் சிம்மென்ஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் நிலைத்து ஆடி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த முயன்றனர்.  

ஆனால், ஜோஸ் லிட்டில் பந்துவீச்சில் 22 ஓட்டங்களுடன் சிம்மென்ஸ் ஆட்டமிழக்க, 3 சிக்ஸ்ர், 6 பௌண்டரிகளுடன் 53 ஓட்டங்களை எடுத்த எவின் லுவிஸ் க்ரெய்க் யங்கின் பந்தில் ஜோர்ஜ் டொக்ரல்லிடம் பிடிகொடுத்து வெளியேறினார்

அவர்களுக்கு பின் களமிறங்கிய ஷிம்ரன் ஹெட்மயர் (28), கிரென் பொல்லார்ட் (31), நிக்கொலஸ் பூரண் (26) மற்றும் ஷெபார்னி ருதர்பெர்ட் (26) ஆகியோர் அதிரடியாக ஆடி சிக்ஸர் மழை பொழிந்து ஓட்டக் குவிப்பில் ஈடுபட்டாலும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றியிலக்கை அடைய முடியாமல் போனது

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட் இழப்புக்கு 204 ஓட்டங்களை எடுத்து 4 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.   

அயர்லாந்து தரப்பில் ஜோஸ் லிட்டில் 3 விக்கெட்டுக்களையும், க்ரெய்க் யங் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக போல் ஸ்டெர்லிங் தேர்வு செய்யப்பட்டார்

இவ்விரு அணிகளுக்குமிடையிலான 2ஆவது டி20 போட்டி பாஸ்ட்ரேவில் நாளை மறுதினம் (18) நடைபெறவுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<