விளையாட்டுத்துறை ஊழலை தடுக்கும் சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றம்

144

இந்த நாட்டின் விளையாட்டுத்துறையில் சூதாட்டம், ஆட்டநிர்ணயம், ஊழல்கள், முறைகேடுகள் உள்ளிட்ட குற்றங்களை புரிகின்றவர்களுக்கு தண்டனை வழங்கும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவினால் சமர்பிக்கப்பட்ட விசேட சட்டமூலம் பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 

பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் (11) நடைபெற்ற விசேட அமர்வின் போது இந்த சட்டமூலத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் முன்வைத்தார். இதற்கான விவாதத்தில் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் உரையாற்றியிருந்ததுடன், இறுதியில் அனைவரும் சட்டமூலத்திற்கு ஆதரவாக தமது கருத்துக்களை முன்வைத்து ஆதரவாக வாக்களித்தனர்

சூதாட்டக்காரர்களுக்கு ஆப்பு வைக்கும் புதிய சட்டமூலத்தை தடுக்க சதி – ஹரீன்

பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு ………..

இந்த சட்டமூலத்தின் 11வது பிரிவின் முதலாம் பந்தியில் விளையாட்டுக்களில் ஆட்ட நிர்ணயம், ஊழல், சட்டவிரோதமான சூழ்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் சட்ட விரோதமான பந்தயம் பிடித்தல் போன்ற குற்றங்கள் எவை என்பது தொடர்பில் வரைவிலக்கணம் வழங்கப்பட்டுள்ளது

அதேபோல, வேறு குற்றமொன்றுக்காக தகவல்களை வெளியிடுதல், விசாரணையொன்று தொடர்பில் ஒத்துழைப்பு வழங்காமை மற்றும் தனிநபர் குழுவொன்றினால் செய்யப்படும் தவறு என்பன இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன்படி இந்த சட்டத்தின் கீழ் எதாவது தவறு தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வர்த்தமானியில் வெளியிடப்படும் ஒழுங்குவிதிக்கு அமைய, பொலிஸ் திணைக்களத்துக்கு பொறுப்பான அமைச்சரினால் தீர்மானிக்கப்படும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் பதவிக்குக் குறையாத பதவி அந்தஸ்து கொண்ட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட, சுயாதீன விசேட விசாரணை அலகொன்று நிறுவப்படும்

மேலும், இந்த சட்டத்திற்கு அமைய விளையாட்டு கழகங்களின் வருடாந்த பொதுக்கூட்டத்தை நடத்தும் போது வாக்களிக்க தகுதியுடைய உறுப்பினர்களின் பட்டியலொன்றை குறித்த கூட்டத்தை கூட்டுவதற்கு குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்னர் அதன் உறுப்பு சங்கங்களுக்கு வழங்கவேண்டும்.

அத்துடன், கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கு அறிக்கையொன்றை குறிப்பிட்ட தலைவர், செயலாளர் மற்றும் பொருலாளர் அகியோரினால் அத்தாட்சிப்படுத்தி அதன் பிரதிகளை அதன் உறுப்பு சங்கங்களுக்கு வழங்க வேண்டும்.  

மேலும், கணக்காய்வாளர் நாயகத்தால் கணக்காய்வு செய்யப்படும் வருடாந்த கணக்கறிக்கை இறுதி கணக்கறிக்கையாக கருதப்படும் எனவும் இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் விளையாட்டுத்துறையில் குற்றம் புரிகின்றவர்களுக்கு தண்டனை வழங்குகின்ற முதல் ஆசிய நாடென்ற பெருமை இலங்கைக்கு கிடைத்துள்ளது.  

அதுமாத்திரமின்றி, சூதாட்டம் மற்றும் ஆட்டநிர்ணயம் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களுக்கு உயர்நிதீமன்றத்தில் மேற்கொள்ளப்படுகின்ற வழக்கு விசாரணைகளின் பிறகு 100 மில்லியன் ரூபாவுக்கு அதிகரிக்காத வகையில் தண்டப்பணம் அல்லது 10 வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனை வழங்க முடியும்

அத்துடன், தகவல்களை மறைப்பவர்களுக்கு 3 இலட்சம் ரூபா அபாரதத்துடன், 2 வருடங்கள் சிறைத் தண்டணை விதிக்கப்படும். அதேநேரம், குறித்த குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குகின்ற நபருக்கு சன்மானமும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம், முன்னாள் பிரதி சபாநாயகரான திலங்க சுமதிபால முன்வைத்த திருத்தங்களை விளையாட்டுத்துறை அமைச்சர் நிராகரித்தார்.

SAG செல்லும் இலங்கை அணியின் தலைமை அதிகாரியாக மேஜர் தம்பத் நியமனம்

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டு மற்றும் பொக்கஹரா……….

அத்துடன், இந்த சட்டமூலத்தின் முக்கியத்துவத்தைக் கருத்திற் கொண்டு விசேட பாராளுமன்ற அமர்வொன்றைக் நடத்த முன்வந்த சபாநாயகருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.  

முன்னதாக, கடந்த 07ஆம் திகதி குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்த போதிலும், பாராளுமன்ற அலுவலக அதிகாரிகளின் கவனக்குறைவினால் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இருந்து அது நீக்கப்பட்டதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ குற்றம் சுமத்தியிருந்தார்.

இதனையடுத்து, குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பை பிரதமர் விடுத்த விசேட வர்த்தமானி அறிக்கைக்கு அமைய நேற்று முன்தினம் (11) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது

>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<