“மெதிவ்ஸை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்” – மிக்கி ஆர்தர்

England tour of Sri Lanka 2021

1123

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை அணி தோல்வியடைந்திருந்த போதும், அஞ்செலா மெதிவ்ஸின் துடுப்பாட்டத்தை பார்த்து இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

அஞ்செலோ மெதிவ்ஸ் முதல் இன்னிங்ஸில் நல்ல ஆரம்பத்தை பெற்றிருந்த போதும், அவரால் ஓட்டங்களை குவிக்க முடியவில்லை. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் மெதிவ்ஸின் துடுப்பாட்டம், அவருடைய அனுபவத்தை வெளிக்காட்டியிருந்தது.

இலகு வெற்றியினைப் பதிவு செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி 

குறிப்பாக லஹிரு திரிமான் அணியின் ஓட்ட எண்ணிக்கையை இரண்டாவது இன்னிங்ஸில் வலுப்படுத்தி சதம் அடித்திருந்தார். இதன்பின்னர், இன்னிங்ஸ் தோல்வியை தடுக்க போராடிய மெதிவ்ஸ், 219 பந்துகளில் 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, கடைசி விக்கெட் வரையிலும் போராடியிருந்தார்.

மெதிவ்ஸின் இந்த அனுபவ துடுப்பாட்டமானது, சுழல்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் எவ்வாறு துடுப்பெடுத்தாட வேண்டும் என்பதை வெளிக்காட்டியதாக மிக்கி ஆர்தர் குறிப்பிட்டார். அடுத்தப்போட்டியில் அனுபவ வீரர்கள் எவ்வாறு துடுப்பெடுத்தாட வேண்டும் என்பதை ஊடகவியலாளர் ஒருவர், ஊடக சந்திப்பில் வினவிய சந்தர்ப்பத்திலேயே மிக்கி ஆர்தர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “நான் துடுப்பாட்ட வீரர்கள் முதல் இன்னிங்ஸில் மிகச்சிறந்த ஓட்ட எண்ணிக்கையை பெறவேண்டும் என நினைக்கிறேன். ஆரம்பத்தில் ஆடுகளம் கடினமாக இருக்கும். ஆனால், துடுப்பாட்ட வீரர் ஓட்டங்களை பெற ஆரம்பித்துவிட்டால், ஜோ ரூட் போன்று ஓட்டங்களை பெற இலகுவாக அமையும்.

இரண்டாவது இன்னிங்ஸில் அஞ்செலோ மெதிவ்ஸின் துடுப்பாட்டம், இந்த ஆடுகளங்களில் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. சுழல் பந்துவீச்சுக்கான ஆடுகளங்களில் அவரது ஆட்டமுறை, ஓட்டங்களை பெறும் விதம் என்பவற்றை இளம் வீரர்கள் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். 

லஹிரு திரிமான்ன சதம் பெற்றுள்ளார். அதேபோன்று குசல் பெரேரா மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் 60 ஓட்டங்கள் அளவில் பெற்றுள்ளனர். இவர்கள், அடுத்த போட்டியில் சதங்களை பெறவேண்டும்” என மிக்கி ஆர்தர் குறிப்பிட்டார்.

அதேநேரம், இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்து மேலும் கருத்து வெளியிட்ட மிக்கி ஆர்தர், சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில், அணியின் கட்டமைப்பை உருவாக்கிவருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

“நான் இலங்கை அணியுடன் நீண்ட நாட்களாக இருப்பது போன்று தோன்றும். ஆனால், இது என்னுடைய மூன்றாவது தொடர். வீரர்களை எவ்வாறு அழுத்தமான தருணங்களில் பிரகாசிக்க வைப்பது மற்றும் எவ்வாறு இதுபோன்ற ஆடுகளங்களில் டெஸ்ட் அணியின் கட்டமைப்பு, திட்டங்களை உருவாக்குவது என்பது தொடர்பில் சிந்திக்கிறேன்.

முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது மற்றும் நான்காவது நாட்களில் வீரர்கள் விளையாடிய விதம் தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். முதல் நாளில் விளையாடியது போன்று ஒரு டெஸ்ட் போட்டியை விட்டுக்கொடுக்க முடியாது. 

குறிப்பாக துடுப்பாட்டத்தில் வீரர்கள் ஆடுகளத்திற்கேற்ப, துடுப்பாட்ட முறையை இரண்டாவது இன்னிங்ஸில் கையாண்டமை மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால், முதல் இரண்டு நாட்களில் விளையாடியது போன்று, அடுத்துவரும் போட்டிகளில் விளையாடினால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 22ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<