யாழ் மத்திய கல்லூரியில் கலாநிதி எதிர்வீரசிங்கம் பெயரில் புதிய பார்வையாளர் அரங்கு

574

இரு நுற்றாண்டு கடந்த வரலாற்றினைக் கொண்டிருக்கும் வடக்கின் ஓரேயொரு விளையாட்டுத்துறையை முதன்மைப்படுத்தியிருக்கும் பாடசாலையான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில், ஒலிம்பிக் வீரரான கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்களது பெயரில் பார்வையாளர் அரங்கு இன்றைய தினம் (14) கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.  இந்த திட்டத்திற்கு கல்வி அமைச்சினால் “அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டிருந்தது.

திறப்பு விழா நிகழ்விற்கு கல்வித்துறை சார் அதிகாரிகள், அயற் பாடசாலைகளின் அதிபர்கள், மத்திய கல்லூரியின் ஆசிரியர்கள், இந்நாள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.

விழாவின் புகைப்படங்களைப் பார்வையிட…

Photos : Opening Ceremony of Dr. N. Ethirveerasingam Pavilion

ThePapare.com | Kanesalingam Renusan | 15/02/2019 Editing and re-using images without permission of ThePapare.com will…

எதிர்வீரசிங்கம் அவர்கள் பதின்ம வயதிலேயே  1952 ஆம் ஆண்டு ஹெல்சிங்கி ஒலிம்பிக்கில் பங்குபற்றியதுடன், 1956 மெல்பேர்ன் ஒலிம்பிக்கிலும் பங்குபற்றியிருந்தார்.

1954 இல் மனிலாவில் தனது ஆசிய போட்டிகளுக்கான பயணத்தினை ஆரம்பித்த எதிர் பதங்கங்களை வென்றவர்கள் பாய்ந்த அதே உயரத்தை (1.95m) பாய்ந்திருந்தபோதும் அதிக தவறுகள் இருந்தமையால் பதக்கம் அந்த வருடத்தில் தவறியிருந்தது. அவர்கள் 1958 டோக்கியோ நகரில் தங்கம் வென்றிருந்தார். இது சர்வதேச அரங்கில் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற முதலாவது தங்கப் பதக்கமாகவும் அமைந்திருந்தது. 1962 இல் ஜகார்த்தா நகரிலும் இவர் வெள்ளிப் பதக்கத்தினை வென்றிருந்தார்.

வெறுமனே ஓர் உயரம் பாய்தல் வீரராக மட்டுமல்லாது இவர் கால்லூரிக் காலங்களில் கிரிக்கெட் வீரரும் கூட, ஐந்தாண்டுகள் UNESCO இற்காக நைஜிரியாவில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தினை நிறுவுவதற்கு பணியாற்றிய எதிர்வீரசிங்கம் அவர்கள், சியாரலியோன், பப்புவா நியூ கைனியா ஆகிய நாடுகளிலும் விரிவுரையாளராக தனது பணியினை தொடர்ந்திருந்தார்.

இரண்டு வருடங்கள் உயரம் பாய்தலிற்காக கிரிக்கெட்டை தவறவிட்டிருந்த எதிர் அவர் 1953 ஆம் ஆண்டு மத்திய கல்லூரி அணிக்கு ஆரம்ப வேகப்பந்துவீச்சாளராக திரும்பியிருந்தார்.

பப்புவா நியூ கைனியாவில் பணியாற்றுகையில் தேசிய அணிக்காகவும் சில காலம் விளையாடியிருந்தார்.  இன்று தனது 84 ஆவது வயதில் கலாநிதி எதிர்வீரசிங்கம் அவர்கள் வருடத்தின் 06 மாத காலத்தினை அமெரிக்காவில் குடும்பத்துடனும், எஞ்சிய 06 மாதங்களினை இலங்கையில் தன்னார்வ பணிகளுக்காகவும் செலவிட்டு வருகின்றார்.

இவர் தேசிய வீரர் மஞ்சுள குமார விஜயசேகர உள்ளிட்ட பல தேசிய வீரர்களுக்கு இன்றும் அமெரிக்காவிலும் இலங்கையிலும் உதவி புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கலாநிதி எதிர்வீரசிங்கம் அவர்களது முன் மொழிவின் பெயரில், இலங்கை அரசாங்கத்தினது நிதியுதவியுடன் பார்வையாளர் அரங்கு, வீரர்கள் ஓய்வு அறைகளை உள்ளடக்கியதாகவே இந்த அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

“இரு நுற்றாண்டு கடந்த வரலாற்றை உடைய பாடசாலை ஒரு  நூற்றாண்டு கடந்து இடம்பெற்றிக்கொண்டிருக்கும் பெரும் சமரிற்கு சொந்தக்காரர்களாக இருக்கக்கூடிய எமது கல்லூரிக்கு இந்த பார்வையாளர் அரங்கென்பது மிகவும் காலந்தாழ்த்தியே கிடைக்கப்பெற்றிருக்கின்றது.

இலங்கை வீரர்கள் எவரும் ஊழல் மோசடியில் ஈடுபடவில்லை – ஹரீன் பெர்னாண்டோ

“கல்லூரியின் அடையாளமாக இன்றும் சர்வதேசத்தில் ஜொலித்துக்கொண்டிருக்கின்ற கலாநிதி. எதிர்வீரசிங்கம் அவர்கள் முன்னதாக 2013 ஆம் ஆண்டில் இந்த மைதானத்தை புனரமைத்து தந்திருந்தார். அவருடைய முன்மொழிவுடன் ஆரம்பிக்கப்பட்டு பொறியியலாளர் வாசுதேவன் அவர்களது தலைமையில் இந்த திட்டம் இன்று நிறைவுற்றிருப்பதில் மிக்க மகிழ்ச்சி. அதேவேளை கலாநிதி எதிர்வீரசிங்கம் ஒரு ஒலிம்பிக் வீரர், ஆசிய சம்பியன் தற்காலத்தில் பல்வேறு சமூக பணிகளில் முன்னின்று உழைத்துக்கொண்டிருப்பவர், இவரது பெயரை இந்த அரங்கிற்கு சூட்டுவதில் பெருமை கொள்கிறது கல்லூரிச் சமூகம்”  என கல்லூரி அதிபர் எஸ் எழில்வேந்தன் அவர்கள் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் எங்களுடைய இரண்டு வீரர்கள் இலங்கை தேசிய இளையோர் கிரிக்கெட் அணியினை பிரதிநிதித்துவம் செய்திருக்கின்றனர். அவர்கள் மேலும் சோபிப்பதற்கும் மேலும் பல வீரர்கள் சர்வதேச களங்களை நோக்கி பயணிப்பதற்கும் எங்களிடம் புற்தரை ஆடுகளம் (Turf pitch) இல்லை என்பது பெருந்தடையாக அமைந்துள்ளது. சர்வதேச போட்டிகள் அத்தனையும் புற்தரை ஆடுகளங்களிலேயே இடம்பெறுகின்றன. எனவே, எங்களுடைய கிரிக்கெட்டின் தரத்தினை உயத்திக் கொள்வதற்கு புற்தரை ஆடுதளம் எங்களுடைய ஆரோக்கியமான முன்னேற்றத்திற்கு அவசிய தேவையாக இருக்கின்றது என்ற கோரிக்கையினை ராஜாங்க அமைச்சரிடம் முன்வைத்திருந்தார்.

“வட புலத்து மாணவர்களது திறன்களை வெளிப்படுத்துவதற்கு தேவையான நவீன வசதிகளை  கல்வி அமைச்சு செய்து தரவேண்டும். அதன் மூலம் எங்கள் பிரதேசத்து வீரர்களும் சர்வதேச அரங்கினை அலங்கரிக்க வழி அமைக்க வேண்டும்.” என தனது வேண்டுகோளை முன்வைத்திருந்தார் யாழ் மாநகர சபை மேஜர் இம்மானுவேல் ஆர்னோல்ட்.

நிகழ்வின் நாயகன் கலாநிதி எதிர்வீரசிங்கம் அவர்கள் “நான் அன்று உயரம் பாய்தலை ஆரம்பித்தது மணல் தளத்திலேயே, ஒரு காலத்தில் பாய்வதற்குரிய பாதணிகள் கூட எனக்கு இருக்கவில்லை, நாங்கள் இன்றும் கூட எது இருக்கின்றதோ அதனை பயன்படுத்தி எவ்வளவு தூரம் சாதிக்கலாம் என்பதனையே சிந்திக்க வேண்டும்.

“ஓடி விளையாடு பாப்பா – நீ

கூடி விளையாடு பாப்பா

ஓய்ந்திருக்கலாகாது பாப்பா…”  இந்த வரிகளே எனது வாழ்வில் சகல துறைகளிற்கும் அடிப்படைகளாக இருந்தன.

நான் ஒலிம்பிக்கிற்கு சென்றது கப்பல் பயண காலம், அன்று நான் அதிக விடயங்களை அறிந்தது புத்தகங்களில் அல்ல, மைதானத்திலும், பயணம் செய்த நகரங்களிலும் அந்நகரத்து மக்களிடமும் இருந்தே.

ஆசிரியர்கள் எங்களுக்கு பாடத்தை மட்டுமே போதிக்கவில்லை அனுபவங்களையும் வாழ்வையும் சேர்த்தே போதித்தனர், நீங்களும் உங்கள் ஆசிரியர்களிடமிருந்து பாடங்களை மாத்திரம் எதிர்பார்க்காதீர்கள்.

மேஜர் T20 லீக்கில் அதிரடியை வெளிக்காட்டிய சதீர, சானக மற்றும் அவிஷ்க

நான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வருடத்தில் முதலில் நான் அணியில் சேர்க்கப்படவில்லை, ஆனால் அதற்காக போராடி அவர்களை சம்மதிக்க வைத்தவர் விளையாட்டு ஊடகவியலாளர்  கார்ல்ரன் செனவிரத்ன (Carlton Senevirathne) அவரை இங்கு ஞாபகப்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன். கூடி நிற்றல் என்பதற்கு ஓர் உதாரணத்தினை இது தருகிறது. நான்கு நாட்கள் இடைவெளியில் தான் எனது பெயர் அறிவிக்கப்பட்டு டோக்கியோ சென்றேன். 1958 மே மாதம் 24 ஆம் திகதி நான் தங்கப் பதக்கம் வென்றேன் அதேநாள், கொழும்பில் இனக்கலவரமும் வெடித்திருந்தது. ஒரு பக்கம் மகிழ்ச்சி மறுபக்கம் துன்பம், இவ்வாறாக அனுபவங்கள் பல உங்கள் வாழ்வில் கிடைக்கும், அதைக்கொண்டு உங்கள் வாழ்வை முன்னேற்றிக்கொள்ளுங்கள்.

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பல சந்தர்ப்பங்களில் நான் இங்கு வேலையின்றியே இருந்திருக்கின்றேன். தொழிலை எதிர்பார்த்து நீங்கள்  கல்வியை தொடங்காதீர்கள் அவ்வாறே முடிக்கவும் செய்யாதீர்கள்“ என இளைய சமுதாயத்தினை நோக்கி தனது அனுபவ அறிவுரையை விதைத்தார் கலாநிதி எதிர்வீரசிங்கம் அவர்கள்.

அதேவேளை, தான் சுயசரிதை புத்தகமொன்றினை எழுதப்போகின்றேன் என்ற மகிழ்வான செய்தியையும் தனது கல்லூரி மைதானத்தில் வெளியிட்டார்.

“ஓடி விளையாடு தாத்தா

ஓய்ந்திருக்கலாகாது தாத்தா

கூடி விளையாடு தாத்தா….”  என்ற நிலையில் தனது வாழ்க்கைப்பயணம் இன்று தொடர்வதாக கூறி விடைபெற்றார் எதிர்வீரசிங்கம் அவர்கள்.

தொடர்ந்து உரையாற்றிய ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் சாதனையாளர் எதிர்வீரசிங்கத்தினை தொடர்ந்து எங்கள் வீரர்களும் சர்வதேச அரங்கை அலங்கரிக்க வேண்டும்.

“போர்ச் சூழல் காரணமாக நாங்கள் இன்று வள ரீதியாக பின்தங்கியிருக்கின்றோம், இதுவே எம்மை இன்று கல்வி மற்றும் விளையாட்டு ரீதியாக பின்னிலையில் வைத்திருக்கின்றது. நிச்சயமாக நான் கல்வியமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினூடாக இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டதும் இந்த வளங்களை மேம்படுத்துவேன்“ என உறுதியளித்திருந்தார்.

ஊக்கமருந்து சர்ச்சைக்கு முகங்கொடுத்துள்ள மற்றுமொரு இலங்கை வீரர்

நிகழ்வில் கராத்தே கண்காட்சி, உதைப்பந்தாட்ட போட்டி உள்ளிட்ட நிகழ்வுகள் ஓழுங்கு செய்யப்பட்டிருந்ததுடன். இலங்கை இளையோர் தேசிய அணியினை பிரதிநிதித்துவம் செய்திருந்த விஜயகாந்த் வியாஸ்காந், செல்வராசா மதுஷன் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<