ஊக்கமருந்து சர்ச்சைக்கு முகங்கொடுத்துள்ள மற்றுமொரு இலங்கை வீரர்

109

இலங்கை வீரர்கள் மத்தியில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனை அண்மைக்காலமாக பரவி வருகின்றதை அறிய முடிகின்றது. அந்த வரிசையில், தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் தேசியமட்டத்தில் பல வெற்றிகளைப் பெற்றுக்கொண்ட குத்துச்சண்டை வீரர் ஒருவர் சிக்கியுள்ளார்.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் நடைபெற்ற க்ளிபர்ட் கிண்ண குத்துச்சண்டைப் போட்டியில் 52 கிலோ கிராம் எடைப் பிரிவில் MAS குத்துச்சண்டை அணிக்காக விளையாடி சம்பியன் பட்டத்தை வென்ற  இந்திக பெரேரா என்ற வீரரே இவ்வாறு ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஊக்கமருந்து குற்றச்சாட்டில் சிக்கிய இளம் வீராங்கனை செல்ஸி மெலனி

இலங்கையின் வளர்ந்துவரும் இளம் மெய்வல்லுனர் ..

குறித்த வீரரிடம் இருந்து போட்டியின் போது சேகரிக்கப்பட்ட A மாதிரி சிறுநீரில் பொல்டினொன் (Boldenone) மற்றும் மெடபொலைட் (Metabolite) என்ற தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து கலந்திருப்பது இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவருக்கு தற்காலிகத் தடை விதிக்க இலங்கை குத்துச்சண்டை சம்மேளனமும், இலங்கை ஊக்கமருந்து தடுப்பு நிறுவனமும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிலையில், ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரம் தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக நேற்று (14) இலங்கை ஊக்கமருந்து தடுப்பு நிறுவனத்துக்குச் சென்றிருந்தார்.

ஊக்கமருந்து தடுப்பு நிறுவனத்தின் ஒழுக்காற்று குழுவின் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது, தனக்கெதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்திருந்ததுடன், B மாதிரி பரிசோதனை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.  

இதனிடையே, குறித்த வீரரின் B மாதிரி பரிசோதனை எதிர்வரும் மார்ச் மாதம் 14 அல்லது 15 ஆம் திகதிகளில் இந்தியாவில் உள்ள பரிசோதனைக் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக இலங்கை உக்கமருந்து தடுப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, B மாதிரி பரிசோதனையின் பிறகு ஊக்கமருந்து இருப்பது கண்டறியப்பட்டால் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, இந்திக பெரேராவின் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கின்ற இலங்கையின் முன்னாள் குத்துச்சண்டை வீரர்களில் ஒருவரான மஞ்சு வன்னியாரச்சியும், கடந்த 2010 ஆம் ஆண்டு இதேபோல ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி, பொதுநலவாய விளையாட்டு விழா தங்கப் பதக்கத்தினை இழந்திருந்ததுடன், 2 வருட போட்டித் தடையும் விதிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தி வீரரோ அல்லது அதற்கு உதவியாக இருந்த பயிற்றுவிப்பாளரோ நிரூபணமானால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் போட்டித்தடை விதிப்பதற்கு இலங்கை குத்துச்சண்டை சம்மேளனம் தீர்மானித்திருந்தது.

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய இலங்கை கபடி வீரர்கள்

கடந்த வருடம் பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு …

இதன்படி, கடந்த இரண்டு மாதங்களில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் ஐந்தாவது வீரராக இவர் இனங்காணப்பட்டார்.

முன்னதாக, கடந்த வருடம் பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவின் போது இலங்கை கபடி அணிக்காக விளையாடிய வீரர்கள் இருவர், இலங்கையின் அதிசிறந்த மெய்வல்லுனர்களில் ஒருவரான 400 மீற்றர் ஓட்ட வீரர் காலிங்க குமாரகே மற்றும் இலங்கையின் வளர்ந்துவரும் இளம் மெய்வல்லுனர் வீராங்கனையான செல்ஸி மெலனி பென்தரகே ஆகியோர் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் இவ்வாறு தற்காலிக தடைக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<