இறுதிப் பந்து வரை போராடி இலங்கையிடம் மடிந்தது மேற்கிந்திய தீவுகள்

1140
5th Match: Sri Lanka v West Indies

இறுதிப் பந்து வரை கிரிக்கெட் ரசிகர்களை பதட்டத்தில் வைத்திருந்த இந்த விறுவிறுப்பான போட்டியில் இலங்கை அணி ஒரே ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியது.

ஜிம்பாவேயில் நடைபெறுகின்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் இன்று இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும் என்ற நிலையில் களமிறங்கின. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 330 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா மூன்றாவது ஓவரிலேயே 7 ஓட்டங்களுக்கு ஷனோன் கேப்ரியலின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்ததும் இலங்கை அணி சற்று தடுமாறியது. எனினும் இரண்டாம் விக்கெட்டுக்காக இணைந்த நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தனஞ்சய டி சில்வா ஜோடி இணைப்பாட்டமாக 105 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

தனஞ்சய டி சில்வா 58 ஓட்டங்களுடன் (7 பவுண்டரிகள்) ஆட்டமிழந்து செல்ல, அதனைத் தொடர்ந்து களமிறங்கிய குசல் மென்டிஸ் நிரோஷன் டிக்வெல்ல உடன் இணைந்து மற்றுமொரு சிறந்த இணைப்பாட்டமாக 107 ஓட்டங்களை தங்களுக்கிடையே பகிர்ந்து கொண்டனர். நிரோஷன் டிக்வெல்ல தனது முதலாவது சதத்தினை பெற்றுக்கொள்ள இருந்த வேளை ஜேசன் ஹோல்டரின் பந்து வீச்சில் 94 ஓட்டங்களுக்கு (7 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) lbw முறையில் துரதிர்ஷ்டமாக ஆட்டமிழந்து சென்றார்.

தொடர்ந்து இன்றைய போட்டிக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட ஷெஹான் ஜயசூரிய வெறும் 9 ஓட்டங்களுக்கு கிரேக் பரத்வைட்டின் பந்து வீச்சில் போல்ட் ஆனார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக துடுப்பாடிகொண்டிருந்த குசல் மென்டிசும் 94 (7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) ஓட்டங்களுடன் ஏஷ்லி நர்சின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அணித்தலைவர் உபுல் தரங்கவின் 26 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள ஏனையோர் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து 331 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஜொன்சன் சார்ல்ஸ் மற்றும் எவின் லுவிஸ் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சிறந்த ஆரம்பத்தினைப் பெற்றுக் கொடுத்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய ஏவின் லெவிஸ் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை அதிரடியாகவிளாசி 122 பந்துகளில் 148 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அவர் இலங்கை அணிக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்த போதிலும்40.3 ஓவரின்போது குசல் மென்டிசினால் ரன் அவுட் செய்யப்பட்டார்.

அதன் பின்னர் இறுதி ஓவர்களில் ஜேசன் ஹோல்டர் அருமையாக துடுப்பாடி போட்டி முடியும் வரை ஆட்டமிழக்காமல் 45ஓட்டங்களை பெற்று களத்தில் இருந்தார்.

இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 329 ஓட்டங்களை மாத்திரமே பெற்று ஒரு ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை அணி – 330/7 (50) – குசல் மென்டிஸ் 94(73), நிரோஷன் டிக்வெல்ல 94(106), தனஞ்சய டி சில்வா 58(60), உபுல் தரங்க 26(19), சசித் பத்திரன 24(16), ஜேசன் ஹோல்டர் 57/3(10), ஷனோன் கேப்ரியல் 29/1(5), கிரேக் பரத்வைட் 56/1(10)

மேற்கிந்திய தீவுகள் அணி – 257/8(50) – எவின் லுவிஸ் 148(122), ஜொன்சன் சார்ல்ஸ் 26(24), ஷாய் ஹோப் 25(32), கிரேக் பரத்வைட் 16(33), நுவன் குலசேகர 73/2(10), சுரங்க லக்மால் 67/2(10), நுவன் பிரதீப் 65/1(10)

போட்டியின் ஆட்ட நாயகன் : குசல் மென்டிஸ்

முக்கோண சுற்றுத்தொடரின் 6ஆவது போட்டி நவம்பர் மாதம் 25ஆம் திகதி ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் புலவாயோவில் நடைபெறும்.