இந்த பருவகாலத்திற்கான டிவிஷன் 1 (பிரிவு 1) கால்பந்து சுற்றுத் தொடரின் யாழ்ப்பாணம், அரியாலை உதைபந்தாட்டப் பயிற்சி நிலைய மைதானத்தில் இடம்பெற்றிருந்த ஓல்ட் மெசனோடியன்ஸ் கால்பந்துக் கழகத்திற்கு எதிரான போட்டியில் முதல் பாதி கோல்களுடன் யாழ் சென். மேரிஸ் விளையாட்டுக் கழக அணி வெற்றிபெற்றது.

ஏற்கனவே, படோவிட்ட யுனைடட் அணிக்கெதிரான வெற்றியுடன் ஓல்ட் மெசனோடியன்ஸ் அணியும், ரட்ணம் அணியுடனான போட்டியில் 1-0 என்ற தோல்வியுடன் சென் மேரிஸ் அணியும் களங்கண்டிருந்தன.

போராட்டத்தின் பின் சென் மேரிஸ் அணியை வீழ்த்தியது ரட்ணம்

களனிய கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற இவ்வருடத்திற்கான டிவிஷன் I ( பிரிவு 1) கால்பந்து..

போட்டியின் ஆரம்ப நிமிடங்கள் முதலே சென். மேரிஸ் போட்டியில் ஆதிக்கஞ்செலுத்த ஆரம்பித்தனர். போட்டியின் 14ஆவது நிமிடத்தின் ஓல்ட் மெசனோடியன்ஸ் அணியின் அமல் மென்டிசின் முறையற்ற ஆட்டம் காரணமாக மஞ்சள் அட்டை மூலம் எச்சரிக்கப்பட்டார்.

போட்டியின் 19ஆவது நிமிடத்தில் மதிவதனன் தனித்து காவிச்சென்ற பந்தினை தடுப்பதற்கு மெசனோடியன்ஸ் அணியின் நிஷான் மதுசங்க முன்னேறி வருகையில், மதிவதனன் பந்தினை தலைக்கு மேலால் உதைந்து கோலாக்கினார்.

எனவே, முதல் 20 நிமிடங்களுக்குள் யாழ் தரப்பினர் தமது சொந்த மைதான ஆட்டத்தில் முன்னிலை பெற்றனர்.

தொடர்ந்தும் ஆட்டத்தினைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சென் மேரிஸ் அணியினருக்கு 36ஆவது நிமிடத்தில் அணித் தலைவரும், 23 வயதின் கீழ் தேசிய அணியின் முன்னாள் வீரருமான நிதர்சன் லாவகமான முறையில் அணிக்கான இரண்டாவது கோலினையும் பெற்றுக்கொடுத்தார்.

தொடர்ந்து இரு அணியினரும் முதல் பாதியில் எஞ்சியிருந்த நேரங்களில் கோலுக்காக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் நிறைவுற, இரண்டு கோல்களால் சென் மேரிஸ் வீரர்கள் முன்னிலை பெற்றனர்.

முதல் பாதி: சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் 2-0 ஓல்ட் மெசனோடியன்ஸ் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதியில் ஆரம்பம் முதலே வேகமாக ஆடுவதற்கு ஆரம்பித்தனர் ஓல்ட் மெசனோடியன்ஸ்.

சற்று நேரத்தில் நிதர்சனால் அனுப்பப்பட்ட பந்தினை மதிவதனன் கோலாக்கத் தவறினார்.

மறுமுனையில் ஓல்ட் மெசனோடியன்ஸின் தரங்க பண்டார, தர்மபிரிய க்கிரேரோ ஆகியோர் தமது முதல் கோலினை பதிவு செய்வதற்காகப் போராடிக்கொண்டிருந்தனர். நீண்டகால உபாதையின் பின்னர் அணிக்கு திரும்பியிருக்கும் அருள்ராசா யூட் மற்றும் மதிவதனன் ஆகியோரது தொடர்ச்சியான முயற்சிகள் துஷ்மந்த க்குரேற, சவிந்த பெர்ணான்டோ ஆகியோரால் தடுக்கப்பட்டன.

தரங்க பண்டார தனக்கு கிடைத்த கோல் வாய்ப்பினை நேரடியாக கோல் காப்பாளரின் கைகளுக்குள் உதைந்து வீணாக்கினார்.

டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் ஜாவா லேனிற்கு முதல் வெற்றி

பொலிஸ் விளையாட்டுக் கழகத்தை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியிருக்கும் ஜாவா லேன்..

அருள்ராசா யூட் மறுமுனையில் காத்திருக்க பந்தினை கோல் காப்பாளரை நோக்கி உதைந்து வாய்ப்பினை வீணாக்கினார் மதிவதனன்.

தொடர்ந்தும் இறுதி முயற்சியாக, மதிவதனன் உள்ளனுப்பிய பந்தினை கோல்காப்பாளர் தடுக்க, கோலேதுமின்றி நிறைவுற்றது இரண்டாம் பாதி.

முழு நேரம்: சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம் 2-0 ஓல்ட் மெசனோடியன்ஸ் விளையாட்டுக் கழகம்

ThePapare.com ஆட்ட நாயகன் – அன்டன் சார்ல்ஸ் (சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம்)

போட்டியின் பின்னர் ஓல்ட் மெசனோடியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் லக்ஷ்மன் றோகித THEPAPARE.COM இற்கு கருத்து தெரிவிக்கையில் “இன்றைய போட்டி இரு அணியினருக்கும் முக்கியமானதாக அமைந்திருந்தது. எதிரணியினர் சிறப்பாக விளையாடியிருந்தனர். அத்தோடு போட்டியானது  சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. அடுத்துவரும் போட்டிகளில் வெற்றியைப் பெறுவதற்கு எதிர்பார்க்கின்றோம்” என்றார்.

சென் மேரிஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் சுரேந்திரன் கருத்து தெரிவிக்கையில் “இன்றைய போட்டியை 2-0 என வெற்றிபெற்றிருக்கின்றோம். மேலும் பல கோல்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருந்தபோதும் அவற்றைத் தவறவிட்டுள்ளோம். குறுகிய இடைவெளியில் போட்டிகளில் பங்குபற்ற வேண்டியிருப்பது பயிற்சிகளை மேற்கொள்வதற்கு சற்று கடினமாக உள்ளது. ரட்ணம் அணியுடனான போட்டியை விடவும் வீரர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர். இனிவரும் போட்டிகளிலும் மேலும் முன்னேற்றம் காண்போம்” எனத்தெரிவித்தார்.

கோல் பெற்றவர்கள்

சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம் – மதிவதனன் 19′, நிதர்சன் 36’

மஞ்சள் அட்டைகள் 

சென்.மேரிஸ் விளையாட்டுக் கழகம் – கபில்ராஜ் 35′, அன்ரனி ரெக்னோ 42′

ஓல்ட் மெசனோடியன்ஸ் விளையாட்டுக் கழகம் – M மென்டிஸ் 14′, தரங்க பண்டார 20′