FIFA உலகக் கிண்ணம்; டென்மார்க் வீரர்களின் மனைவி, காதலிக்கு தடை

FIFA World Cup 2022

209

இந்த ஆண்டு நடைபெறவுள்ள FIFA உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கு டென்மார்க் கால்பந்து அணி வீரர்களின் மனைவி மற்றும் காதலிகளை வீரர்கள் தம்முடன் கட்டாருக்கு அழைத்துச் செல்வதற்கு டென்மார்க் கால்பந்து சங்கம் தடை விதித்துள்ளது.   

கட்டாரில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள கால்பந்து உலகக் கிண்ணத் தொடருக்கான அரங்குகளின் நிர்மானப் பணிகளின் போது பணியாற்றிய தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களில், 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு 6500 பேர் உயிரிழந்துள்னர் என பிரிட்டனின் கார்டின் பத்திரிகை ஆய்வு அறிக்கையொன்றை கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தது.

குறிப்பாக, தொழிலாளர்களின் மரணங்கள் தொடர்பாக கட்டார் போதியளவு தகவல்களை வெளியிடவில்லை என சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் குற்றம் சுமத்தியிருந்தது. எனினும், குறித்த குற்றச்சாட்டை கட்டார் உலகக் கிண்ண ஏற்பாட்டுக் குழு நிராகரித்தது.

எவ்வாறாயினும், கட்டாரில் மனித உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் தமது எதிர்ப்பை வெளியிடும் வகையில், இம்முறை கால்பந்து உலகக் கிண்ணத்தில் டென்மார்க் வீரர்கள் தம்முடன் தமது குடும்பத்தினரை அழைத்துச் செல்ல முடியாது என அந்நாட்டு கால்பந்து சங்கம் தடை விதித்துள்ளது.

பொதுவாக சர்வதேச கால்பந்து போட்டிகளின் போது வீரர்கள் அவர்களின் மனைவி அல்லது காதலி, குழந்தைகளை அழைத்துச் செல்வது வழக்கம்.  எனவே, கடந்த காலங்களைப் போல இந்த ஆண்டு FIFA உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றுள்ள பல நாடுகள் தமது வீரர்களுடன் அவர்களின் குடும்பங்களும் கட்டார் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளன.

எனினும், டென்மார்க் வீரர்கள் தம்முடன் குடும்பத்தினரை கட்டார் அழைத்துச் செல்வதற்கு டென்மார்க் கால்பந்து சங்கம் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பில் டென்மார்க் கால்பந்து சங்கத்தின் செய்தி தொடர்பாளர் கோபன்ஹேகன், டெய்லி மிர்ரருக்கு வழங்கிய செவ்வியில் கருத்து தெரிவிக்கையில்,

“கட்டார் உலகக் கிண்ணத் தொடருக்கான பயணத்தை குறைக்க டென்மார்க் கால்பந்து சங்கத்தின் பணிப்பாளர் சபை முடிவு செய்துள்ளது. கட்டாருக்கு இலாபம் ஈட்டுவதில் நாங்கள் பங்களிக்க விரும்பவில்லை. எனவே, நாங்கள் எங்கள் கட்டாருக்கான பயணங்களை முடிந்தவரை குறைத்துள்ளோம்.

இதற்கு முன் நடைபெற்ற FIFA உலகக் கிணண் கால்பந்து தொடர்களின் போது எமது வீரர்களின் மனைவிகள் மற்றும் காதலிகள் எங்களுடன் பயணம் செய்தனர். ஆனால் இம்முறை உலகக் கிண்ணத்தில் அந்தப் பயணங்களை நாங்கள் இரத்து செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, டென்மார்க் கால்பந்து சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் கட்டார் பயணங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டென்மார்க் அணி விளையாடுகின்ற தலா ஒரு போட்டியின் போது மாத்திரமே உறுப்பினர்கள் சமுகமளிக்க அனுமதிக்கப்படுவர் எனவும், ஒவ்வொரு போட்டியிலும், உறுப்பினர்களுக்கு மேல் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்டாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 2022 FIFA உலகக் கிண்ண கால்பந்து தொடரில் களமிறங்கவுள்ள டென்மார்க் அணி, உலகக் கிண்ணத்துக்கான இலச்சினை பொறிக்கப்படாத ஜேர்சியை அணியவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

2022 FIFA உலகக் கிண்ண கால்பந்து தொடர் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி முதல் டிசெம்பர் 18ஆம் திகதி வரை கட்டாரில் நடைபெறவுள்ளது. இதில் குழு D இல் இடம்பெற்றுள்ள டென்மார்க் அணி நவம்பர் 20ஆம் திகதி தனது முதல் போட்டியில் துனீசியாவுடன் மோதவுள்ளது.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<