இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய உதவிப் பயிற்சியாளர்

394

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய உதவிப் பயிற்றுவிப்பாளராக தரிந்து பெரேராவை நியமிக்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அவரது நியமனம் ஜூலை முதலாம் திகதி முதல் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் நான்காம் பிரிவு சிறப்பு பயிற்சியாளராக நியமனம் பெற்றுள்ள தரிந்து பெரேரா, அந்நாட்டின் கவுண்டி கிரிக்கெட் அணிகளில் ஒன்றான வோர்விக்ஷயர் அணியுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

வோர்விக்ஷயர் கவுண்டி அணியுடன் பணியாற்றிய காலப்பகுதியில் உயர் செயல்திறன் மையத்தின் பயிற்சியாளராக பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் அவர் கவுண்டி சம்பியன்ஷிப் தொடர், றேரயல் லண்டன் ஒருநாள் தொடர், விட்டாலிட்டி பிளாஸ்ட் T20 தொடர் மற்றும் வோர்விக்ஷயர் அகடமி ஆகியவற்றில் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.

அதுமட்டுமின்றி, அவுஸ்திரேலியாவில் நடைபெறுகின்ற பிக்பேஷ் லீக் தொடரில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் தெற்கு அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளில் ஒன்றான West End Red Backs உள்ளிட்ட பல விளையாட்டுக் கழகங்களில் அவர் பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவத்தைப் பெற்றுள்ளார்.

அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் West End Red Backs ஆகிய அணிகளுடன் அவர் பணியாற்றிய போது, களத்தடுப்பு மற்றும் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றினார். அதுமாத்திரமின்றி, 2022ஆம் ஆண்டில் இலங்கை 19 வயதின்கீழ் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இங்கிலாந்து இளையோர் லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இலங்கை அணியின் உதவிப் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.

இதேவேளை, அடிலெய்ட் பல்கலைக்கழக முதன்மை மாவட்ட மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணிபுரிந்த தரிந்து பெரேரா, 2019ஆம் ஆண்டு யோர்க்ஷயர் மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ஐக்கிய இராச்சியத்தின் லீட்ஸ் பெக்கெட் பல்கலைக்கழகத்தில் விளையாட்டுப் பயிற்றுவிப்பில் கௌரவப் பட்டம் பெற்ற தரிந்து பெரேரா, இலங்கையின் பிரதான கழகங்களில் ஒன்றான SSC மற்றும் தமிழ் யூனியன் விளையாட்டுக் கழகங்களுக்காக விளையாடியுள்ளார்.

மேலும், இங்கிலாந்தின் இரண்டாம் பிரிவு பிராந்திய கிரிக்கெட் போட்டிகளில் நொதம்டன்ஷயர் அணிக்காகவும் அவர் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<